3.25

விமர்சனம்

Advertisement

நடிகர்கள் - விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன்
இயக்கம் - ஆனந்த்சங்கர்
இசை - சாம் சிஎஸ்
தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்
வெளியான தேதி - 5 அக்டோபர் 2018
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தமிழ் சினிமாவில் ஒரு முழுமையான அரசியல் படத்தைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையை இந்தப் படத்தின் மூலம் தீர்த்து வைத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் சங்கர்.

தமிழ் சினிமாவையும், தமிழ்நாட்டு அரசியலையும் பிரிக்க முடியாது. அப்படி ஒன்றுக்கொன்று இரண்டறக் கலந்தது. இன்று இங்குள்ள முன்னணி ஹீரோக்களே நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் தெலுங்கிலிருந்து ஒரு ஹீரோவை அழைத்து வந்து நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

தமிழ் பேசத் தெரியாத ஒரு தெலுங்கு ஹீரோ எந்தவிதமான தெலுங்கு சாயலும் இல்லாமல் தமிழை இந்த அளவிற்கு நேசித்து, பயிற்சி பெற்று, பேசி நடித்திருப்பது மிகப் பெரிய விஷயம். அதற்காகவே படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டாவுக்கு கள்ள ஓட்டுக்களைக் கூட தாராளமாகக் குத்தலாம்.

தன் மீது விரைவில் வர உள்ள ஒரு வழக்கு கைது நடவடிக்கைக்காக, ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் மகன் விஜய் தேவரகொண்டாவை தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்குகிறார் அப்பா நாசர். வேண்டா வெறுப்பாக பதவியேற்கும் விஜய், அதன்பின் அந்தப் பதவியில் இருந்தால் என்னவெல்லாம் செய்யலாம் என பத்திரிகையாளர் சத்யராஜ் ஆலோசனைப்படி அதிரடி அரசியல் ஆட்டத்தில் இறங்குகிறார். அந்த ஆட்டத்தில் அவர் எப்படிப்பட்ட எதிர்ப்புகளை சம்பாதிக்கிறார், அவற்றை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் இந்த நோட்டாவின் கதை.

தமிழ்நாட்டில் தற்போது மழை பெய்து கொண்டு ரெட் அலர்ட் என்று பரபரத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ் தேசத்திற்கு விஜய் தேவரகொண்டா என்ற ஒரு புயல் வந்து இறங்கியிருக்கிறது. இது இங்குள்ள ஹீரோக்களுக்கும் ஒரு ரெட் அலர்ட் தான். சூர்யர், அஜித் கலந்த ஒரு கலவையாக இருக்கிறார் விஜய் தேவரகொன்டா. ஜாலியாக சுற்றித் திரிந்து கொண்டிருப்பவர் பேருந்து எரிக்கப்பட்ட ஒரு சம்பத்தின் போது பத்திரிகையாளர்களை நோக்கி மிரட்டலாகப் பேசும் அந்த ஒரு காட்சி போதும் அவருடைய நடிப்பைப் பற்றி சொல்ல. அதன்பின் ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய அதிரடி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இந்த நோட்டா விஜய்க்கு தமிழிலும் ஒரு சிறப்பான அறிமுகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

படத்தின் இரண்டு முக்கிய புள்ளிகள் சத்யராஜ், நாசர். இவர்களில் நாசர் முதல்வராக இருந்து பதவி விலகியவர், சத்யராஜ் ஒரு பத்திரிகையாளர். இவர்களிருவருக்கும் படத்தில் என்ன தொடர்பு என்பது எதிர்பாராத சஸ்பென்ஸ். நாசர், சொல்லவே வேண்டாம், வழக்கம் போலவே அற்புதமாக நடித்திருக்கிறார். அரசியல் என்றால் என்ன என்பது அவருடைய முகபாவத்துடன் மட்டுமல்ல, குரலிலும், வசன உச்சரிப்பிலும் கூடத் தெரிகிறது.

ஒரு அரசியல் படத்தில் சத்யராஜ் இருக்கிறார் என்றால் சொல்லவா வேண்டும். எங்கெல்லாம் கேப் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அரசியல் பன்ச்களை புகுத்தி கைத்தட்டலை வாங்கிவிடுகிறார். இவர் மீது விஜய்க்கு ஏன் அவ்வளவு மரியாதை என்பதைக் காட்டுவதற்காகவாது ஒரு காட்சியை வைத்திருக்கலாம்.

படத்தின் நாயகி என்று மெஹ்ரீன்--ஐ சொல்வதை விட எதிர்க்கட்சித் தலைவரின் வாரிசாக வரும் சஞ்சனா-வைச் சொல்லலாம். படத்தில் இவருடைய கதாபாத்திரப் பெயரான கயல் என்பதும், இவருடைய தோற்றமும் தற்போதைய பெண் வாரிசு அரசியல் பிரமுகரை ஞாபகப்படுத்துகிறது. முதல் படத்திலேயே முத்திரை பதிக்கும் ஒரு கதாபாத்திரம், அந்த வாய்ப்பை சஞ்சனா வீணாக்கவில்லை. மெஹ்ரீன் படத்தின் ஆரம்பத்தில் ஒரே ஒரு கேள்வி கேட்கிறார். அதன்பின் அவருக்கு முக்கியத்துவமில்லை.

அரசியல் என்றாலே வலது கரம் இல்லாமலா ?, அப்படி ஒரு வலதுகரமாக எம்.எஸ்.பாஸ்கர். ஒரு உண்மையான வலது கரம் எப்படி இருப்பார் என்பதை இவரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

சாம் சிஎஸ் இசையில் இரண்டு துள்ளல் பாடல்கள் மட்டுமே இருக்கின்றன. மற்றபடி பின்னணி இசையில் எந்த பாதகமும் செய்யாமல் படத்தின் ஜீவனைக் கூட்டியிருக்கிறார்.

படத்திற்கு பலமான காட்சிகள் பல உள்ளன. அவை இன்றைய அரசியல் காட்சிகள் , கடந்து போன சில அரசியல் காட்சிகள் ஆகியவற்றை ஞாபகப்படுத்துகின்றன. முதல்வரைப் பார்த்து மந்திரிகள், எம்எல்ஏக்கள் குனிவது, செம்பரம்பாக்க ஏரி திறப்பு சம்பவம், ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் குடித்துவிட்டு அமர்க்களம் செய்வது, ஆஸ்பிட்டல் காட்சி, ஸ்டிக்கர் மேட்டர், இடைத்தேர்தல், கார்ப்பரேட் சாமியார் என காட்சிகள் வரும் போது தியேட்டரில் கைதட்டல் அதிகமாகவே ஒலிக்கிறது.

இடைவேளைக்குப் பின் பரபரப்பான அரசியல் அதிரடி ஆட்டம் இருக்கும் என்று எதிர்பார்த்தால், அவ்வப்போது மட்டுமே அது வருவது ஒரு குறை. முதல்வராக இருக்கும் விஜய்யை எதிர்த்து எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சியினர் ஏதாவது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால் அதில் ஏமாற்றமே. நேரடி அரசியல் தாக்குதல் இல்லாமல், பணத்திற்காக ஒரு சாமியார் செய்யும் மோசடி வேலை என்பதில் பெரிய பரபரப்பு திரைக்கதையில் இல்லை. இந்த ஆட்டத்தை இன்னும் வேறு விதமாக ஆடியிருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது.

நோட்டா - மெஜாரிட்டி

 

பட குழுவினர்

நோட்டா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓