கலகத் தலைவன்
விமர்சனம்
தயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவிஸ்
இயக்கம் - மகிழ் திருமேனி
இசை - ஸ்ரீகாந்த் தேவா, அரோல் கொரேலி
நடிப்பு - உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால், ஆரவ்
வெளியான தேதி - 18 நவம்பர் 2022
நேரம் - 2 மணி நேரம் 22 நிமிடம்
ரேட்டிங் - 3//5
கார்ப்பரேட் கம்பெனிகளைப் பற்றி இதற்கு முன் தமிழ் சினிமாவில் சில படங்கள் வந்துள்ளன. அவற்றிலிருந்து வித்தியாசப்பட்டு ஒரு கதையைக் கொடுக்க வேண்டும் என இயக்குனர் மகிழ்திருமேனி முயற்சித்து புது கோணத்தில் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். தங்களின் ஆதாயத்திற்காக கார்ப்பரேட் கம்பெனிகள் என்னவெல்லாம் செய்யும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கதை. அதோடு சில பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றியும் படம் ஆங்காங்கே விவரித்து சொல்கிறது.
வஜ்ரா என்ற இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனம் புதிய கனரக வாகனம் ஒன்றை உருவாக்குகிறது. அது வெளியில் வந்தால் மார்க்கெட்டில் தனி ராஜாவாகத் திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 'எமிஷன் டெஸ்ட்'ல் அந்த வாகனம் அரசு அனுமதிக்கும் அளவை விட அதிகப் புகையை வெளியிடுவதால் தோல்வியடைகிறது. இருப்பினும் அதை ரகசியமாக வைத்து வாகனத்தை மார்க்கெட்டில் விட நிர்வாகம் முடிவு செய்கிறது. இதனிடையே, அந்த ரகசியம் மீடியா மூலம் வெளியில் வருகிறது. இதனால் அதிர்ச்சியடையும் நிர்வாகம், தங்களது கம்பெனி ரகசியம் எப்படி வெளியே போகிறது என்பதைக் கண்டுபிடிக்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக பல வேலைகளையும் செய்து தரும் ஆரவ்வை அது பற்றி விசாரிக்கச் சொல்கிறது. அதே கம்பெனியில் சென்னைக் கிளையில் வேலை செய்து கொண்டிருக்கும் உதயநிதி தான் அந்த ரகசியங்களை வெளியிடுபவர். அவர் ஏன் அதைச் செய்கிறார் ?, அதற்கான காரணம் என்ன என்பது கிளைமாக்சில் தான் தெரிய வருகிறது. உதயநிதி தான் அதைச் செய்பவர் என்பதை ஆரவ்வால் கண்டுபிடிக்க முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு கார்ப்பரேட் கம்பெனி தங்கள் கம்பெனிக்காக இப்படியெல்லாம் கூட செய்யுமா என்பதை அதிர்ச்சியூட்டும் விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். படத்தின் கதாநாயகன் உதயநிதி அமைதியாக எல்லா விஷயங்களையும் செய்து கொண்டிருக்க, ஆரவ் அதிரடியாக உதயநிதியைத் தேட ஆரம்பிக்கிறார். இவர்களுக்கு இடையிலான கண்ணாமூச்சி ஆட்டம்தான் படத்தின் திரைக்கதை. அதை எந்தக் குழப்பமும் இல்லாமல் மிகத் தெளிவாகக் கொடுத்திருக்கிறார் இயக்குனர். மேக்கிங்கில் எந்த அளவிற்கு பிரம்மாண்டத்தைக் காட்ட முடியுமா அதையும் செய்திருக்கிறார்.
கடந்த சில படங்களாக உதயநிதி தன்னுடைய கதைத் தேர்வு, கதாபாத்திரத் தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருவது தெரிகிறது. காதல், காமெடி ஆகியவற்றிலிருந்து கொஞ்சம் விலகி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளார். அந்த விதத்தில் இந்தப் படம் அவருக்கு ஒரு முக்கியமான படமாக அமைய வாய்ப்புள்ளது. கம்பெனி நிதி ஆய்வாளர் திருமாறன் கதாபாத்திரத்தில் உதயநிதியின் நடிப்பு திருத்தமாக அமைந்துள்ளது. ஹீரோயிசத்தை வெளிப்படுத்த வேண்டும் என அவரது கதாபாத்திரத்தில் கமர்ஷியல் ஹீரோ போல காட்டாமல் இயல்பாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அதை சரியாக உள்வாங்கிக் கொண்டு அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார் உதயநிதி.
படத்தின் வில்லனாக பிக் பாஸ் புகழ் ஆரவ். கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக எதையும் செய்யும் ஒரு கதாபாத்திரம். கம்பெனிகளை எதிர்த்து போராடும் மக்களின் போராட்டங்களையே ஒன்றுமில்லாமல் செய்யக் கூடியவர். எங்கு வேண்டுமானாலும் சென்று அவருக்கு வேண்டியதை செய்து முடிக்கும் அதிகாரம் கொண்டவர். தங்களை யார் என்றே காட்டிக் கொள்ளாத ரகசிய கார்ப்பரேட் ஏஜன்ட் என்று சொல்லலாம். ஆணவம், அதிகாரம், வன்மம் என ஆரவ்வின் கதாபாத்திரம் இரண்டாவது ஹீரோ என்று சொல்லுமளவிற்கு படத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. வேறு ஹீரோ யாராவது அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இப்படத்தை 'டபுள் ஹீரோ' சப்ஜெக்ட் என்று சொல்லியிருப்பார்கள். ஆரவ்வைத் தேடி இனி அதிக வில்லன் வாய்ப்புகள் வரலாம்.
உதயநிதியின் ஜோடியாக நிதி அகர்வால். மருத்துவம் படிக்கும் மாணவி. அழகாகவும், மெச்சூர்டாகவும் நடித்திருக்கிறார். இருவருக்கும் இடையே காதல் காட்சிகள் இல்லை என்றாலும் அவர்கள் சந்தித்துக் கொள்ளும் காட்சிகளே 'கலவரமாய்' உள்ளன. அதே சமயம், படத்தின் மையக் கதைக்கு இந்தக் காதல் கொஞ்சம் வேகத் தடையாகவும் அமைந்துவிட்டது.
கலையரசன் கதாபாத்திரம் படத்தில் எதிர்பாராத ஒரு என்ட்ரி. அவருக்கும் உதயநிதிக்கும் இடையே உள்ள நட்பு நெகிழ வைக்கும் ஒன்று. மற்ற கதாபாத்திரங்கள் சில நிமிடங்களே வந்து போகின்றன.
தில் ராஜ் தன் ஒளிப்பதிவில் படத்திற்கான மேக்கிங் தரத்தை மேன்மைப்படுத்தி இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சி படமாக்கம் குறிப்பாகப் பாராட்ட வைக்கும் ஒன்று. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை ஆரம்பத்திலிருந்தே படத்துடன் ஒன்ற வைக்கிறது. இம்மாதிரியான படத்திற்குப் பாடல்களே தேவையில்லை.
சில காட்சிகளை 'டீடெய்லிங்' ஆகச் சொல்ல வேண்டுமென அவற்றை பொறுமையாக நீளமாகச் சொல்கிறார். குறிப்பாக திருச்சி ரயில்வே சந்திப்பில் நடக்கும் துரத்தல்கள், உதயநிதி - நிதி அகர்வால் காதல் சந்திப்புகள், கிளைமாக் காட்சியின் அதிகப்படியான நீளம் ஆகியவற்றைக் குறைத்து, எடிட்டிங்கில் ஒரு 'பாஸ்ட் கட்டிங்' சேர்த்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக நகர்ந்திருக்கும். சில காட்சிகள் சீக்கிரம் முடிங்கப்பா என பொறுமையை சோதிக்கிறது. படம் முடிந்த பின் யோசித்துப் பார்த்தால் விஜய்யின் 'கத்தி' படக் கரு ஞாபகம் வந்து போகிறது.
இருப்பினும் பொருளாதாரம், கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம், கம்பெனி கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், ஒரு பெரிய கம்பெனி மூடப்பட்டால் அதன் தொடர்ச்சியாக சாதாரண மக்களுக்கும் ஏற்படும் இழப்புகள் என இந்த 'கலகத் தலைவன்' சில புதிய தரவுகளை அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார்.
கலகத் தலைவன் - 'கலக்கத்' தலைவன்
கலகத் தலைவன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
கலகத் தலைவன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
உதயநிதி ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் மகன் எனும் அடையாளத்தோடு ஒரு தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். குருவி, ஆதவன் உள்ளிட்ட பல படங்களை தயாரித்த உதயநிதி, ராஜேஷ்.எம் இயக்கிய, ''ஒரு கல் ஒரு கண்ணாடி'' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெறவே தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா படங்களில் நடித்தார். தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் எனும் மூன்று அடையாளங்களோடு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.