ஜீனியஸ்,Genius

ஜீனியஸ் - சினி விழா ↓

Advertisement
2

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ரோஷன், பிரியா லால் மற்றும் பலர்
தயாரிப்பு - சுதேசிவுட் பிலிம்ஸ்
இயக்கம் - சுசீந்திரன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
வெளியான தேதி - 26 அக்டோபர் 2018
நேரம் - 1 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 2/5

பொழுதுபோக்குப் படங்களுக்கு மத்தியில் மக்களிடையே உள்ள பிரச்சினைகளைப் பற்றிய கதைகளைக் கொண்ட படங்கள் அதிகமாக வருவதேயில்லை. காலம் மாற மாற வாழ்க்கை முறையும் மாறிக் கொண்டே இருக்கிறது.

படிப்பு, விளையாட்டு, வேலை, குடும்பம் என ஒன்றுக்கொன்று இணைந்திருந்த நமது வாழ்க்கை முறை பல்வேறு சூழ்நிலைகளின் காரணமாக எப்படி எப்படியோ மாறிவிட்டது.

குழந்தைகளிடத்தில் படிப்பு, படிப்பு என அவர்களை வேறு எதிலும் ஈடுபட வைக்காமல் வாட்டி வதைக்கும் பெற்றோர்கள்தான் இந்தக் காலத்தில் அதிகம். படிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல, அவர்களை குழந்தைப் பருவத்து மகிழ்வுகளை அனுபவிக்க வைக்க வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் வந்திருக்கும் படம் தான் இந்த ஜீனியஸ்.

ஒரு நல்ல கருத்தை மையமாக எடுத்துக் கொண்டதற்காக இயக்குனர் சுசீந்திரனைப் பாராட்டலாம். சிறுவர், சிறுமியர்களும் பார்க்க வேண்டிய படம். அதே சமயம், மசாஜ் பார்லர், விபச்சார விடுதி என குழந்தைகளுடன் பார்க்க முடியாதபடியான காட்சிகளை இந்தப் படத்தில் வைத்து முகம் சுளிக்க வைத்துவிட்டார். நாயகன் குணமடைவதற்கு வேறு வழியே கிடையாதா, வேறு காரணங்களை சொல்லியிருந்தால் கூட சகித்துக் கொள்ளலாம். ஆனால், இயக்குனர் எதனால் நாயகன் குணமடைந்தார் என்பதை சொல்லியிருக்கும் காரணத்தை சகித்துக் கொள்ள முடியாது.

நாயகன் ரோஷன் சிறுவயதிலிருந்தே நன்றாகப் படிப்பவர். ஒரு பள்ளி விழாவில்தான் மகனின் படிப்புத் திறமை அப்பா நரேனுக்குத் தெரிய வருகிறது. அதன் பின், மகனை படிப்பு, படிப்பு, படிப்பு என அதில் மட்டுமே கவனம் செலுத்த வைத்து வேறு எதிலும் அவனை ஈடுபட வைக்கவிடாமல் செய்கிறார். வளர்ந்து பெரியவனாகி, வேலைக்குப் போன பிறகு அலுவலகத்தில் உள்ள டென்ஷனாலும், தனக்குத் தானே பேசிக் கொண்டு மனநலம் பாதிப்படைகிறது ரோஷனுக்கு. அவரை குணப்படுத்த என்னவெல்லாமோ செய்கிறார்கள். ஆனால், ஒரு இடத்திற்கு சென்றதும் அவர் குணமாகிவிடுகிறார். இதுதான் படத்தின் கதை.

அப்பாவித்தனமான, படிப்புத் திலகம் கதாபாத்திரம் அறிமுக நாயகன் ரோஷனுக்குப் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது. நடிப்பில் இருக்க வேண்டிய முதிர்ச்சி, தோற்றத்தில் இருக்கிறது. அவரை இளைஞராக ஏற்றுக் கொள்வதில்தான் சிக்கல். தனக்குத் தானே எப்போதுமே பேசிக் கொண்டிருக்கும் கதாபாத்திரம் என்பதால் அவரை ஏதாவது பேச வைத்துவிட்டு படமாக்கியதும் எளிதாக இருந்திருக்கும். இருப்பினும், முதல் படத்திலேயே மோசமில்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரோஷன்.

படத்தின் கதாநாயகியாக பிரியா லால். முதல் படத்திலேயே பலரும் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் கிளைமாக்சுக்கு முன்பாகத்தான் கதாநாயகியே படத்தில் வருகிறார். கிடைத்த காட்சிகளில் பிரியாவின் நடிப்பு அனுதாபத்தை அள்ளிவிடுகிறது.

அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒருவர் படம் முழுவதும் வருவது தமிழ் சினிமாவில் ஆச்சரியம்தான். அப்படி ஒரு வாய்ப்பு ஆடுகளம் நரேனுக்குக் கிடைத்திருக்கிறது. இந்தக் காலத்து பல அப்பாக்களை அவரது கதாபாத்திரத்தில் பிரதிபலித்திருக்கிறார். மீரா கிருஷ்ணன், சிங்கம்புலி இருவருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம். ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி இரண்டே காட்சிகளில் வருகிறார்கள்.

யுவன்ஷங்கர் ராஜா கடமைக்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் டைட்டில் இசையே ஏனோ தானோவென இருக்கிறது. மனதைத் தொடும் பாடல்களைக் கொடுக்க படத்தில் சில நல்ல சிச்சுவேஷன்கள் உள்ளன. ஆனாலும், பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை.

சாப்ட்வேர் கம்பெனிகளில் எப்படியெல்லாம் பிழிந்தெடுக்கிறார்கள் என்பதைக் காட்டி பயமுறுத்துகிறார்கள். ஏமாந்தவர்கள் ஏறி மிதிக்கும் கார்ப்பரேட் அரசியல் ஒரு காட்சியிலேயே வெளிப்படுகிறது.

படத்தில் குறிப்பிடத்தக்க எந்த திருப்புமுனையும் திரைக்கதையில் இல்லை. அதிகமாகப் படிப்பதனால் குழந்தைகளின் மனதில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதை சில காட்சிகளில் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். நாயகனின் மனநலம் மாறுகிறது என்று மட்டும் சொல்லிவிட்டார்கள். அதுவும் அவன் படித்து முடித்து வேலைக்குப் போனபின்தான் வருகிறது.

இன்னும் சில காட்சிகளைச் சேர்த்து முழுமையான பாடமாகக் கொடுத்திருந்தாலும் தப்பில்லை.

ஜீனியஸ் - பிலோ ஆவரேஜ்

 

பட குழுவினர்

ஜீனியஸ்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓