Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

போகன்

போகன்,Bogan
ரோமியோ ஜூலியட் படத்திற்கு பிறகு ஜெயம்ரவி, லக்ஷ்மண் மீண்டும் இணையும் படம் இது.
24 பிப், 2017 - 16:52 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » போகன்

ஜெயம் ரவி, அர்விந்த்சாமி, இருவரும் நாயகராகவும், ஹன்சிகா மோத்வானி நாயகியாகவும் நடிக்க, பிரபுதேவாவும், ஐசரி கே.கணேஷும் இணைந்து, பிரபுதேவா ஸ்டுடியோஸ் வழங்க, ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் வெளியிட, "ரோமியோ ஜூலியட்" பட இயக்குனர் லஷ்மன் இயக்கத்தில், போலீஸுக்கும், போக சித்தரின் கூடு விட்டு கூடு பாயும் சித்து விளையாட்டு படித்த ஜெகஜாலக் கில்லாடிக்குமிடையில் நடக்கும் நீயா? நானா..? போராட்டம் தான் "போகன்" படம்.


கூடு விட்டு கூடு பாயும் கலையை போக சித்தரின் ஓலைச் சுவடியை களவாடி கள்வரான அரவிந்த்சாமி தன்னிடம் உள்ள பழனி மலை போக சித்தரின் கூடு விட்டு கூடு பாயும் திறனால் சென்னையில் உள்ள ஒரு பெரும் நகைக்கடையிலும், ஒரு பெரிய வங்கியின் கிளையிலும் பெரிதாய் அலட்டிக் கொள்ளாது பல கோடிகளை கொள்ளையடிக்கிறார். அதனால் வசமாக போலீஸில் சிக்கிக் கொண்டு லாக்-அப் செல்கிறார். வங்கி அதிகாரி "ஆடுகளம்" நரேன், அவரை காப்பாற்றி நிஜக் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமையும், கட்டாயாமும் அவரது பிள்ளையும் பெரும் போலீஸ் அதிகாரியுமாகிய ஜெயம் ரவிக்கு இருக்கிறது. அரவிந்தசாமியின் கூடு விட்டு கூடு பாயும் சித்து விளையாட்டுகளைத் தாண்டி, அர்விந்தசாமி சம்பந்தப்பட்ட அந்த கொள்ளை கேஸ்களில் உண்மை கண்டறிந்து, ஜெயம் ரவி அவரை சட்டத்தின் முன் நிறுத்தி சிறையிலடைத்தாரா.? அல்லது அர்விந்த்சாமி போலீஸ் ஜெயம் ரவியின் மனைவியாகப் போற ஹன்சிகாவையும், ரவியின் குடும்பத்தையும் அழித்து, தனக்கு எதிரான ஆதாரங்களையும் அழித்து ஜெயிக்கிறரா? என்பது தான் "போகன்" படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான கதையும், காட்சிப்படுத்தலும்!


ஜெயம் ரவி, போலீஸ் உதவி கமிஷ்னர் விக்ரமாக செம ஷார்ப். ஜெயம் ரவி அர்விந்த்சாமி உருவிலும், தன் உருவிலும் மாறி, மாறி பண்ணும் கலாட்டாக்கள் தமிழ் சினிமாவுக்கு புதுசு. ஹன்சிகாவுடனான காதல் காட்சிகளில் படு ரொமான்ஸ் காட்டியிருப்பதும், ஆக்ஷன் காட்சிகளில் செம ரிஸ்க் எடுத்து நடித்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. "பழிவாங்க வந்த இடத்துல இப்படி ஒரு இலவச இணைப்பா?" என கேட்டு ஹன்சிகாவின் பிளையிங் கிஸ்ஸுக்கு செம மூடாய் ஜெயம் ரவியின் உடம்பில் இருக்கும் அர்விந்தசாமி ஆச்சர்யமாய் பார்ப்பது... போன்ற காட்சியில் செமயாய் மிரட்டியிருக்கிறார் ரவி.


கதாநாயகி ஹன்சிகா மோத்வானி - குடித்துவிட்டு போதையில் உளறுவதை ரசித்தபடி தனது செல்லில் ஹன்சிகாவின் நம்பரை அவரது பாத்திரப்பெயரான மகா எனும் பெயரில் இருந்து வொய்ப் என மாற்றி வைத்துக் கொள்வதிலும், போதையில் பிரியாணி சாப்பிடும் ஹன்சிகாவிடம் "நீங்கள் ராஜ்கிரன் பேனா.." எனக் கேட்கும் காட்சியிலும் கூட ஜெயம் ரவி மிதமிஞ்சிய நடிப்பை அசத்தலாக வழங்கியிருக்கிறார். வாவ்!


கிட்டத்தட்ட வில்லானிக் ஹீரோவாக பல நூறாண்டுகளுக்கு முன் பழனியில் வாழ்ந்த சித்தர் போகரின் ஓலைச்சுவடிகளைக் களவான்டு, அதன் வழிகாட்டுதல்படி, அதிகம் ரிஸ்க் இல்லாது ரஸ்க் சாப்பிடும் மன்னர் பரம்பரையின் கடைசி வாரிசு ஆதித்யாவாக அர்விந்தசாமி, "ஏன் எனக்கும் கால் டாக்ஸி சொல்லப் போறீயா..." என்று நக்கலடித்தப்படியும் "நான்லாம் போதையிலதான்டா ரொம்ப தெளிவா இருப்பேன்..." என்ற படியும் முன்பு ஹீரோவாக காட்டிய ரொமான்ஸைக் காட்டிலும், தற்போது வில்லன் கம் ஹீரோவாக செம பர்பாமென்ட்ஸ் காட்டியிருக்கிறார். சாமி.. வாவ், "கீப் இட் அப்..."


கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானி, செம பக்கா. பாதாம் பிஸ்தா அதிகம் போட்டு அரைத்து செய்த குல்பி ஐஸ் மாதிரி, கொழுக் மொழுக் என்று ரசிகனின் நெஞ்சை, இப்படி முழு ஆக்ஷன் படத்தில் ரொமான்ஸ் லுக்கில் அடிக்கடி குளிர்விக்க பயன்பட்டிருக்கிறார். அதேநேரம், கதைக்காகவும், அதன் போக்குக்காகவும், அர்விந்த்சாமி உருவில் இருக்கும் ஜெயம் ரவியை எல்லோரும் ஜெயம் ரவி தான் என நம்பும் போது ஹன்சிகா மட்டும் நம்பாது இருப்பது நம்பும்படியாக இல்லை.


ஆர்காலஜிக்கல் துறை பேராசிரியராக நாசர், பொறுப்பான போலீஸ் கமிஷ்னராக பொன்வண்ணன், பேங்க் மேனேஜர் கம் ஜெயம் ரவியின் அப்பாவாக "ஆடுகளம்" நரேன் மற்றும் ரவியின் போலீஸ் தோழராக சத்யா - ஜாமி, பிரசாத் - நாகேந்திர பிரசாத், பெண் போலீஸ் அக்ஷரா உள்ளிட்ட அனைவரும், அசத்தலாக நடித்துள்ளனர்.


இசைஞர் டி.இமானின் இசையில்., "டமாலு டமாலு டுமீலு டுமீலு...", "செந்தூரா செந்தூரா சேர்ந்தே செய்வோம்...", "வாராய்... வாராய் நீ வாராய்....", "போகன் வில்லா...." உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் சில இடங்களில் சப்தமாய் திணிக்கப்பட்டிருப்பதாய் தோன்றினாலும், படத்திற்கு மேலும் பலம் சேர்த்து., போகனை, ராயல் லுக்கிற்கு ரத்தினக்கம்பளம் விரித்து அழைத்து செல்கின்றன.


ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் போகன் எனும் திரைப்படத்தை, திரைக்காவியமாக்கும் ஒவியப்பதிவு. படத்தொகுப்பாளர் ஆண்டனியின் கத்திரியும் பக்காவாக ,பதமாக வேலை செய்திருப்பது ஆறுதல்!


லஷ்மனின் எழுத்து, இயக்கத்தில் அர்விந்த்சாமி, ஜெயம் ரவி ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகமாகிக் கொள்ளும் "பப் - பார்" காட்சியில், "ஏன் எனக்கும் கால் டாக்ஸி சொல்லப் போறீயா...." என அர்விந்த்சாமி நக்கல் அடிப்பதும், "நீங்க இப்பதான் சிவபானத்துல இருக்கீங்க...." நாங்கள்ளாம் சொர்க்கத்துக்கு போற போதை வஸ்களையே டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறோம் என அர்விந்தசாமிக்கு புது போதையை அறிமுகம் செய்யும் காட்சியில் ஜெயம் ரவியும் சக்கைப்போடு போட்டு பக்காவாய் நடித்திருப்பதில் அவர்களையும் தாண்டி இயக்குனர் தெரிகின்றார் என்பது டைரக்டரின் வெற்றி!


அர்விந்த்சாமி, ஜெயம் ரவி, ஜாமி, நரேன்.... உள்ளிட்டோர் உடம்புகளில் கூடுவிட்டு கூடு பாய்ந்து பண்ணும் அட்டகாசங்களை அசத்தலாக படம் பிடித்திருப்பதும், மேலும், "என்னமோ தெரியலை..... உன்கிட்ட இருக்கிற மொத்த லவ்வையும் நானே எடுத்துக் கணும்னு தோணுது... என்கிட்ட இருக்கிற அவ்வளவு லவ்வையும் உனக்கே கொடுத்துடணும்னு தோணுது..." உள்ளிட்ட காதல் ரசம் சொட்டும் "பன்ச்" வசனங்களும், படத்திற்கு மேலும், வலு சேர்க்க முற்பட்டுளளன, ஆனால் அதேநேரம், ஜெயம் ரவி கூடவே இருக்கும் பெண் போலீஸ் மிடுக்காக நடைபோடாமல், கேட் வாக் டைப்பில் நடப்பது, ரவி, லாக்-அப்பில் இருக்கும் அர்விந்தசாமியிடம் வலிய, "என் அப்பா உடம்பில் புகுந்து தான் நீ வங்கியில் கொள்ளை அடித்தாய்..." என தேவை இல்லாது சொல்லி மாட்டிக்கொள்வது, ரவியின் உடம்புக்குள் இருக்கும் அரவிந்த்சாமியின் ஆன்மா, அவசரமாய் உள்ள வேலையை (தப்பிப்பது உள்ளிட்ட...) எல்லாம் பார்க்காமல் ஹன்சிகாவை அடைய அலைவது... உள்ளிட்ட சில, பல லாஜிக் குறைபாடுகள், போகனின் சித்து விளையாட்டுகளால் ரசிகனின் மூளைக்கும் பெரிதாய் எட்டவில்லை... என்பது இப்படத்திற்கு கிடைத்த மாஸ் - ப்ளஸ்!


ஆக மொத்தத்தில், தமிழ் சினிமாவிற்கு புதியவனாய் தெரியும் "போகன், நிச்சயம் - ஏக போக வெற்றியாளன்!"




-------------------------------------------------------------------


கல்கி விமர்சனம்




விக்கிரமாதித்தன் காலத்தில் இருந்து சின்ன வாத்தியார் திரைப்படம் வரை, கூடு விட்டுக் கூடு பாய்வது என்பது வசீகரமான விஷயம் தான். சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடன் இதழில், கூடு என்ற சிறுகதையில் கையாளப்பட்டிருக்கும் கருவும் இந்தப் படத்தின் கருவும் ஒத்துப் போவது எதேச்சையாகவும் இருக்கலாம்.

ஆய கலைகள் அறுபத்து நான்கையும் மக்கள் நலனுக்காக பழனியடிவாரத்தில் புதைத்து வைத்த சித்தர் போகர், இநதப் படத்தைப் பார்த்தால் நொந்து நூடுல்ஸ் ஆகிவிடுவார்.

விறுவிறுப்பாகப் போகவேண்டிய படத்தை இயன்றவரை குழப்பியிருக்கிறார்கள். வில்லனாகவும், நல்லவனாகவும் அரவிந்த் சாமியும், ஜெயம் ரவியும் இடம் மாறுவதுவரை சரிதான். அதன்பிறகு பலரது உடல்களில் பலரும் மாறிக் கொண்டே போகிறார்கள்.

படம் பார்த்து வெளியே வம்போது, வேறு யாராவது உடலில் நாம் இருக்கிறோமா என்றுகூடச் சந்தேகம் வந்துவிடுகிறது.

சர் நல்லவரா, கெட்டவரா என்பது படத்தின் இறுதிவரை தெரியவில்லை; அவ்வளவு ஏன்? நாசருக்கே தெரிந்திரக்குமா என்றும் புரியவில்லை. போகருக்கே வெளிச்சம்.

ஹன்சிகாவும், ஜெயம் ரவியும் பாடும் ஒர பாடல் காட்சி - ஜெயகாந்தன் ஒருமுறை சொன்னது போல - ஆடையுடுத்திய நீலப் படம்!

படத்தின் ஆரம்பத்தில் அ. சாமியின் சொகுசு வாழ்க்கையைச் சித்தரிப்பதாக நினைத்துக் கொண்டு கூட்டுக் கலவிக்காட்சி அருவெருப்பின் உச்சம்!

'டம்மாலு டும்மீலு' பாடல் ஏற்கெனவே பாப்புலர். நிச்சயம் 2 மாசமாவது ஒலித்துதான் ஓயும்.

அதே போலக் கூடு விட்டுக் கூடு பாஞ்சு பாடலும் வித்தியாசமான முறையில் படமாகியிருக்கிறது. பெண் குரல் ஓர் அமானுஷ்ய சூழலை உருவாக்குவது என்னவோ உண்மை.

பின் பாதி அநியாயத்துக்கு இழுவை கதாநாயகி மதுவருந்தும் தவிர்க்கப்பட வேண்டிய காட்சியும் உண்டு.

கைதட்டல் வாங்க வேண்டும் என்று எல்லாக் கதாநாயகர்களின் படத்தையும் காட்டுவது மலினமான உத்தி!

ஜேம்ஸ்பாண்ட் படங்களில், அவரின் பராக்கிரமங்களைக் காண்பிப்பதற்காக சம்பந்தமேயில்லாமல் ஒரு சாகச நிகழ்ச்சியோடு படத்தை ஆரம்பிப்பார்கள். இதிலும் ஆஃதே! ஆனாலும் மிக விறுவிறுப்பான ஆரம்பக் காட்சிக்கு ஒரு ஷொட்டு!

சிசி டிவி கேமிரா தொழில்நுட்பம் வந்தாலும் வந்தது. எல்லா படங்களிலும் திகட்டத் திகட்டக் காட்டுகிறார்கள். அதிலும் ரிவைண்ட் பண்ணு என்ற வசனம் கட்டாயம் இடம் பெறுவது வாடிக்கையாகிவிட்டது.

மொத்தத்தில் போகன் - அகோரன்!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in