பூமி,Bhoomi (tamil)

பூமி - பட காட்சிகள் ↓

Advertisement
1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜெயம் ரவி, நிதி அகர்வால்
தயாரிப்பு - ஹோம் மூவி மேக்கர்ஸ்
இயக்கம் - லட்சுமண்
இசை - இமான்
வெளியான தேதி - 14 ஜனவரி 2021 (ஓடிடி)
நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

நம் நாட்டை, நம் பூமியை வெளிநாட்டிலிருந்து வரும் கார்ப்பரேட்டுகள், நம் தொழிலை, விவசாயத்தை, நம் மக்களை அழித்து அவர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் காட்டும் படம் இது.

படத்தில் சொன்ன விஷயத்தை நீங்கள் முதலில் கடைபிடித்தீர்களா படக்குழுவினரே. இப்படத்தை தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் வெளியிடாமல் வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஓடிடி தளத்தில் தானே படத்தை வெளியிட்டுள்ளீர்கள்.

ஊருக்கு உபதேசம் செய்து படத்தை எடுத்த உங்களாலேயே அதை கடைபிடிக்க முடியவில்லையே ?.

தமிழன் என்றால் ஷேர் செய்யவும், அனைவருக்கும் பகிருங்கள், படித்ததில் பிடித்தது, உங்களுக்குத் தெரியுமா,” என பல விதங்களில் பேஸ்புக், டுவிட்டர், வாட்சப் ஆகியவற்றில் பகிரப்படும் பல தகவல்களை ஒன்று விடாமல் தேடிப்பிடித்து அவற்றை எப்படியெல்லாம் படத்தில் காட்சிகளாக வைக்க முடியுமா அதைச் சேர்த்து தொகுத்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனல் லட்சுமண்.

தமிழன் என்று மட்டும் கதையில் சொல்லி படமெடுத்தால் அதை வேறு மொழிகளில் டப்பிங் செய்து பார்ப்பவர்களுக்கு சங்கடத்தை உருவாக்கும் என நினைத்து ஆங்காங்கே வந்தே மாதரம் என்றெல்லாம் ஆவேசமாகக் குரல் கொடுத்து அதை சமாளித்திருக்கிறார்கள்.

16 வயதிலேயே தன் அறிவியல் அறிவை வெளிப்படுத்தி சாட்டிலைட் செய்த மாணவன் ஜெயம் ரவி, நாசா உதவியுடன் படித்து முடித்து நாசாவிலேயே வேலைக்குச் சேர்கிறார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும், அங்கு தாவரங்களை வளர்க்க முடியும் என்ற மார்ஸ் மிஷன் ஆராய்ச்சியில் முக்கிய விஞ்ஞானியாக இருக்கிறார். ஒரு மாதம் விடுமுறை கிடைக்க தன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் கிராமத்திற்கு வருகிறார். அங்கு விவசாயிகள் படும் துயரத்தைப் பார்த்து கொதித்து அவரும் விவசாயம் செய்ய ஆரம்பிக்கிறார். மரபணு மாற்றப்பட்ட விதைகளைக் கொடுத்து இந்த பூமியை பாழ்படுத்தும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனியை எதிர்க்க ஆரம்பிக்கிறார். அந்தக் கம்பெனியின் உரிமையாளர் நேரடியாகவே வந்து ஜெயம் ரவியை மிரட்டுகிறார். அதற்கப் பிறகு இருவருக்கும் நடக்கும் பூனை, எலி சண்டைதான் இந்த பூமி.

படம் முழுவதும் பொன்னியின் செல்வன் படத்திற்காக வளர்த்த ஹேர்ஸ்டைலிலேயே வருகிறார் ஜெயம் ரவி. அதுவே அவரது கதாபாத்திரத்தை விட்டு கொஞ்சம் அன்னியப்பட்டு நிற்கிறது. ஒரு காட்சி கூட விடாமல் அனைத்து காட்சிகளிலும் எமோஷன் ஆகவே இருக்கிறார். எமோஷன் ஆகி நெஞ்சில் குத்திக் கொள்கிறார், அடிக்கடி மண்ணை எடுத்து தன் மீது பூசிக் கொள்கிறார், தமிழன்டா என பாடல் பாடுகிறார், அடிக்கடி வந்தே மாதரம் என்கிறார். பல நாட்டு அரசாங்கங்களையே ஆட்டிப் படைக்கும் கார்ப்பரேட் அதிபர் ரோனித் ராயை யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஒருவனாக எதிர்க்கிறார். தன்னுடைய 25வது படத்தை நல்ல படமாகக் கொடுக்க வேண்டும் என்று 25 நாட்களாவது யோசித்து ஒரு நல்ல படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், நீதி கிடைக்க வேண்டும் என்று சொல்லும் படத்தில் படத்தின் நாயகியாக நிதி அகர்வாலுக்கு கொஞ்சமாவது நீதி கிடைத்திருக்கலாம். படத்தின் ஆரம்பத்தில் இரண்டு காட்சிகள், ஒரு பாடல் என வந்து போகிறார். அதன்பின் எப்போதோ ஒரு முறை கூட்டத்தோடு கூட்டமாக நிற்கிறார்.

படத்தின் வில்லனாக ரோனித் ராய். பல தமிழ்ப் படங்களில் இதற்கு முன்பு பார்த்த அதே கார்ப்பரேட் அதிபர். ஜெயம் ரவியை எதிர்க்க ஹெலிகாப்டரில் பறந்து வருகிறார். ஜெயம் ரவியும் இவரும் இடைவேளைக்குப் பின் செல்போனில் மட்டுமே பேசிக் கொள்கிறார்கள். அப்படி போனில் பேசும் போதெல்லாம் பக்கத்தில் பெண்கள் இல்லாமல் பேசுவதேயில்லை. அவர்களுக்கு இவர் நெயில் பாலிஷ் வைத்துவிடுகிறார், இவருக்கு அவர்கள் சரக்கு ஊற்றித் தருகிறார்கள், உடன் நீச்சலடிக்கிறார்கள். ஐம்பது வருஷமா தமிழ் சினிமாவுல வில்லன்களை இப்படித்தானே காட்டறீங்க.

ராதாரவி உள்ளூர் அரசியல்வாதியாக வந்து போகிறார், சாரி, வந்து சாகிறார். அம்மா கதாபாத்திரத்தில் எப்போது நடித்தாலும் ஸ்கோர் செய்துவிடுவார் சரண்யா, அவருக்கும் சரியான வாய்ப்பில்லை. ஜெயம் ரவி நண்பனாக சதீஷ், நாலே வரி வசனம் பேசியிருந்தால் அதிகம்.

இமான் இசையில் டெப்ளேட் பாடல்கள். ஒளிப்பதிவாளர் டட்லி மட்டுமே தன் பங்கிற்கு எப்படியாவது பேசப்பட்டுவிட வேண்டும் என பிரேம் பை பிரேம் உழைத்திருக்கிறார்.

கத்தி படத்துல இருந்து கொஞ்சம் உருவிய கதை, ஷங்கர், ஏஆர் முருகதாஸ் பட டைப் காட்சிகள், சோஷியல் மீடியா பார்வேர்டு மெசேஜ்கள் சேர்ந்ததுதான் இந்த பூமி.

படத்திற்கான விதை சிறப்பு, ஆனால், அதை விதைத்து பயிரிட்டு வளர்த்த விதம் தவறு.

பூமி - வறட்சி

 

பூமி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பூமி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

ஜெயம் ரவி

ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. அப்படம் வெற்றி அடையவே ஜெயம் ரவி ஆனார். 1980ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி பிறந்தவர். எடிட்டர் மோகனின் வாரிசான இவர், தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இயக்குநர் ஜெயம் ராஜா இவரது அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் விமர்சனம் ↓