Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

மாவீரன் கிட்டு

மாவீரன் கிட்டு,maveeran kittu
20 டிச, 2016 - 10:22 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மாவீரன் கிட்டு

நல்லுசாமி பிக்சர்ஸ் - ஆசியன் சினிகம்பைன்ஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா ஜோடி நடிக்க டி.இமான் இசையில் பல ஆண்டுகளுக்கு முன் தென் மாவட்டங்களில் தலை விரித்தாடிய ஜாதீய வன்முறைகளை, அடக்கு முறைகளை காட்சிப்படுத்தி வந்திருக்கும் திரைப்படம் தான் "மாவீரன் கிட்டு."

மதுரை மாவட்டம், பழனி., அருகில் உள்ள புதூர் எனும் கிராம பகுதியில் கீழக் கோட்டையில் கூலி வேலை செய்யும் ஜாதியினரும் மேல கோட்டையில் அவர்களுக்கு படியளக்கும் மேல் ஜாதியினரும் வசிக்கின்றனர். அவர்களுக்கு இடையே பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஜாதி மோதல்களையும் அதனால் சுடுகாட்டு வசதி, பேருந்து வசதி படிப்பு அறிவு, படுக்கை வசதின்னு... சகலத்திலும் விளைந்த புரட்சிகளையும் பேசியிருக்கும் கதையை உள்ளடக்கிய இப்படத்தில் கீழ கோட்டையை சார்ந்த நாயகர்கிட்டு எனும் கிருஷ்ணகுமாராக வரும் விஷ்ணு விஷாலுக்கும், மேல கோட்டையைச் சார்ந்த நாயகி கோமதி எனும் ஸ்ரீதிவ்யாவுடன் கல்லூரிக்கு படிக்கப் போன இடத்தில் காதல். அதிகாரமும் அந்தஸ்த்தும் நிரம்பிய மேல் ஜாதியினரை மீறி, புரட்சியாளராக வரும் உப நாயகர் சின்ராசு - பார்த்திபன் உதவியுடன் அவர்களது காதல் ஒன்று சேர்ந்ததா இல்லையா? என்பது தான் மாவீரன் கிட்டு படத்தின் கரு, கதை, களம், காட்சிப்படுத்தல் எல்லாம்.


கிட்டு எனும் கீழ கோட்டையைச் சார்ந்த கிருஷ்ணகுமாராக விஷ்ணு விஷால்., பள்ளி இறுதியாண்டில் ஆயிரத்து சொச்சம் மார்க் எடுத்து வர ஐஏஎஸ் கனவுடன் கூடிய ஏழை வாலிபராக அசத்தலாக நடித்திருக்கிறார். கோமதியாக வரும் ஸ்ரீதிவ்யாவுடனான இவரது, காதல் காட்சிகளும் கவனம் ஈர்க்கின்றன. அதே மாதிரி, விஷ்ணு விஷால், பாம்பு கடித்த பெண்ணை 6 மைலுக்கு அப்பால் உள்ள ஆஸ்பிடலுக்கு நண்பர்கள் உதவியுடன் தூக்கிச் செலல்லும் அறிவார்த்த காட்சியிலும் கவனம் ஈர்க்கிறார்.


கோமதியாக வரும் ஸ்ரீதிவ்யா அடக்க ஒடுக்கமான பெரிய குடும்பத்து பெண்ணாக பக்காவாக பளிச்சிட்டிருக்கிறார். ஜாதி வெறி பிடித்த அக்கா புருஷனின் அடாவடிக்கு பயந்து., போனில் தன்னிடம் பேசும் தலைமறைவு விஷ்ணு விஷாலிடம் அழுது கொண்டே இருக்குமிடம் கேட்கும் இடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் அம்மணி!


சின்ராசாக வரும் பார்த்திபன் புரட்சியாளராக புகுந்து விளையாட முற்பட்டிருக்கிறார். கருப்பு சட்டையை போட்டுக் கொண்டு பேச்சளவிலேயே புரட்சி செய்யும் பார்த்திபன்.,. ஆங்காங்கே, வழக்கமான பார்த்திபனாக தெரிவது பலவீனம்.


காமெடி சூரி, காமெடி எதுவும் செய்யாமல் தன்னை ஆளாக்கிவிட்ட சுசீந்திரனுக்காக அடக்கி வாசித்திருக்கிறார்.


மேல்ஜாதி போலீஸ் ஹரீஷ் உத்தமனும், அவரது பிரசிடென்ட் அப்பா நாகி நீடுவும் மேல் ஜாதி வில்லத்தனத்தில் பக்கா. ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வந்து அகால மரணமடையும் கயல் பெராரே, சூப்பர் குட் சுப்பிரமணி.


காசி விஸ்வநாதனின் படத்தொகுப்பு கச்சிதம் என்றாலும் சில இழுவை காட்சிகளில் கத்திரியை இவர் ,இன்னும் பயன்படுத்தியிருக்கலாமோ ? என யோசிக்கவைக்கிறார். கே.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவில் பழைய மதுரை மாவட்ட பழனி பகுதிகள் பக்காவாக பளிச்சிடுகின்றன .


"உயிரெல்லாம் ஒன்றே... ", "இளம் தாரி சொல்லு என்ன வேணும்..?", "உன் கூட துணையாக நான் வரவேணுமே....", "கண்ணடிக்கலை கைபிடிக்கலை..." உள்ளிட்ட பாடல்கள் டி.இமானின் இசையில் கதையோடு ஒட்டி உறவாடும் கானங்களாக காதுகளுக்கு விருந்தளிக்கின்றன. பின்னணி இசையிலும் பெரிதாய் குறையொன்றுமில்லை.


"செருப்பை காலில் தான் போடணும், பரவாயில்லைன்னு தலையில தூக்கி வச்சிக்க முடியுமா...", "இப்போ, நம்ப ஐயாவோட சடலம் அவங்க தெரு வழியா வந்துடுச்சுல்ல... அதே மாதிரி அவங்கத் தெரு வழியா நாமும் ஒரு நா வருவோம்... நம்பிக்கையா இருங்க...", "ஆசை காட்டி ஏமாத்தி கூட்டிட்டு போயிட்டாங்கங்கறது நம்ம புள்ளைங்களை நரமளே அசிங்கப் படுத்துற மாதிரியில்லய்யா...", "இன்றைக்கு இவங்களுக்கு ஒண்ணுன்னா வந்து கூட்டிட்டுப் போற நீ, நாளைக்கு இந்த இடத்துல நீயே வந்து உட்கார்ந்தாலும் இப்படி கை நீட்டி பேசுற நீ ஒரு நாள் எனக்கு முன்னாடி கைகட்டி நிற்கிற நிலமையும் வரும் " , "சட்டம் ஒழுங்கை காபந்து செய்யறுதுக்காக கலைஞ்சு போன்னு சொல்றீங்களே... சட்டம் ஒழுங்கா இருந்தா நாங்க ஏன் சார் கூடுறோம்...?" என்பது உள்ளிட்ட படம் முழுக்க ஆளாளுக்கு பேசும் புரட்சி "பன்ச்" வசனங்கள் இப்படத்திற்கு வசனமெழுதியுள்ள பாடலாசிரியர் யுகபாரதியின் வரிகளில், சாமான்யனையும் கன்னத்தில் அறைந்து கவருகின்றன.


பாம்பு கடித்த காட்சி, பஸ் விடும் காட்சி, பிணத்தை மேலத்தெரு வழியாக தூக்க வைக்கும் காட்சி... உள்பட, சுசீந்திரனின் எழுத்து, இயக்கத்தில் எக்கச்சக்க காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. ஆனாலும், ஜாதிய வேறுபாடுகள் மறைந்து, மறந்து வரும் இன்றைய தலைமுறைக்கு இப்படி ஒரு கதையும், படமும் இக்காலத்தில் அவசியமா? என்பதை இன்னும் ஆராய்ந்து இயக்குனர் படமாக்கியிருக்கலாம் என்பது.. நம் கருத்து மட்டுமல்ல... பெருவாரியான ரசிகர்களின் கருத்தாகவும் இருக்கும் என நம்பலாம்!


மொத்தத்தில், "மாவீரன் கிட்டு - சில பல கருத்து வேறுபாடுகள், மாறுபாடுகள் நிரம்பிய படமென்றாலும், நிச்சயம், ரசிகனின் மனதை தொட்டு தாலாட்டும்... என நம்பலாம்!"

---------------------------------------------------------------

குமுதம் விமர்சனம்


உரிமைக்காக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒலிக்கும் குரல்களும் போராட்டங்களும் எவ்வாறு நசுக்கப்படுகின்றன என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கும் படம் 'மாவீரன் கிட்டு'.

பொதுவழியில் தலித்தின் பிணம் ஏன் போகக்கூடாது ஆணும் பெண்ணும் விரும்பிச் சேர்வதில் சாதிக்கு அங்கே என்ன வேலை இருக்கிறது? எனறு கேட்கும் கேள்விகள் ஏராளம்.

கதை என்று பார்த்தால் காலந்தோறும் நடைமுறையில் நிகழ்வதும் தமிழ் சினிமாவில் பேசப்பட்டதும்தான் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்ற மாணவன் மாநிலத்தில் முதல் மார்க் வாங்குகிறான். கலெக்டராகிவிட்டால் தன் இன மக்களுக்கு ஒரு விடிவுகாலத்தைக் கொடுக்கலாம் என்று ஆசைப்படுகிறான். அதைப் பிடிக்காத ஆதிக்க சாதியினர் அவனை ஒரு கொலை வழக்கில் சிக்கவைத்து அவன் கனவுகளை சிதைக்கிறார்கள். அதில் அவன் வென்று தன் மக்களுக்கான உரிமையை வாங்கித் தந்தானா என்பதுதான் படம் முழுக்கப் பேசப்படும் விஷயம்.

கிட்டுவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் விஷ்ணுவிஷால். பாக்யராஜ் ஸ்டைல் கிராமத்து இளைஞனுக்குப் பொருத்தம். பாம்பு கடித்த மேல் ஜாதி பெண்ணைத் தொட்டுத் தூக்கிக் காப்பாற்றும் விஷ்ணு யதார்த்தம். அதெப்படி நீ அவளைத் தொட்டுத் தூக்கலாம் என்று விஷ்ணு கன்னத்தில் அறையும் மேல் சாதிக்காரனிடம் தப்புதான் மன்னிச்சிடுங்க என்பது சினிமாவில் காணாத படுயதார்த்தம். சபாஷ்.

ஸ்ரீதிவ்யா கிராமத்து அழகை பூசிக் கொண்டாலும், சினிமாத்தனம் இல்லாமல் நடித்திருப்பது அழகு.

படத்தின் ஹீரோ பார்த்திபன் என்று சொல்லும் அளவிற்கு அத்தனை நிறைவு அவர் நடிப்பில். சின்ராசு அண்ணனாக வந்து பல இளைஞர்களின் ரோல் மாடலாகிறார்.

சாதி வெறி பிடித்த வில்லனாக வரும் நாகிநீடு, இன்ஸ்பெக்டர் செல்வராஜாக வரும் ஹரீஷ் உத்தமன் ஆகியோர் கச்சிதம். ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வரும் ஃபெரெரா, உயர்சாதிக்காரர் என்றபோதும் மனிதநேயம் துளிர்க்க வைக்கும் பாத்திரம்.

சூரிக்கு குணச்சித்திர பாத்திரம் என்றாலும் அவரது பங்கு குறைவு.

வசனம் படத்தின் இன்னொரு ஹீரோ. 'காலங்காலமா அடிவாங்கிட்டிருந்தவன் திரும்பி அடிச்சா திமிருங்கிறாங்க' ஒரு உதாரணம்.

ஒளிப்பதிவு எண்பதுகளின் பின்னணியையும், கொடைக்கானலின் அழகையும் அள்ளி நம்முன் கொட்டுகிறது. டி. இமானின் இசை இனிமை.

'அவன் உரிமையைத்தானே கேட்கிறான்' என்று ஆதிக்க சாதிக்கு புரியவைக்கும்படியான திரைக்கதையை உருவாக்கிய இயக்குநர் சுசீந்திரனைப் பாராட்டலாம்.


மாவீரன் கிட்டு: சாதிவெறிக்குக் குட்டு!


குமுதம் ரேட்டிங்: ஓகேவாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in