3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோஸ்
இயக்கம் - மனோ கார்த்திகேயன்
இசை - ஜிப்ரான்
நடிப்பு - சதீஷ்குமார், மிர்ணாளினி ரவி, கருணாகரன் மற்றும் பலர்
வெளியான தேதி - 19 நவம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 24 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

வித்தியாசமான படங்கள் ஏதாவது இருக்கிறதா என ஓடிடியில் நமது தமிழ் ரசிகர்கள் தேடித் தேடிப் பார்ப்பார்கள். ஆனால், அதே வித்தியாசமான படங்கள் தமிழ் சினிமாவில் வந்தால் லாஜிக் இல்லை, இப்படியெல்லாம் நடக்குமா என கேள்வி கேட்பார்கள்.

சயின்ஸ் பிக்ஷன் என்றாலே அது கற்பனைக்கும் அப்பாற்பட்ட படம் தான். அம்மாதிரியான படங்களை ஹாலிவுட்டில் தான் அதிகம் பார்த்திருக்கிறோம். சமீப காலமாக அவை தமிழ் சினிமாவிலும் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் இந்த ஜாங்கோ.

டைம் லூப் என்ற அடிப்படையில் இந்தியாவில் வந்துள்ள முதல் திரைப்படம் இது. ஒரு நாள் அல்லது நேரம், திரும்பத் திரும்ப அந்த ஒரே நாளாக தொடர்ந்து நடப்பது தான் டைம் லூப்.

இந்தப் படத்தில் படத்தின் கதாநாயகன் தூங்கி எழும் காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை நடந்த விஷயங்களே திரும்பத் திரும்ப 17 நாட்கள் நடக்கிறது. அது ஏன் நடக்கிறது, எதற்காக நடக்கிறது என்பதை அவர் எப்படிக் கண்டுபிடித்தார், அதற்கு என்ன முடிவுரை எழுதினார் என்பது தான் இந்த ஜாங்கோ படத்தின் கதை.

அறிமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் முதல் படத்திலேயே சிக்கலுக்குரிய கதையை எடுத்துக் கொண்டு அது சாமானிய ரசிகனுக்கும் புரியும் விதத்தில் சிக்கல் இல்லாமல் கொடுக்க முயற்சித்திருக்கிறார். இம்மாதிரியான கதைகளை எழுதி, அதை திரையில் காட்சிகளாகக் கொண்டு வருவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் புரிய வேண்டும், திரைக்கதையிலும் சுவாரசியம் இருக்க வேண்டும் என சில பல விஷயங்கள் இருக்கின்றன. முன்னணி இயக்குனர்களே இப்படியான கதையைத் தொடுவது சந்தேகம்தான். அதை ஒரு முதல் பட இயக்குனர் செய்ததற்காகக் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தின் அறிமுக நாயகன் சதீஷ்குமார் மூளை அறுவை சிகிச்சை செய்யும் சிறந்த டாக்டர். டிவியில் தொகுப்பாளராக வேலை பார்க்கும் மிர்னாளினி ரவியைத் திருமணம் செய்து கொள்கிறார். அதன்பின் பிரச்சினை வர இருவரும் பிரிகிறார்கள். இருந்தாலும் பிரிந்த மனைவி மீது பாசமாக இருக்கிறார் சதீஷ். ஒரு நாள் திடீரென டைம் லூப்பில் சிக்கிக் கொள்கிறார். அவரது முன்னாள் மனைவியான மிர்னாளினியை யாரோ கொலை செய்கிறார்கள். அடுத்த லூப் நாட்களில் மனைவி மிர்னாளினியைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கணவன் - மனைவி இடையிலான குடும்பக் கதை, டைம் லூப் என்ற உளவியல் சார்ந்த, வேற்று கிரக கலன் வருகை என சயின்ஸ் பிக்ஷன், செயற்கை இதயம் என்ற மருத்துவ ஆராய்ச்சி, மனைவி கொலை, அதைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சி என த்ரில்லர் இப்படி ஒரு படத்திலேயே பல விஷயங்கள் படத்தில் உள்ளன.

அறிமுக நாயகன் சதீஷ்குமார் முதல் படத்திலேயே இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது ஆச்சரியம் தான். முடிந்த வரையில் தன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். படம் பார்க்கும் நமக்கே சில காட்சிகளில் குழப்பம் ஏற்படுகிறது. ஆனால், அவற்றை நடிக்கும் போது புரிந்து கொண்டு நடிப்பது அவ்வளவு எளிதல்ல. அதைச் சரியாகச் செய்திருக்கிறார் சதீஷ்.

நாயகி மிர்னாளினிக்கு அதிக வேலையில்லை. எப்போது சதீஷைப் பார்த்தாலும் கோபப்படுவதும், வெறுப்பாக பேசுவது மட்டுமே அவருக்கான வேலை. ஆனாலும், படம் முழுவதும் இருக்கும்படியான கதாபாத்திரம்.

நாயகன் சதீஷின் நண்பர்களாக கருணாகரன், ரமேஷ் திலக் குடிக்க வரும் காட்சிகள் படத்தில் தேவையற்றவை. கருணாகரன் ஒரு இன்ஸ்பெக்டர் என பின்னர் தெரிய வரும் போது சற்றே அதிர்ச்சி. வழக்கம் போல நாயகனுக்கு உதவி செய்கிறார்.

யார் வில்லன் என்பது படத்தில் இருக்கும் பெரிய சஸ்பென்ஸ். அது கடைசியாகத்தான் தெரிய வருகிறது. வேலு பிரபாகரன், ஹரிஸ் பெரடி கொஞ்சமாக வந்தாலும் திட்டமாய் நடித்து விட்டுப் போகிறார்கள்.

ஜாங்கோ மிஷின், வேற்று கிரக கலன், செயற்கை இதய உருவாக்கம் என தரமான கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்குக் கொஞ்சம் பலம் சேர்க்கின்றன. மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி பிரம்மாண்டமாக படமாக்கி இருக்கலாம்.

படத்தில் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்களில் எடிட்டர் சான் லோகேஷுக்குத்தான் நிறைய வேலை. டைம் லூப் நாள் 1 முதல் 17 வரை எந்தக் குழப்பமும் இல்லாமல் ரசிகர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். கூடவே உதவி இயக்குனர்களும் அதற்காக பேப்பர்களை வைத்துக் கொண்டு சரி பார்த்திருக்க வேண்டும். அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

டைம் லூப்பில் அடுத்தடுத்து ஒரே மாதிரியான காட்சிகள் இடம் பெறுவது கொஞ்சம் போரடிக்கிறது. படத்தில் பல காட்சிகளில் வசனக் காட்சிகள் நான் சின்க் ஆக இருக்கிறது. அடுத்த வாரம் வரும் மாநாடு படத்தைப் புரிந்து கொள்ள இந்தப் படம் முன்னோட்டமாக இருக்கும் போலிருக்கிறது. முதல் முயற்சியைத் தந்த ஜாங்கோ குழுவினருக்கு மாநாடு குழுவினர் தான் நன்றி சொல்ல வேண்டும்.

ஜாங்கோ - படம் வேற மாரிங்கோ...

 

பட குழுவினர்

ஜாங்கோ

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓