3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விஜய் சேதுபதி, ராஜ்குமார், சுனில், அர்ச்சனா, மௌலி
தயாரிப்பு - பேஷன் ஸ்டுடியோஸ்
இயக்கம் - பாலாஜி தரணிதரன்
இசை - கோவிந்த் வஸந்தா
வெளியாகும் தேதி - 20 டிசம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 53 நிமிடம்
ரேட்டிங் - 3/5

விஜய் சேதுபதியின் 25வது படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு வெளியாகும் படம் சீதக்காதி. ஆனால், தன்னை நம்பி வரும் ரசிகர்களை விஜய் சேதுபதி இப்படி ஏமாற்றுவது நியாயமா?.

திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு தன்னை ஒரு நியாயமான மனிதராகக் காட்டிக் கொள்ளும் அவர், சீதக்காதி படத்தில் கவுரவத் தோற்றத்தில் தான் நடித்திருக்கிறேன் என மறைத்தன் காரணம் என்ன என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.

அழிந்து வரும் நாடகக் கலையை மையமாக வைத்து இந்தப் படத்தைக் கொடுத்தற்காக மட்டும் இயக்குனர் பாலாஜி தரணிதரனைப் பாராட்டலாம். விஜய் சேதுபதியின் கவுரவத் தோற்றத்தையும் கணக்கு சேர்த்துப் பார்த்தால் படத்தில் மூன்று ஹீரோக்கள்.

முதலில் விஜய் சேதுபதி, அடுத்து ராஜ்குமார், பின்னர் சுனில், இவர்கள் மீதுதான் படம் நகர்கிறது. மூன்று கட்டங்களாக நகர்கிறது படம். விஜய்சேதுபதி வரும் காட்சிகள் சீரியசாக நகர, அடுத்து படம் நகைச்சுவையுடன் நகர்கிறது. அதுவும் வழக்கமான நகைச்சுவை அல்ல, பாலாஜி தரணிதரன் முதன் முதலில் இயக்கிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் டைப் நகைச்சுவைகள். அவற்றையெல்லாம் பார்க்கும் போது இது ஏ சென்டர் ரசிகர்களுக்கான படமோ என யோசிக்க வைக்கிறது.

சிறு வயதிலிருந்தே நாடகத்தில் நடித்து வயதான பின்னும் நாடகத்தை நடத்திக் கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. மக்கள் முன்னால் நடிப்பதையே தன் குறிக்கோளாக வைத்திருப்பவர். அதனால், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையே வளர்த்துக் கொள்ளாதவர். நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மேடையிலேயே அவர் இறந்துவிடுகிறார். இறந்த பின்னும், அவர் நாடகக் குழுவினர் நாடகம் நடத்தும் போது அவர் குழுவினர்களில் யாருடைய உடலிலாவது ஆன்மாவாக இறங்கி நடிக்கிறார். அது அவரின் உதவியாளர் மவுலிக்குப் புரிகிறது. அந்த நாடகக் குழுவிலிருந்து ராஜ்குமாரை சினிமாவில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்கிறார் ஒரு இயக்குனர். அவருடைய உடலில் விஜய் சேதுபதியின் ஆன்மா இறங்கி நடிக்கிறது. தொடர்ந்து பல படங்களில் நடித்து ராஜ்குமார் பெரிய ஹீரோவாகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் ராஜ்குமாரின் உடலில் விஜய் சேதுபதியின் ஆன்மா இறங்குவது நிற்கிறது. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் முதல் முக்கால் மணி நேரக் காட்சிகள் நாடகமாகவே நகர்கிறது. விஜய் சேதுபதி நாடக நடிகர் என்பதைக் காட்டுவதற்காக தொடர்ந்து பல்வேறு நாடகங்களை 1950களில் இருந்து 2013 வரையில் நடப்பதாக துண்டு துண்டாக காட்டுகிறார்கள். அதிலும் ஔரங்கசீப் நாடகம் நீ....ண்டு கொண்டே போய் நம் பொறுமையை சோதிக்கிறது. விஜய் சேதுபதிக்கான வயதான புராஸ்தடிக் மேக்கப் குளோசப்களில் கொஞ்சம் பயமுறுத்துகிறது. முகம் பெரிதாக ஆனது போல் ஒரு தோற்றம். அதையும் மீறி தன் அக்மார்க் குரல் மூலம் தெளிவான நாடக வசனம் பேசி நம்மைக் கவர்கிறார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதிக்கு அடுத்து படத்தின் நாயகனாக மாறுபவர் ராஜ்குமார். நாடகத்திலேயே நடிக்கத் தடுமாறுபவருக்கு, சினிமாவில் நாயகனாக நடிக்க சான்ஸ். உபயம் விஜய் சேதுபதியின் ஆன்மா. தன் பேரனின் மருத்துவச் செலவுக்காக விஜய் சேதுபதியின் ஆன்மா, ராஜ்குமாருக்குள் இறங்குகிறது. அந்த மருத்துவச் செலவு முடிந்த பின்னும் தொடர்ந்து கொண்டேயிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. நடிக்கவும் வேண்டும், நடிக்காமலும் இருக்க வேண்டும் என இருக்கும் காட்சிகளில் ராஜ்குமாரின் நடிப்பு சிறப்பு. அதிலும் நீண்ட நாள் கழித்து காதலியைப் பார்க்கும் அந்த பார்க் காட்சி நீளமானதாக இருந்தாலும் அவருடைய நடிப்பால் ரசிக்க வைக்கிறது.

அதே போன்றதொரு காட்சியில் அடுத்து நாயகனாக வரும் சுனிலுக்கும் வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ராஜ்குமாருக்கு பிரிந்த காதலி, சுனிலுக்கு மனைவியைப் பார்த்து அம்மா என அழைப்பது. தெலுங்குப் பட காமெடியன் போல இருக்கிறார் சுனில். படத்தில் இவர் வில்லனெல்லாம் இல்லை. அவர் மன்னிப்பு கேட்ட பின்னும் விஜய் சேதுபதியின் ஆன்மா வரவில்லை என்றால் அவர் என்ன செய்வார் ?. அவரைப் பொறுத்தவரையில் அவர் செய்வது நியாயமே?.

மற்ற நடிகர்களில் மவுலி மட்டுமே அதிக காட்சிகளில் வருகிறார். அவரைத் தவிர வேறு யாரையும் அந்தக் கதாபாத்திரத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனாவை படத்தில் வீணடித்திருக்கிறார்கள். சில காட்சிகளில் மட்டுமே வருகிறார், சில வரிகள் மட்டுமே வசனம் பேசுகிறார். பகவதி பெருமாள் இயக்குனராக நடித்திருக்கிறார். இயக்குனர் மகேந்திரன், கருணாகரன் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் வருகிறார்கள். விஜய் சேதுபதியின் ஆஸ்தான நாயகிகள் ரம்யா நம்பீசன், காயத்ரி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். பார்வதி நாயரும் இந்தப் பட்டியலில் உண்டு.

96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வஸந்தா இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பின்னணி இசைக்காகவே பல காட்சிகள் உருவாக்கப்பட்டது போலிருக்கிறது. அந்தக் காட்சிகளில் தன் இசையால் நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார் கோவிந்த். சரஸ்காந்த் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. நாடகக் காட்சிகளை படமாக்கும் போது லைட்டிங்கில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.

வித்தியாசமான படங்களை ரசிப்போம், படம் மெதுவாக நகர்ந்தாலும் பொறுமையுடன் பார்ப்போம் என்று சொல்லும் ரசிகர்களுக்கான படம் இது. சராசரி ரசிகர்களுக்கான படாமகவும் எடுத்திருக்கலாம்.

சீதக்காதி - கொஞ்சம் சிறப்பு, கொஞ்சம் சிரிப்பு!

 

பட குழுவினர்

சீதக்காதி

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓