2

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் - சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி, ஹரிஷ் உத்தமன்

இயக்கம் - சுசீந்திரன்

இசை - டி. இமான்

தயாரிப்பு - அன்னை பிலிம் பேக்டரி

நெஞ்சில் துணிவிருந்தால்.... என்ன ஒரு அற்புதமான தலைப்பு. ஆனால், தலைப்புக்கேற்ற ஒரு தரமான படத்தைக் கொடுக்காமல் ஏனோ, தானோ என ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

இதை எப்படிப்பட்ட படமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரியவில்லை. நட்புக்கு முக்கியத்துவம் தருகிறாரா, தங்கைப் பாசத்துக்கு முக்கியத்துவம் தருகிறாரா, காதலுக்கு முக்கியத்துவம் தருகிறாரா, அல்லது மருத்துவம் பற்றிய சமூக சிந்தனைக்கு முக்கியத்துவம் தருகிறாரா என்பதுதான் குழப்பம். ஒன்றிற்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் அனைத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என நினைத்து திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

அப்பாவை இழந்த சந்தீப், அம்மா, தங்கை என வாழும் நடுத்தரக் குடும்பத்து இளைஞன். அவருடைய நெருங்கிய நண்பர் விக்ராந்த். சந்தீப்பின் தங்கையும், விக்ராந்தும் காதலிக்கிறார்கள். இந்தக் காதல் பற்றி சந்தீப்புக்கும், அவரது அம்மாவுக்கும் தெரியாது. இருவருக்கும் அந்தக் காதல் விவகாரம் தெரிய வரும் சமயத்தில் விக்ராந்தை யாரோ கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். இருந்தாலும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து விக்ராந்தைக் காப்பாற்றி, அவரைக் கொலை செய்ய முயற்சிப்பது யார் என்பதைக் கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார் சந்தீப். அவர்களைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

நெஞ்சில் துணிவிருந்தால் என்பது ஒரு ஆக்ஷ்ன் படத்திற்கான தலைப்பு. ஆனால், படத்தின் நாயகன் சந்தீப் அவருடைய துணிச்சலைக் காட்டுவதற்கு படத்தில் காட்சிகளே இல்லை. கிளைமாக்சில் மட்டும் பொங்கி எழுந்து சண்டை போடுகிறார். ஒரே ஒரு இடத்தில் மட்டும் மருத்துவத் துறை பற்றி ஆவேசமாகப் பேசுகிறார்.

படத்தின் இரண்டாவது கதாநாயகன் விக்ராந்த். இன்னும் எத்தனை படத்தில்தான் இப்படி நடிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. நாயகனுக்கு நண்பனாகவே நடித்துக் கொண்டிருந்தால் அப்படியே முத்திரை குத்தி விடுவார்கள். இனி, இது போன்ற கதாபாத்திரங்களை அவர் தவிர்ப்பது அவரது எதிர்காலத்திற்கு நல்லது.

படத்தின் நாயகியாக மெஹ்ரீன். அவர் உதட்டசைவு ஒரு மாதிரி இருக்கிறது, வசன உச்சரிப்பு வேறு மாதிரி இருக்கிறது. ஏதோ, டப்பிங் பட நாயகியைப் பார்ப்பது போலவே இருக்கிறது. அழகாக இருந்தால் மட்டும் போதாது, நடிக்கவும் வேண்டும். அதனால்தான், அவருக்குப் படத்தில் நான்கைந்து காட்சிகளை மட்டுமே வைத்து கழற்றி விட்டிருக்கிறார் இயக்குனர்.

சுசீந்திரன் படத்தில் சூரி இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கென ஒரு கதாபாத்திரம். அவரைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேறு ஒன்றுமில்லை.

சந்தீப்பின் அம்மாவாக துளசி, அப்படி ஒரு ஓவர் ஆக்டிங். மீட்டருக்கு மேல் அதிகமாகவே நடிக்கிறார். சந்தீப்பின் தங்கையாக ஷாதிகா, தமிழ் சினிமாவுக்குப் பொருத்தமான நடுத்தரக் குடும்பத்து தங்கை.

வில்லனாக ஹரீஷ் உத்தமன். பல படங்களில் பார்த்து சலித்துப் போன ஒரு கதாபாத்திரம். எப்போதும் சிகரெட் பிடித்துக் கொண்டு, திமிராக நடப்பது மட்டுமே வில்லத்தனம் அல்ல. அது பார்வையிலேயே வரவேண்டும். ஹரீஷுக்கு அப்படியெல்லாம் வரவில்லை.

இமான் இசையில் ஒரு பாடல் கூட இனிமையாக இல்லை. முதல் பாதியில் ஒன்றுமே இல்லாமல் கதை நகர்கிறது. எந்த ஒரு அழுத்தமான காட்சிகளும் இல்லை. இடைவேளைக்குப் பின்னர்தான் கொஞ்சம் பரபரப்பாகப் போகிறது. கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் இதற்கு முன் எத்தனையோ முறை பார்த்து சலித்துப் போன ஒன்று. படத்தில் புதிதாக எதுவுமே இல்லை என்பது பெரும் குறை.

வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு போன்ற நல்ல படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் சுசீந்திரன். அத்தனை நல்ல படங்களைக் கொடுத்தாலும், அவருடைய ராஜபாட்டை படம் அவருடைய இமேஜைக் குறைத்த ஒரு படம்.

இந்த நெஞ்சில் துணிவிருந்தால் படம், சுசீந்திரனின் பட வரிசையில் ராஜாபாட்டை வரிசையில் தான் சேரும்.

 

பட குழுவினர்

நெஞ்சில் துணிவிருந்தால்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓