தினமலர் விமர்சனம்
விஷால் நடித்து, வெளிவந்திருக்கும் வால்டர் வெற்றிவேல் டைப் போலீஸ் ஸ்டோரி தான் பாயும் புலி படம் மொத்தமும்!
பணத்திற்காகவும், பதவி ஆசைக்காகவும் பெரும் தொழிலதிபர்களை கடத்தி கொல்லும் கும்பலுக்கும், அதை தட்டி கேட்க நியமிக்கப்பட்டிருக்கும் சிறப்பு போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் வெட்டு - குத்து, துப்பாக்கி - தோட்டா சண்டைகள் தான் பாயும் புலி படம் என்றால் மிகையல்ல!
மதுரையில் வாழ்ந்த தன்னலமற்ற அரசியல் தலைவர் ராமசாமியின் பேரன்கள் செல்வம் - சமுத்திரகனியும், ஜெயசீலன் - விஷால் இருவரும். அரசியலில் தாத்தா மாதிரி பெரும்புள்ளியாக வேண்டும் எனும் ஆர்வத்தில் அமைச்சர் ஆர்.கே.,வை நம்பி பின்னால் சுற்றிக்கொண்டிருக்கிறார் ராமசாமியின் மூத்த பேரனான சமுத்திரகனி. மறைந்த ராமசாமியின் இளைய பேரனனான என்-கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட், ஏசி ஜெயசீலன் - விஷால், மதுரையில் நடக்கும் பெரும் தொழிலதிபர்கள் கடத்தலையும், கொலைகளையும் தடுக்க களமிறங்குகிறார். கூடவே மதுரை பெரும்புள்ளி ஜெபி.,யின் மகள் காஜல் அகர்வாலை காதலிக்கவும் செய்யும் இந்த கடமை தவறாத காவல் அதிகாரி, காதலிலும், காவலிலும் ஜெய்த்தாரா.? இல்லையா..? எனும் கதையுடன் கான்ஸ்டபிள் சூரியின் சுரீர் காமெடி, அண்ணன் சமுத்திர கனியின் பதவி ஆசை படு கொலைகள், ஆர்கே.வின் அமைச்சர் தனம், எழுத்தாளர் அப்பா வேலா ராமமூர்த்தியின் பாசப்போராட்டம்... என லவ், ஆக்ஷ்ன், காமெடி, சென்ட்டிமென்ட், த்ரில்லர் என சகலத்திலும் சரிவிகித்தில் கலந்து பாயும் புலி பதுங்கி பளீச் என பாய முற்பட்டிருக்கிறது.
ஏசி ஜெயசீலனாக விஷால், துப்பாக்கியும் கையுமாக எவனாயிருந்தாலும் வெட்டுவேன்... வெட்டுவேன் என்பது போல் யாராக இருந்தாலும் பொட், பொட்டென்று சுட்டு தள்ளுகிறார். காஜல் அகர்வால் உடனான காதல் காட்சிகளிலும், டூயட் பாடல்களிலும் அளவோடு ஆடி வளமாக வாழ்ந்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் தன் அப்பாவையே கொல்லத் துணியும், தன் அண்ணன் சமுத்திர கனியை தீர்த்து கட்டிவிட்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் சீன்களில் கம்பீரமான போலீஸ் ஆபிஷராக ரசிகனை ஹேட்ஸ் ஆப் சொல்ல வைக்கிறார்.
கதாநாயகி காஜல் அகர்வால், பெரிய இடத்து பெண் - செளமியா எனும் பாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்திருக்கிறார். உடன் நடப்பவர்களை நம்பி சாலையை கடக்க முயலும் அவது சாதுர்யமும், டூவிலரில் யூ-டேர்ன் போட தெரியாததால், திரும்ப வேண்டிய இடங்களில் எல்லாம் இறங்கி வண்டியை தள்ளிக்கொண்டு செல்லும் சாதுர்யமும், அதை அடிக்கடி கண்டு, விஷாலுக்கு காஜல் மீது வரும் காதல் சுவாரஸ்யம்! விஷால் போலீஸ் என்பது தெரியாமல் தன் கண்ணெதிரே தாதாக்களை தீர்த்து கட்டும் விஷாலை, சீருடை அணிந்த போலீசிடம் போட்டுக் கொடுக்கும் தைரியமும் மேலும் சுவாரஸ்யமும்.
10 சென்ட் நிலத்திற்காக தன் கான்ஸ்டபிள் உத்யோகத்தை துஷ்பிரயோகம் செய்யும் சூரியின் காமெடி கலாட்டாக்களும், அடிக்கடி குடித்துவிட்டு வந்து அடாவடி மனைவியிடம் அவர் படும் பாடும், காசு கொடுத்து படம் பார்க்க வந்த ரசிகனின் வயிறை நிச்சயம் குலுங்க செய்யும்.
விஷாலுக்கு உதவும் நேர்மையான காவல் அதிகாரியாக ஆனந்தராஜ், அமைச்சராக வரும் ஆர்.கே., பெரும் தொழிலதிபராக காஜலின் அப்பாவாக வரும் ஜெயபிரகாஷ், பதவிவெறி பிடித்த கொலைபாதக அண்ணனாக வரும் சமுத்திரகனி, மனோஜ் குமார், அப்புக்குட்டி, அருள்தாஸ், ஹரீஷ், பிரின்ஸ், எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, ஐஸ்வர்யா தத்தா, முரளி சர்மா, பெங்களூரூ சாமி, கிரண், ராஜசிம்ஹன், ஒத்தப்பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டிருக்கும் நடிகை நிகிதா உள்ளிட்டவர்களில் நிகிதா மாதிரியே, வேலா ராமமூர்த்தி, சமுத்திரகனி, ஆர்கே., ஆனந்தராஜ்.. உள்ளிட்டவர்களின் நடிப்பு தியேட்டரை விட்டு வெளியில் வந்த பின்பும் கண்களை அகல மறுப்பது பாயும் புலி படத்திற்கு பெரும் ப்ளஸ்!
மதுரக்காரி..., நான் சூடான மோகினி..., யார் இந்த முயல் குட்டி..., சிலுக்கு மரமே... உள்ளிட்ட வைரமுத்துவின் வைர வரிகளும், அதற்கு டி.இமானின் இதமான இசையும் பாயும் புலியை பக்காவாக பாய செய்திருக்கின்றன. ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவு, பாயும் புலியை மேலும் பளிச்சென பாய செய்திருக்கிறது. ஆனாலும் சுசீந்திரனின் எழுத்து - இயக்கத்தில் பாயும் புலி, வால்டர் வெற்றிவேல் மாதிரி பழைய புளியாக தெரிவது சற்றே போரடிக்கிறது.
மொத்தத்தில், பாயும் புலி - விஷாலின் சீறும் சினிமா புலி!
-------------------------------------------------------------------
குமுதம் விமர்சனம்
'பாண்டியநாடு' படத்தில் ஹிட் கொடுத்த விஷால் - சுசீந்திரன் கூட்டணி என்பதால் எதிர்பார்ப்பு அதிகம். ஆனால் பாதிக் கிணறுக்குத்தான் இந்தப் புலியால் பாயமுடிந்திருக்கிறது.
மதுரையில் பணக்காரர்களாகப் பார்த்து மிரட்டி பணம் பறிக்கிறது ஒரு கும்பல். பணம் கொடுத்தால் உயிர், இல்லாவிடில் பிணம். இந்தக் கும்பலை வேரோடு சாய்க்க ஒரு போலீஸ் அதிகாரியாக விஷால். அவரும் சுட்டுச் சுட்டுத் தள்ளுகிறார்.
மாஃபியா கும்பல் தலைவன் தன் சொந்த அண்ணன் சமுத்திரக்கனி என்று தெரியவரும்போது மனசு சுடுகிறது. குடும்ப சென்டிமெண்டில் கொஞ்சம் கதை நிமிர்ந்து உட்கார்கிறது.
அசிஸ்டெண்ட் கமிஷனர் தோற்றத்திற்கு விஷாலின் உயரமும் மிடுக்கும் பொருந்துகிறது. ஆனால் காஜலுடனான டூயட் புலிப் பாய்ச்சலுக்கு ஸ்பீட் பிரேக். க்ளைமாக்ஸில் தன் அப்பாவைக் கொல்லத் துணியும் அண்ணனைத் தீர்த்துக் கட்டுவதில் காட்டும் ஆக்ரோஷமும் சகோதர பாசத்தில் தவிப்பதும் டாப். காஜலுக்கு காதலும் டூயட்டும் வாங்கிய சம்பளத்திற்காக 'தேமே' என்றாகிவிட்டது.
பின்பாதி படத்தைச் சுமப்பவர் அண்ணனாக வரும் சமுத்திரக்கனிதான். அரசியல் வெறிதான் தன்னை கெட்டவனாக செயல்பட வைத்தது என்று அவர் பணத்திற்காக செய்யும் கொலைகள் அதிர்ச்சிக்குப் பதிலாக எரிச்சலைத் தருகிறது.
மனைவியிடம் ஹெல்மெட்டோடு குளிக்கப்போய் மாட்டிக் கொள்ளும் சூரி மட்டுமே சிரிக்க வைக்கிறார்.
நேர்மையான காவல் அதிகாரியாக ஆனந்தராஜ், அமைச்சராக ஆர்.கே., காஜலின் பணக்கார அப்பாவாக ஜெயப்பிரகாஷ், மனோஜ்குமார், அருள்தாஸ், விஷாலின் அப்பாவாக வேலராமமூர்த்தி என்று பலரின் நடிப்பும் படத்திற்க பெரிய பக்கபலமே.
டி. இமானின் இசையில் 'மதுரக்காரி', 'சிலுக்குமரமே..' பாடல்கள் கேட்கும் ரகம். வேல்ராஜின் ஒளிப்பதிவு பளிச் பளிச். எடிட்டிங்கும் பெரிய ப்ளஸ். இவ்வளவு இருந்தும் இயக்குநரால் படத்தைத் தூக்கி நிறுத்த முடியவில்லை. கிளைமாக்ஸால் மட்டுமே சுசீந்திரன் பாய்கிறார்.
பாயும் புலி: பாதிக் கிணறு பாய்ந்த புலி.
குமுதம் ரேட்டிங்: ஓகே