மகாமுனி
விமர்சனம்
நடிப்பு - ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார்
தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்
இயக்கம் - சாந்தகுமார்
இசை - தமன்
வெளியான தேதி - 6 செப்டம்பர் 2019
நேரம் - 2 மணி நேரம் 37 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5
ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் இரண்டு வேடங்களில் நடிக்கும் கதை தமிழ் சினிமாவில் எத்தனையோ முறை வந்து போயிருக்கிறது. இந்தப் படமும் ஒரு நாயகன் இரு வேடங்களில் நடிக்கும் கதைதான். ஆனால், அதை வேறு ஒரு ரசனையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார்.
இரு வேடப் படங்களில் பொதுவாக ஒருவர் நல்லவராக இருப்பார், மற்றொருவர் கெட்டவராக இருப்பார். அதே வழக்கமான பார்முலா இந்தப் படத்திலும் இருக்கிறது. இருந்தாலும் இரண்டு கதாபாத்திரங்களின் தன்மையையும் புதிதாக அமைத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் கதையைவிட திரைக்கதை நகரும் விதம்தான் படத்தின் முதுகெலும்பாக உள்ளது.
ஒரு ஆர்யா டாக்சி டிரைவராகவும், கூலிக்கு கொலைகளையும் செய்யும் ஒருவராகவும் இருக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் அவருக்கு மனைவி இந்துஜா, ஒரு மகன். அரசியல்வாதி இளவரசுக்காக வேலை செய்பவர். ஒரு கொலை வழக்கில் ஆர்யாவை போலீஸ் தேடுகிறது. மற்றொரு ஆர்யா ஒரு பக்திமான். மலைகளுக்குச் சென்று விதைப் பந்து போடுவது, இயற்கை விவசாயம் பார்ப்பது, டியுஷன் எடுப்பது என அம்மா ரோகிணியுடன் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கிறார். ஆர்யா மீது அதே ஊரைச் சேர்ந்த மகிமா நம்பியாருக்கு காதல். ஆர்யாவின் சாதியைச் சொல்லி அந்த காதலுக்கு எதிராக இருக்கிறார் மகிமாவின் அப்பா ஜெயப்பிரகாஷ். அவர் ஆர்யாவைக் கொல்ல திட்டம் போட்டு தோற்கிறார். ரவுடி ஆர்யா போலீசிடமிருந்து தப்பித்து ஈரோடு பக்கம் வர, பக்திமான் ஆர்யாவை, ரவுடி ஆர்யா என போலீஸ் கைது செய்கிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் பலமே கதாபாத்திர வடிவமைப்பு. ஒவ்வொரு சிறிய கதாபாத்திரத்தைக் கூட அதன் முழு தன்மை வெளிப்படும் விதத்தில் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சாந்தகுமார். வீட்டு வேலையாள் முதல் நாயகன் வரை அந்த ஒரு நுணுக்கம் கதாபாத்திரங்களில் வெளிப்படுகிறது.
குறிப்பாக கதாநாயகன் ஆர்யாவின் இரண்டு வேடக் கதாபாத்திரங்களின் அமைப்பும் அருமை. அதில் முனி கதாபாத்திரத்தில் ஆர்யாவின் நடிப்பு அந்த கதாபாத்திரத்தை அப்படியே உள்வாங்கி நடித்திருக்கிறது. நான் கடவுள் படத்தின் அகோரி ருத்ரன் கதாபாத்திரத்திற்குப் பிறகு ஆர்யா இந்த முனி கதாபாத்திரத்தில் தான் மீண்டும் தன் முழு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். மகா என்கிற கொலை செய்யும் ரவுடி கதாபாத்திரத்திலும் இயல்பாய் நடித்திருக்கிறார். அழகான மனைவி, அன்பான மகன் என இருப்பவர் ஏன் கொலை செய்வதைத் தொழிலாக எடுத்தார் என்பதை பிளாஷ்பேக்கிலாவது காட்டியிருக்கலாம்.
தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹீரோயின்கள் வருகிறார்கள் போகிறார்கள். ஆனால், அவர்களது திறமை என்ன என்பதை எத்தனை இயக்குனர்கள் வெளிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது கேள்விதான். இப்படத்தில் நடித்துள்ள இந்துஜா, மகிமா நம்பியார் இருவரது நடிப்புத் திறமையை இந்தப் படம் வெளிக் கொண்டு வந்திருக்கிறது. கணவனை எட்டி உதைத்தும் கூட அன்பு செலுத்தும் மனைவியாக இந்துஜா. கொலைகளைச் செய்யும் கணவன் என்று தெரிந்திருந்தும் அவர் மீது உள்ள பாசம் அவருக்கு சிறிதும் குறையவில்லை. தன்னை தவிக்க விட்டு சென்று விடுவாரோ என பேருந்து நிறுத்தத்தில் பார்த்து பதறுவதும், பேருந்தில் ஏறிய பின்னும், திரும்பித் திரும்பி பார்த்து தவிப்பதும் இன்னும் கண்முன்னே நிற்கிறது.
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் அடங்காத கல்லூரியில் படிக்கும் பெண்ணாக மகிமா நம்பியார். படத்தில் அடிக்கடி கருப்பு சட்டை தான் அணிந்து வருகிறார். அப்பா மீது வெறுப்புடன் இருப்பவர். ஆர்யாவைப் பார்த்ததுமே காதல் கொள்கிறார். தங்கள் காதலை வெளியில் சொல்லிக் கொள்ளாமலேயே அவரும் ஆர்யாவும் காதலுடன் பழகுகிறார்கள். ஆர்யாவைப் பார்த்து மகிமா சிரிக்கும் சிரிப்பில் அவ்வளவு காதல் தெரிகிறது.
வில்லன்கள் என்று சொல்ல முடியாத அளவிற்கு வில்லத்தனமான கதாபாத்திரங்களாக இளவரசு, ஜெயப்பிரகாஷ். இளவரசு போட்டி அரசியல்வாதியைக் கொல்லும் அளவிற்கு அரசியல் வெறி பிடித்தவர். ஜெயப்பிரகாஷ் சாதி வெறி பிடித்தவர். இருவரது கதாபாத்திரங்களிலும் சினிமாத் தனம் இல்லை.
தமன் இசையில் பாடல்களை விட பின்னணி இசை தனி ஓசையாக ஒலிக்கிறது. ஒவ்வொரு காட்சியின் தன்மைக்கேற்றபடி தன் இசையாலும் அந்தக் காட்சியின் தாக்கத்தை அதிகப்படுத்துகிறார் தமன். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவும், சாபு ஜோசப் படத் தொகுப்பும், ரெம்போன் பால்ராஜ் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலத்தைக் கொடுத்திருக்கின்றன. நிகழ்கால அரசியலை ஆங்காங்கே கிண்டலடிக்கிறது வசனம்.
படத்தின் நீளம் கொஞ்சம் பொறுமையை சோதிக்கும். கதை சொல்லலில், காட்சிகள் நகர்தலில் ஒரு மாற்றத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதே சமயம் இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் சுவாரசியமற்று நகர்கிறது. அதில்தான் முக்கிய திருப்பங்கள் இருக்கின்றன. இருந்தாலும் அதில் விறுவிறுப்பை சேர்த்திருக்கலாம். வழக்கமான படங்களிலிருந்து ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும் இந்த மகாமுனி.
மகாமுனி - மாற்றம்
மகாமுனி தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
மகாமுனி
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்