எனிமி,Enemy

எனிமி - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மினி ஸ்டுடியோஸ்
இயக்கம் - ஆனந்த் சங்கர்
இசை - தமன், சாம் சிஎஸ்
நடிப்பு - விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் மற்றும் பலர்
வெளியான தேதி - 4 நவம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 39 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோ படங்கள் என்பது அபூர்வம். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சில மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஈகோ இல்லாமல் ஒருவர் படத்தில் மற்றவர்கள் சேர்ந்து நடிக்கிறார்கள்.

நிஜ வாழ்வில் நெருங்கிய நண்பர்களான விஷால், ஆர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் இணைந்து, எனிமிகளாக நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் ஆனந்த் சங்கர் இரண்டு ஹீரோக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கதையை உருவாக்கியிருக்கிறார். புதிய கதையாக இருந்தாலும் டெக்னிக்கலாக கொஞ்சம் மிரட்டியிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் பல திருப்பங்களை வைத்திருந்தால் இன்னும் அதிகமான விறுவிறுப்பும், சுவாரசியமும் கிடைத்திருக்கும்.

படத்தின் ஆரம்பத்திலேயே சிறு வயது ஆர்யாவும், விஷாலும் நண்பர்களாக இருந்து பிரிகிறார்கள். 2021ல் விஷால், அப்பா தம்பி ராமையா சிங்கப்பூரில் சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கிறார்கள். ஹேக்கிங் இன்ன பிற கம்ப்யூட்டர் டெக்னிக்குகளில் விஷால் கில்லாடி. அப்பாவித் தமிழர்கள் சிலரை விபத்தாகக் கொன்ற சூழ்ச்சியை விஷால் கண்டுபிடிக்கிறார். சிங்கப்பூரில் இந்திய அமைச்சர் ஒருவரை கொல்ல நடக்கும் முயற்சியை முறியடிக்கிறார் விஷால். அமைச்சரைக் கொல்ல முயற்சித்து முதல் முறையாக தனது அசைன்மென்ட்டில் தோல்வியடைகிறார் இன்டர்நேஷனல் கில்லரான ஆர்யா. இருவரும் சந்திக்கின்றனர். அப்பாவித் தமிழர்களை ஆர்யாதான் கொன்றார் என விஷால் தான் கண்டுபிடித்ததைச் சொல்லி ஆர்யாவை சரணடையச் சொல்கிறார். அவர் மறுக்க இரண்டு நண்பர்கள் எனிமிகளாக மோதிக் கொள்கிறார்கள். அதில் யாருக்கு வெற்றி என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

வழக்கமான ஆக்ஷன் ஹீரோ டைப் கதாபாத்திரம்தான் விஷாலுக்கு. இதில் ஹேக்கிங் ஸ்பெஷலிஸ்ட் என்பது கூடுதல் பிரமோஷன். சிங்கப்பூர் போலீசுக்கு, ஏன் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுக்கே அட்வைஸ் கொடுக்கிறார். ஆனால், அவர் நடத்திக் கொண்டிருப்பது மளிகைக் கடை. அஞ்சல் வழிக் கல்வியிலேயே ஹேக்கிங் பற்றியெல்லாம் கற்றுக் கொண்டார் என வசனம் வைத்துள்ளார் இயக்குனர். ஆர்யாவுடன் சண்டை போடுவது மட்டுமே முழு நேர வேலை விஷாலுக்கு.

ஆர்யாவுக்கு வில்லன், நெகட்டிவ் ரோல் என எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். சர்வதேச அளவில் பல கொலை சம்பவங்களை கொலை என்றே தெரியாமல் தற்கொலையாகவும், விபத்தாகவும் செய்தவராம். சிங்கப்பூரில் இந்திய அமைச்சரைக் கொல்ல வந்து விஷாலிடம் தோற்றுப் போகிறார். தன்னை தோற்கடித்தவனை நேரில் பார்த்து, அவனை வெல்ல நினைக்கிறார். விஷாலிடம் இருக்கும் ஒரு பயர் ஆர்யாவிடம் மிஸ்ஸிங்.

விஷால் ஜோடியாக மிர்ணாளினி ரவி, ஒரு பாடல், நாலு காட்சிகளுடன் இவர் வந்த வேலை முடிகிறது. ஆர்யா ஜோடியாக மம்தா மோகன்தாஸ். இவருக்கு இரண்டே இரண்டு காட்சிகள் தான்.

விஷால் நண்பனாக கருணாகரன், இவரிடம் காமெடி மிஸ்ஸிங். விஷால் அப்பாவாக தம்பி ராமையா, சென்டிமென்ட்டிற்கு உதவுகிறார். படத்தின் ஆரம்பத்தில் ஆர்யா அப்பாவாக வந்து போகிறார்.

படத்தில் பெரும்பாலான காட்சிகளை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா செட் போட்டு படமாக்கியிருக்கிறார்கள். சில பல ஆக்ஷன் காட்சிகளில் ஸ்டன்ட் இயக்குனரும், அதில் நடிக்க விஷால், ஆர்யாவும் ரிஸ்க் எடுத்திருக்கிறார்கள்.

தமன் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை, சாம் சிஎஸ் பின்னணி இசை பரவாயில்லை.

பிரண்ட்ஸ் எப்படி எனிமி ஆகி மோதிக் கொள்கிறார்கள் என்ற கரு சிறப்பு. அதை இன்னும் அழுத்தமாகக் கொடுத்திருக்கலாம். ஆரம்பத்தில் வரும் விஷால், ஆர்யா சம்பந்தப்பட்ட சிறு வயது காட்சிகள், மம்தா மோகன்தாஸின் பிளாஷ் பேக் சிறு வயது காட்சிகளின் நீளம் அதிகம். திரைக்கதையில் சில பல கன்டினியுட்டி மிஸ் ஆகிறது. ஷார்ப் ஆகக் கொடுத்திருந்தால் ஸ்வீட்டாக இருந்திருக்கும்.

எனிமி - ஏட்டிக்கு போட்டி

 

எனிமி தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

எனிமி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓