ரோமியோ
விமர்சனம்
தயாரிப்பு - விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம் - வினாயக் வைத்யநாதன்
இசை - பரத் தனசேகர்
நடிப்பு - விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி
வெளியான தேதி - 11 ஏப்ரல் 2024
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
'டியர்' படம் பார்த்துவிட்டு அப்படியே அடுத்த காட்சி வேறொரு தியேட்டருக்குச் சென்று 'ரோமியோ' படத்தைப் பார்த்தால் அதிலும் கணவன், மனைவி பிரச்சனைதான் கதை. 'டியர் ரோமியோ' என அன்பான பெயர்களை வைத்துவிட்டு அன்புக்காக ஏங்கும் சில கதாபாத்திரங்கள் இரண்டு படத்திலும் உண்டு.
திருமணத்தை வெறுக்கும் கதாநாயகி, திருமணத்திற்குப் பிறகு மனைவியை காதலிக்கத் துடிக்கும் கதாநாயகன். இந்த ரோமியோ, கல்யாணத்திற்குப் பிறகு காதலிக்கும் ரோமியோ.
மலேசியாவில் வேலை செய்து சம்பாதித்து சொந்த ஊரான தென்காசிக்கு திரும்புகிறார் விஜய் ஆண்டனி. காதலித்து பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவருக்கு மிர்ணாளினி ரவியைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. பெற்றோர் பார்த்து வைக்க திருமணம் நடக்கிறது. ஆனால், சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்ற கனவில் இருக்கும் மிர்ணாளினிக்கு திருமணத்தில் விருப்பமில்லை. நண்பர்களின் ஆலோசனைப்படி வருங்கால கணவர் விஜய் ஆண்டனிக்கு கண்டிஷன் போட்டு சென்னையிலேயே வந்து செட்டிலாகிறார். ஆனால், சில மாதங்களிலேயே விவகாரத்து கேட்கிறார் மிர்ணாளினி. இருப்பினும் மனைவியை கதாநாயகியாக அறிமுகம் செய்ய அவரே படம் தயாரிக்கிறார். இதன்பின் என்ன என்பதுதான் மீதிக் கதை.
சினிமாவுக்குள் ஒரு சினிமா. இப்படியான கதைகளை சென்டிமென்ட் காரணமாக தமிழில் அதிகம் எடுக்க மாட்டார்கள். அந்த சென்டிமென்டடை எல்லாம் தள்ளிவிட்டு இந்தப் படத்தை இயக்கியருக்கிறார் விநாயக் வைத்யநாதன்.
வழக்கம் போல அதே விஜய் ஆண்டனி. அதே டைப் வசன உச்சரிப்பு, அதே டைப் எக்ஸ்பிரஷன். இந்தப் படத்தில் கொஞ்சம் காதலிக்க முயற்சித்திருக்கிறார். க்ரைம் திரில்லர் வகைப் படங்கள் பக்கம் போவதே அவருக்கு சரியானதாக இருக்கும். வெறுக்கும் மனைவிக்காக வேறொரு பெயரில் உருக்கமாய் ஆறுதல் சொல்கிறார். நிஜத்தில் மனைவிக்காக சொந்தமாகவே படம் தயாரிக்கிறார். இப்படி ஒரு ஹீரோ இருக்கும் போது படம் எப்படி முடியும் என சின்ன குழந்தையும் சொல்லிவிடும்.
மிர்ணாளினி ரவிக்கு நடிப்புப் பயிற்சி கலைராணி என டைட்டிலில் வருகிறது. அம்மா கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளவர், தனியாக நடிப்புப் பயிற்சியும் சொல்லித் தருகிறார். அவர் நடிக்கும் படங்களில் எப்போதுமே கொஞ்சம் ஓவராகவே நடிப்பார். அவர் சொல்லிக் கொடுத்ததில் கால்வாசியைச் செய்திருப்பதால் மிர்ணாளினியும் நடிப்பில் பாஸ்மார்க் வாங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
யோகிபாபுவிடம் இரண்டு நாட்கள் கால்ஷீட் வாங்கியிருப்பார்கள் போலிருக்கிறது. அவருடைய கதாபாத்திரம் எதற்காக என்றே தெரியவில்லை. 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தின் சந்தானம் போல இந்தப் படத்தில் நாயகன் விஜய் ஆண்டனிக்கு ஆலோசனை சொல்லும் கதாபாத்திரம். விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி என மூத்த நடிகர்களும் படத்தில் உண்டு. விடிவி கணேஷ் மட்டும் ஓரிரு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
பரத் தனசேகர் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர்களே ஹீரோக்களாக நடிக்கும் படங்களில் கூட பாடல்கள் இப்படித்தானோ என யோசிக்க வைக்கிறது.
இடைவேளைக்குப் பின் என்னமோ சொல்லப் போகிறார்கள் என்று பார்த்தால், சினிமா எடுக்கிறோம் என படம் காட்டியிருக்கிறார்கள். அதனால்தான் பல காட்சிகள் சினிமாத்தனமாக அமைந்துள்ளதோ?, உதாரணத்திற்கு அந்த தங்கை மேட்டர், அடி வாங்கிய தயாரிப்பாளர்.
ரோமியோ - ஜுலியட் இல்லை… அதனால்… ஜுட்…