ஈஸ்வரன்,Eeswaran

ஈஸ்வரன் - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா,
தயாரிப்பு - மாதவ் மீடியா, டி கம்பெனி
இயக்கம் - சுசீந்திரன்
இசை - தமன்
வெளியான தேதி - 14 ஜனவரி 2021
நேரம் - 2 மணி நேரம் 5 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

சினிமாவில் கதை சொல்வது என்பது ஒரு கலை. ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டே இரண்டரை மணி நேரம் நம்மை ரசித்த வைத்த படங்கள் உண்டு. கதையே இல்லாமல் திரைக்கதை மூலமாகவே நம்மை இரண்டரை மணி நேரம் கட்டிப் போட்ட படங்களும் உண்டு.

ஆனால், தற்போதைய இயக்குனர்கள் கதைக்காகவும், திரைக்கதைக்காகவும் அதிகம் விவாதிப்பதில்லையோ என்ற சந்தேகம் சில படங்களைப் பார்த்ததும் வருகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் ஆகிய இரண்டு படங்களும் இயக்குனர் சுசீந்திரனுக்கு அதிகம் பிடித்திருக்கும் போலிருக்கிறது.

மகன்கள், மருமகள்கள், மகள்கள், மருமகன்கள், பேரன், பேத்திகள் ஆகியோருடன் இருக்க ஆசைப்படும் ஒருவர், அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் நன்றாக இருக்க ஆசைப்படும் ஒரு இளைஞர் என மேலே சொன்ன இரண்டு படங்களின் கதைக்கருவை வைத்துக் கொண்டு இந்த ஈஸ்வரன்ஐ படைத்திருக்கிறார் சுசீந்திரன். இருந்தாலும் இரண்டு மணி நேரப் படம் என்பதால் நம்மை அதிகம் சோதிக்காமல் படத்தை நகர்த்தி ஓரளவிற்கு ரசிக்கவும் வைத்திருக்கிறார்.

கிராமத்தில் இருக்கும் வயதான மனிதர் பாரதிராஜா. அவருக்கு உதவியாக வேலைகளைச் செய்து கொண்டு இருப்பவர் சிலம்பரசன். சில வருடங்களாக ஊர் பக்கமே வராத தன் வாரிசுகள், இறந்து போன தன் மனைவியின் 25வது நினைவு நாளுக்காவது வருவார்கள் என எதிர்பார்த்து ஏமாந்து போகிறார். ஆனால், கொரோனா தொற்று நாட்டில் பரவ ஆரம்பித்த போது, அதையே காரணமாக வைத்து வாரிசுகளை அழைக்கிறார், அவர்களும் ஊருக்கு வருகிறார்கள். ஒரு கற்பழிப்பு விவகாரம் காரணமாக தன்னை சிறைக்கு அனுப்பிய பாரதிராஜா குடும்பத்தை கூண்டோடு கொல்ல முயற்சிக்கிறார் ஸ்டன் சிவா. அவர்களை ஈஸ்வரன் சிம்பு காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை.

ஒரு சராசரி கிராமத்து இளைஞன் ஈஸ்வரனாக நடித்திருக்கிறார் சிம்பு. படம் முழுவதுமே லுங்கி, சாதாரண சட்டை, கொஞ்சம் தாடி, நெற்றியில் விபூதி என அந்தக் கதாபாத்திரத்தை கண் முன் நிறுத்துகிறார். வழக்கம் போல கையை சொடக்கி ஒரு மேனரிசம் செய்கிறார். அது மட்டும்தான் கொஞ்சம் இடிக்கிறது. இருந்தாலும் கிராமத்தில் அப்படிப்பட்ட இளைஞர்களும் இருக்கத்தான் செய்வார்கள். தான் யார் என்பதை மறைத்து பாரதிராஜா குடும்பத்தினரைக் காப்பாற்ற அவர் செய்யும் முயற்சிகள் அவர் மீது கொஞ்சம் அனுதாபத்தை ஏற்படுத்தவும் செய்கிறது. அதிக அலட்டல் காட்டாத, இயல்பான சிம்புவை திரையில் பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறது. அதைத் தொடர்வாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

சிம்புவுக்கு இரண்டு காதலிகள். முதலில் அக்கா நந்திதா ஸ்வேதா காதலித்துவிட்டு பிரிந்துவிடுகிறார். அதன்பின் தங்கை நிதி அகர்வால் சிம்புவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். பூமி படத்தில் சாட்டிலைட் விட்டு தேடினாலும் கிடைக்காத நிதி அகர்வால் இந்தப் படத்தில் அடிக்கடி வந்து சிம்புவை சீண்டிவிட்டுப் போகிறார். இனி, வரும் படங்களில் நடிக்க வாய்ப்புள்ள படங்களைத் தேர்வு செய்தால் மட்டுமே தமிழ் சினிமாவில் முன்னேற முடியும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

சிம்புவின் நண்பனாக பாலசரவணன். எப்போதும் சிம்பு கூடவே இருக்கிறார். அவருடைய பங்கிற்கு அடிக்கடி சில காமெடி பன்ச்களை அடித்து சிரிக்க வைக்கிறார். மனைவியை இழந்த குடும்பத் தலைவராக, தன் வாரிசுகள் மீதும், சிம்பு மீதும் அதிக பாசம் வைத்துள்ளவராக சென்டிமென்ட்டில் நனைய வைக்கிறார் பாரதிராஜா. வில்லன் ஸ்டன்ட் சிவாவிற்கு அதிக வேலையில்லை. இரண்டு காட்சிகளில் ஆவேச வசனம் பேசிவிட்டு, கிளைமாக்சில் மட்டும் வந்து சண்டை போடுகிறார்.

தமன் இசைத்துள்ள பாடல்கள் போகப் போக ரசிக்க வைக்கலாம். ஆனால், எங்கேயோ கேட்ட டியூன்களாகவே இருக்கிறது. ஒரு கிராமத்து வீடு, தோட்டம், கொஞ்சம் வெளியிடங்கள் அதற்குள்ளாகவே என்ன சிறப்பாக காட்ட முடியுமோ அதைக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் திரு.

2 மணி நேரப் படத்தில் 3 பாடல்கள், சிம்பு பாம்புகளைப் பிடிக்கும் அந்த நீளமான காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி ஆகியவையே 40 நிமிடம் போய்விடும். மீதி உள்ள ஒரு மணி நேர காட்சிகளில் நச்னு நான்கு சீன்களாவது வைத்திருக்கலாம். எந்த அழுத்தமுமில்லாமல், மேலோட்டமாய் நகர்கின்றன. அப்படி சில காட்சிகளை வைத்திருந்தால் நிச்சயம் ரஜினி முருகன், கடைக்குட்டி சிங்கம் அளவிற்கு பெரிய வெற்றியைப் பெற்றிருக்கலாம்.

ஈஸ்வரன் - காப்பான்

 

ஈஸ்வரன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

ஈஸ்வரன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓