சாம்பியன்,Champion
Advertisement
3

விமர்சனம்

Advertisement

சாம்பியன் - விமர்சனம்

தயாரிப்பு - களஞ்சியம் சினி ஆர்ட்ஸ்


இயக்கம் - சுசீந்திரன்


இசை - அரோல் கொரேலி


நடிப்பு - விஷ்வா, மிருணாளினி, சௌமிகா, நரேன்



அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்து வெளிவந்த பிகில் படத்தின் எளிமையான, யதார்த்தமான ஒரு வெர்ஷன் தான் இந்த சாம்பியன்.



பிகில் படமே கென்னடி கிளப், கனா உள்ளிட்ட சில விளையாட்டுப் படங்களின் காட்சிகளுடன் கூடிய படமாகத்தான் அமைந்தது.



கென்னடி கிளப் படத்தை இயக்கிய சுசீந்திரன் தான் இந்த சாம்பியன் படத்தையும் இயக்கி இருக்கிறார். இதற்கு முன்பு வெண்ணிலா கபடி குழு, ஜீவா என இரண்டு உணர்வு பூர்வன விளையாட்டுப் படங்களை இயக்கியவர்தான் சுசீந்திரன். இந்த சாம்பியன் படத்தையும் உணர்வுபூர்வமாகவே கொடுத்திருக்கிறார்.



எந்தப் படமாக இருந்தாலும் அதில் ஒரு எமோஷன் இருந்தால் அது படம் பார்க்க வரும் பார்வையாளனை ஈர்க்கும் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் சுசீந்திரன். அது இந்தப் படத்திலும் சரியாகவே அமைந்துள்ளது.



மீண்டும் ஒரு வட சென்னை விளையாட்டுப் படமா என படம் ஆரம்பிக்கும் போதே ஒரு சலிப்பு நமக்குள் வருகிறது. அதையும் மீறி கதைக் களத்தாலும், யதார்த்தமான கதாபாத்திரங்களாலும் தொடர்ந்து படம் பார்க்கும் நமக்கு அந்த சலிப்பு வராமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர். அதற்கு படத்தின் திட்டமான நீளமும் உதவி புரிந்திருக்கிறது.



வட சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்து பையனான விஷ்வா-விற்கு சிறு வயதிலிருந்தே கால்பந்தாட்டம் என்றால் உயிர். ஆனால், அதை விளையாடப் போனால் அவருடைய விதவை அம்மா அடித்து உதைப்பார். இருப்பினும் அம்மாவுக்குத் தெரியாமலேயே கால்பந்து விளையாடி சிறந்த வீரராகிறார். கல்லூரியில் படிக்கும் போது பெரிய கோச்சிங் கிளப்பில் சேர்ந்து பயிற்சி எடுக்க விரும்புகிறார். சிறு தடைக்குப் பின்பு நரேன் நடத்தும் கோச்சிங் கிளப்பில் சேர்கிறார். இதனிடையே, ஒரு சந்தர்ப்பத்தில் தன்னுடைய அப்பா மனோஜை அந்த ஏரியா கவுன்சிலர் சிவா தான் கொலை செய்தார் என்ற உண்மை விஷ்வாவிற்குத் தெரிய வருகிறது. அப்பாவைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறார். ஆனால், ஒரு பக்கம் கோச் நரேன் அதைத் தடுத்து கால்பந்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என கண்டிக்கிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.



ஏழை இளைஞன் ஜோன்ஸ் கதாபாத்திரத்தில் அறிமுக நடிகர் என்று சொல்ல முடியாதபடி அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமாக நடித்திருக்கிறார் விஷ்வா. அமெரிக்காவில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு வந்தவராம். ஆனால், வியாசர்பாடி இளைஞனாக, கரடு, முரடாக கதாபாத்திற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். நிஜமான கால்பந்து வீரராகவே தெரிகிறார். அதற்கான ஒரு வருடப் பயிற்சி அவருக்கு உதவியிருக்கிறது. நடிப்புக்கு மட்டும் பயிற்சி தேவையில்லை, விளையாட்டு வீரர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்ம் பயிற்சி அவசியம் என்பது புரிகிறது.



படத்தில் இரண்டு கதாநாயகிகள், சௌமிகா, மிருணாளினி. விஷ்வா பள்ளியில் படிக்கும் போது அவரைக் காதலிப்பவராக சௌமிகா, கல்லூரியில் படிக்கும் போது காதலிப்பவராக மிருணாளினி. இருவருக்கும் அதிக வேலையில்லை, இருந்தாலும் யதார்த்தமான கதாபாத்திரங்களில் அவர்களுடைய நடிப்பு பொருத்தமாய் அமைந்துள்ளது.



கால்பந்து கோச் ஆக நரேன். கைதி படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகனின் அம்மாவாக வாசவி, அப்பாவாக மனோஜ் பாரதிராஜா, வில்லனாக ஸ்டன் சிவா ஆகியோரின் நடிப்பும் குறிப்பிடும்படி உள்ளது.



அரோல் கொரேலி இசையமைப்பில் பின்னணி இசை உயிரோட்டமாகவே உள்ளது. வட சென்னை பகுதிகளை அதன் இயல்பு மாறாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்.



இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே மொத்த படமும் முடிவடைவதும், தேவையில்லாத காட்சிகள் இல்லாததும் படத்திற்கு பிளஸ் பாயின்ட். காதல் காட்சிகள் மட்டும் சினிமாத்தனமாக உள்ளது. மற்றபடி ரசிக்கும்படியான ஒரு ஆக்ஷன் ஸ்போர்ட்ஸ் படம்தான் இந்த சாம்பியன்.

 

சாம்பியன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சாம்பியன்

  • நடிகர்
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓