எம்ஜிஆர் மகன்,MGR Magan
Advertisement
1.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ஸ்க்ரீன் சீன் மீடியா
இயக்கம் - பொன்ராம்
இசை - அந்தோணி தாசன்
நடிப்பு - சசிகுமார், மிர்ணாளினி ரவி, சத்யராஜ், சமுத்திரக்கனி, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர்
வெளியாகும் தேதி - 4 நவம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போல மீண்டும் வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிவகார்த்திகேயன், சூரி ஆகியோரை மனதில் வைத்து எம்ஜிஆர் மகன் கதையை இயக்குனர் பொன்ராம் எழுதியிருப்பார் போலிருக்கிறது.

கதையைக் கேட்டோ, கேட்காமலேயோ சிவகார்த்திகேயன் மறுத்திருக்கலாம். சிவகார்த்திகேயன், சூரி சிக்க வேண்டிய இடத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி வந்து சிக்கியிருப்பார்கள் போலிருக்கிறது.

படத்தில் கதை என்ற ஒன்று இருக்கிறதா, திரைக்கதை என்ற ஒன்று இருக்கிறதா என கேள்வி எழுகிறது. எந்த இலக்கும் இல்லாமல் எதை நோக்கி படம் பயணிக்கிறது என்று தெரியாமல் ஏதோ ஆரம்பித்து, என்னென்னமோ நடந்து, எங்கெங்கோ திரிந்து, கடைசியில் திடீரென படத்தை முடித்துவிடுகிறார்கள்.

பொன்ராம் பொன்னான நாட்களை மாதம், வருடக்கணக்காலும் நன்றாக உட்கார்ந்து சிந்தித்து, விவாதக்குழுவில் திறமைசாலிகளை சேர்த்து முதல் வரியில் சொன்னது போன்ற கதைகளை யோசிக்க வாழ்த்துவோம்.

சத்யராஜ் ஊரின் சிறந்த நாட்டு வைத்தியர். மகன் சசிகுமார் நன்றாகப் படிக்க வேண்டும் என நினைத்து படிக்க வைக்கிறார். அவரோ + 2-வில் ஆறு படங்களிலும் தோல்வியடைகிறார். அப்பா, மகனுக்கு சண்டை வந்து மகன் இனி வீட்டிற்கே வர மாட்டேன் என பக்கத்திலேயே தங்குகிறார். இளைஞன் சசிகுமார் ஊராட்சி மன்றத் தலைவராம். ஆனால், படம் முழுவதும் வெட்டியாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறார். சத்யராஜிடம் தனது அப்பாவுக்கு வைத்தியம் பார்க்க வருகிறார் கதாநாயகி மிர்ணாளினி ரவி. அப்புறம் வழக்கம் போல் சசிகுமார், மிர்ணாளினி காதல். படத்துல ஒரு வில்லன் இருக்கணும் இல்லையா, இருக்காரு. சத்யராஜுக்கும், வில்லன் பழ கருப்பையாவுக்கும் ஒரு மலை பிரச்சினையில் சண்டை. அப்புறம் என்ன, பேசாத அப்பா, மகன் பேசினாங்களா, மலை பிரச்சினை முடிஞ்சிதா இதான் கிளைமாக்ஸ். அந்த கிளைமாக்சை சொல்றதுக்காக ஒரு இரண்டு மணி நேரம் நம்மை பாடாய்படுத்தறாங்க.

கிராமத்துக் கதைகளுக்குக் கொஞ்சம் ரெஸ்ட் கொடுங்க சசிகுமார் அவர்களே. அப்படியே எடுக்கணும்னு நினைச்சாலும் சுப்பிரமணியபுரம் மாதிரி கமர்ஷியலாவோ, ஜெய் பீம் லாம் பார்த்திருப்பீங்க, அந்த மாதிரியோ கதை சொல்ல வர இயக்குனர்களைத் தேடிப் பிடியுங்க. அரைச்ச மாவையே...சரி, மாத்தி சொல்லுவோம்...சுட்ட தோசையையே இன்னும் எத்தனை நாளைக்குதான் சுடுவீங்க.

மிர்ணாளினி ரவி, படத்தின் கதாநாயகி என்று சொல்வதைத் தவிர அவரைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. நடிப்பையும் கத்துக்குங்க, அவ்ளோதான்.

பாகுபலி மாதிரி படங்களில் நடித்துவிட்டு இந்த மாதிரிப் படங்களில் எல்லாம் சத்யராஜ் நடிக்கிறார் என்பது...ம்ம்ம்...அவருக்கும் பசிக்கும்ல. சசிகுமார் அம்மாவாக சரண்யா. எத்தனை முறை இப்படி நடித்தாலும் அம்மாவாக நடிக்கும் போது மட்டும் யதார்த்தமாக நடித்து பாசத்தைக் கொட்டிவிடுகிறார்கள். சரண்யாவுக்கு தம்பியாக சமுத்திரக்கனி. ரஜினிமுருகன் மாதிரி ஒரு கேரக்டர் சார்னு அவரை நம்ப வச்சிருப்பாரு போல பொன்ராம். பாவப்படுவதைத் தவிர வேறு என்ன செய்ய. ஒரு பாட்டுக்கு ஒரு ஹீரோயின் வந்து நடனமாடுவதை தமிழ் சினிமா இன்னும் விடவில்லை, ஐயோ பாவம் நந்திதா ஸ்வேதா.

பழ கருப்பையா வில்லன் மாதிரி இரண்டு சீன்களில் வருகிறார். நல்லவர்கள் கூட கூட்டணி வச்சிக்காத என மகனுக்கு அட்வைஸ் செய்கிறார்.

அந்தோணி தாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். ஏறெடுத்து பார்க்காம... பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. உணர்வு பூர்வமான காட்சிகள் இருந்தால்தானே பின்னணியில் பெயர் வாங்க முடியும், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லாததால் அதற்கு வழியில்லை. ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி தேனியின் அழகை கண்ணுக்குள் பச்சைப் பசேலெனக் கடத்துகிறார்.

எம்ஜிஆர் மகன் - ஏமாற்றிய மகன்

 

எம்ஜிஆர் மகன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

எம்ஜிஆர் மகன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓