Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

மீகாமன்

மீகாமன்,Meegaman
31 டிச, 2014 - 18:17 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மீகாமன்

தினமலர் விமர்சனம்


இவரு பெரிய காதல் இளவரசன், ரொமான்டிக் ஹீரோ.. என்று சொல்லியபடியே ஆர்யாவை முழுக்க, முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக்க முயன்றிருக்கும் திரைப்படம் தான் மீகாமன்.


இந்தியாவின் பெரிய போதைமருந்து கடத்தல் கும்பலின் தலைவன் ஜோதிபாய் எனும் அசுதோஷ் ராணா. அவரின் கடத்தல் கும்பலில், கோவா பகுதி தலைவராக இருக்கும் மகாதேவனிடம் நம்பிக்கைக்குரிய தளபதியாக நடித்தபடி இருக்கிறார் சிவா எனும் ஆர்யா. நிஜத்தில் மும்பை போலீஸ்காரர் ஆர்யா. ஜோதிபாயை பிடிக்க வேண்டும் என்பதற்காக, மகாதேவனிடம் கையாளாக இருக்கும் ஆர்யாவின் போலீஸ் பெயர் அருண். அருண் ஆர்யாவும், அவரது ஐ.பி.எஸ். நண்பர் கார்த்திக் எனும் ரமணாவும், ஜோதிபாய் கும்பலை கூண்டோடு கைலாசம் அனுப்பும் எண்ணத்தில் ஜோதிபாய் கூட்டத்திலும் அவருக்கு போதைமருந்து சப்ளை செய்ய முயலும் போலீசில் பணிநீக்கம் செய்யப்பட்ட உயர் அதிகாரி ஆஷிஷ் வி்ததியார்த்தியின் கும்பலிலும் நம்பிக்கைக்குரிய தளபதியாக வளைய வருகின்றனர்.


இச்சமயத்தில், விலைமதிப்பில்லா ஆயிரம் கிலோ போதைமருந்து எதிர்பாராதவிதமாக இந்தியாவிற்குள் கடல் வழியாக வருகிறது. அதை கைப்பற்றி இந்தியாவில் தன் போதை சாம்ராஜ்யத்தை மேலும் விஸ்தரிக்க விரும்பும் ஜோதிபாயை, அந்த ஆயிரம் கிலோ போதைமருந்தை வைத்தே, கூண்டோடு பிடிக்க முயலுகிறார் ஆர்யா!. அதில், எதிர்பாராமல் தன் நண்பன் ரமணாவையும், உயர் அதிகாரிகள் அனுபமா குமார், ஓ.ஏ.கே. சுந்தர் உள்ளிட்டோரையும் இழக்கும் ஆர்யா, தன் உயிருக்கு உயிரான காதலி ஹன்சிகாவையும், தன் உயிரையும் எப்படி? பலி கொடுக்காமல் பாதுகாத்து ஜோதிபாய் கும்பலை கூண்டோடு பழிதீர்க்கிறார் என்பதுதான் மீகாமன் படத்தின் திக், திக் மொத்த கதையும்!.


இந்த கதையை, ஆங்கில படங்களுக்கு நிகராக நமக்கு புரிந்தும் புரியாமலும் சொல்ல முயன்று அதில் பாதி வெற்றியும், மீதி தோல்வியும் கண்டிருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி!. அவரது வெற்றிக்கு பெரிதும் பக்கபலமாக இருந்திருக்கிறது தமனின் பின்னணி இசையும், எஸ்.ஆர். சதீஷ்குமாரின் பிரமாண்ட ஒளிப்பதிவும் என்றால் மிகையல்ல!.


ஆர்யா, ஆராய்ச்சியும் கேள்விக்குறியுமான தனது முகபாவனைகளால் அருண் அலைஸ் சிவாவாக, துப்பாக்கியும் கையுமாக இன்னும் சொல்வதென்றால் துப்பாக்கிகளும், கையுமாக ஆக்ஷனில் அதிரடி செய்திருக்கிறார். முழுக்க, முழுக்க ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் கொஞ்சமே கொஞ்சம் ரொமான்ஸ் காட்சிகள் தான். கொஞ்சநேரமே ஹன்சிகாவுடன் ஆர்யாவுக்கு காதல், களியாட்டங்கள்... என்றாலும், அதிலும் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு நிகராக திறமை காட்டியிருக்கிறார் மனிதர்.


ஹன்சிகா உஷாபவனாக ஓ...சாரி உஷாவாக ஆர்யாவிடம் அழுதும் சிரித்தும்., தோழி ஆனந்தியிடம் பில்டப்பும் பெருமையாகவும் பேசி, குடும்ப பாங்கில் கவர்ச்சி கடை விரித்திருக்கிறார். ஆர்யா, ஓர் எதிர்பாராத இரவில் சஞ்னா சிங்கிற்கு அடைக்கலம் கொடுப்பதை தவறாக புரிந்துகொண்டு தன் வீட்டில் இருந்து கொண்டு செல்ஃபோனில் அதை, ஹன்சிகா வீடியோ எடுப்பதும், அது பிக்பாக்கெட் பேர்வழி வாயிலாக ஜோதிபாய் கண்கள் வரைக்கும் போய்...அது கிளைமாக்சில் எதிர்பாராத ட்விஸ்ட்டை ஏற்படுத்துவதும் காதில் பூச்சுற்றும் ஹம்பக் ரகம்!.


போலீஸ் நண்பர் கார்த்திக்காக வரும் ரமணாவின் முடிவு உருக்கம், வில்லன் அசுதோஷ் ராணா பார்வையிலேயே பயங்கரம் காட்டும் ரகம், சுதன்ஷூ பாண்டே, மகாதேவன், அவினாஷ், ஆஷிஷ் வித்தியார்த்தி, ஹரீஷ், பாண்டிரவி, மகாகாந்தி, ஓ.ஏ.கே.சுந்தர், சரவணசுப்பையா, ஆனந்தி, அனுபமாகுமார், சஞ்சனா சிங் உள்ளிட்டோரில் மற்றவர்கள் எல்லாம் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருக்க., அனுபமா குமார் ஓவராக பேசி போரடிக்கிறார். இயக்குநரும், படத்தொகுப்பாளரும் அம்மணி அனுபமாவும், ஓ.ஏ.கே. சுந்தரும் பேசி பேசி போரடிக்கும் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்!.


இதுநாள்வரை போதைமருந்து கும்பல் தாதாவாக, தலைவனாக ஒரு குறிப்பிட்ட மதத்தினரையே (அந்த மதத்தை சேர்ந்தவžர்கள் மட்டும் தான், அது மாதிரி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்களா? ஈடுபடவேண்டுமா...? என கேட்டு., சினிமாக்காரர்களின் முகத்தில் படார் என அடிப்பதுபோல்...)பார்த்து பழகிய தமிழ்சினிமா ரசிகனுக்கு, போதை தாதா கும்பலின் தலைவனுக்கு ஜோதிபாய் என பெயர் சூட்டி., அவர் சதாசர்வநேரமும் ஒரு காவியும் இல்லாத சிகப்பும் அல்லாத துண்டுடன் வளைய வரும்படி செய்திருப்பதற்கு ஆர்யாவும், இப்பட இயக்குநர் மகிழ்திருமேனியும்தான் விளக்கம் தரவேண்டும்...


போதை கும்பல் தாதாவின் கதையை முடிக்கும் ஆர்யா, போலீஸ் கமிஷனராக ஈகோ தாதாவாக இருந்து அனுபமா குமார், ஓ.ஏ.கே. சுந்தர் உயிர் போக காரணமான சிட்டிசன் சரவணசுப்பையாவை ஏதும் செய்யாதது., நிறைய வாய்ப்பிருந்தும் ஹன்சிகாவை, ஊறுகாய் அளவிற்கே பயன்படுத்தியிருப்பது உள்ளிட்ட குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், மகிழ்திருமேனி இயக்கத்தில் மீகாமன் - கொஞ்சம் மிகையானவன் என்றாலும் மிக நல்லவன். வசூல் வல்லவனா?.. பார்ப்போம்!!.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in