தினமலர் விமர்சனம்
அப்புடி, இப்புடி... எப்படி, எப்படி..? என ஆச்சர்யப்பட்டு கேட்கும் அளவிற்கு ஒரு வழியாக இந்த பொங்கலுக்கு வந்தேவிட்டது லிங்குசாமி தயாரிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் . பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் நடித்திருக்கும் ரஜினி முருகன்.
கதைப்படி, மதுரை அழகர்கோயில் பக்கம் ஊர் பெரிய மனிதரான அய்யங்காளை - ராஜ்கிரணின் மகள், மகன் பேரன் பேத்தி எல்லோரும் அமெரிக்கா, லண்டன் என வெல் செட்டில் ஆகிவிட, உள்ளூர் பேரன் சிவகார்த்தி மட்டும் தாத்தா, வாத்தியார் அப்பா காசில் உள்ளுர் ஊதாரியாக திரிகிறார். சின்ன வயதிலேயே, இவருக்கு அவர், அவருக்கு இவர் என பேசி முடிக்கப்பட்ட கீர்த்தியின் அன்பையும் சின்ன வயது குறும்பால், சின்ன வயதிலேயே இழந்து அப்பா, தாத்தா காசில் ஏதேதோ பிஸினஸ் செய்து, கீர்த்தியை கைப் பிடித்து, தன் கீர்த்தியை நிலை நாட்ட வேண்டுமென்பது சிவகார்த்திக்கு ஆசை. தாத்தா ராஜ்கிரனுக்கும் அதே ஆசை. அவர்களது ஆசைக்கு, தானும் ராஜ்கிரனின் பேரன் எனச் சொல்லி, ராஜ்கிரனின் சொத்தை ஆட்டயப் போட நினைக்கும் லோக்கல் தாதா ஏழரை மூக்கன் - சமுத்திரகனி கட்டயப்போடுகிறார்.
சமுத்திரகனியின் எண்ணம் எளிதில் நிறைவேறியதா? அல்லது அய்யங்காளை - ராஜ்கிரண், அவரது ஆசை பேரன் ரஜினி முருகன் - சிவகார்த்தியின ஆசை ஈடேறியதா..? என்பது தான் ரஜினி முருகன் படத்தின் லவ், சென்டிமெண்ட், காமெடி... கலர்புல் மீதிக்கதை...!
பொண்ணுங்களுக்கு மட்டும் இரண்டாயிரத்து எட்டு கண்ணு, அது அத்தனையும் நம்ம தான் பார்க்கும்.... என காதல் பன்ச் பேசும் சிவகார்த்தி, தன் காதலி வீட்டு எதிரிலேயே ரஜினி முருகன் டீக்கடை போட்டு மாமா ஒன் பொண்ணக் குடு... என ரஜினிபாடல் போடுவது, கூடவே சிம்புவின், எவண்டி உன்னை பெத்தான்... பெத்தான்... என பாடல் போடுவது... ரஜினி முருகன் எனும் பெயர் காரணம்... எல்லாம் சிவகார்த்திக்கு அவர் நடிப்பு மாதிரியே கச்சிதம்!
கீர்த்தி சுரேஷ் கார்த்திகா தேவியாக, கலக்கி இருக்கிறார். கார்த்திக்கும், கீர்த்திக்கும் செம கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், பயாலஜி எல்லாம் இருக்கிறது.
காதலிக்கும் போது பெத்தவங்களை மறந்துடுறீங்க.... நீ ஒரு தடவை பார்த்தாலும் அவன் நூறு தடவை பார்ப்பான்... என ரஜினி பட டயலாக்கை மகளுக்கு போட்டு காட்டி வளர்க்கும் அவரது வக்கீல் அப்பாவும் செம கச்சிதம்.
இந்த இடத்தில் ஒரு டெஸ்ட் டிரைவுக்கு மேடமும் கூட வருவாங்கள்ல வேணுமா? கிடைக்குமா..? என்பது, ஆடிக் கார் வாங்கினோம்ல ஆடித் தள்ளுபடி... என கீர்த்தியைக் கூட்டிக் கொண்டு ஊர்வலம் செல்வது... 200 பேலன்ஸ் கேட்கும் டீ பார்ட்டியிடம் வெட்கி எஸ்கேப் ஆவது... , வாடி வாடி வாடி தமிழோட திருமகளே எங்கம்மாவோட மருமகளே என டயலாக் அடிப்பது... எல்லாவற்றிலும் கார்த்தி, கீர்த்தி மட்டுமல்ல காமெடியும் நச்-டச்.
ஆடி கார் 46 லட்சத்தை 46 ஆயிரம் என்று சூரி பேசுவது, இந்தளவுக்கு அழகா இங்கிலீஷ் பேச தெரிந்த உனக்கு அதயாரு கிட்ட பேசணும்னு தெரியலயே... என்பது, ஆடி புது வண்டியை ஆக்ஸிடண்ட் செய்து விட்டு அலட்டிக்காமல் ஏர்பலூன் வரவில்லை... என்று சூரியும், சிவகார்த்தியும் சொல்வது, ஸ்டார் ஹோட்டலில் மேனேஜரை இங்கிலீஷில் திட்டுவதாக சொல்லி, ப்ளீஸ் ஹெல்ப் மீ.. ஹெல்ப் மீ... என திட்டுவதாக நினைத்து சூரி ஹெல்ப் கேட்டுகதறவது, உள்ளிட்ட எல்லா சீனினும் சூரி, சூப்பர் ரீ-எண்ட்ரி.
சிவகார்த்தியின் தாத்தாவாக அய்யங்காளையாக அழகர் கோயில் ஏரியா பெரிய மனிதராக வரும் ராஜ்கிரண், பேரனுக்கு உதவ உயிரை விட்டு உசுப்பேற்றுவது..., அசால்ட்டாக அயோக்கியத்தனம் செய்யும் ஏழரைமூக்கனாக சமுத்திரகனி, அய்யங்காளையின் பூர்வீகம் தேடிப் போகும் இடத்தில் நாயின் வாயில் கைத் துண்டை கொடுத்து சுற்றி வீசுவது..., மல்லிகை ராஜனாக சிவகர்த்தியின் அப்பாவாக வரும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் உள்ளிட்ட எல்லோரும் வக்கீல் நீலகண்டனாக வரும் கீர்த்தியின் ரஜினி ரசிகரான அப்பா எல்லோரும் சிறப்பு, கூடவே சிரிப்பு!
என்னம்மா இப்படி பண்றீங்களே ம்மா... , " உன் மேல ஒரு கண்ணு ... , ஆவி பறக்கும் டீக்கடை..." உள்ளிட்ட பாடலில் இசைஞர் இமான் காதலை கசந்துருக விட்டிருக்கிறார். பேஷ், பேஷ்!
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு பால் நிலா பளிச் பதிவு! விவேக் ஹர்சனின் படத்தொகுப்பும் பலே தொகுப்பு!
சிவகார்த்தி கிடைத்த கேப்பில் அம்மா அம்மா என்று பாடி தனுஷை வெறுப்பேற்ற இயக்குனர் வாய்ப்பளித்திருப்பது..., அதே மாதிரி டீக்கடை ஓப்பனிங்கில் கமல் கெட்-அப்பில் இருப்பவர் பேச ஆரம்பித்ததும் போதும் பால் ஆறிடப் போவது... என இப்பட தயாரிப்பாளர் லிங்குவை குளிர்விக்கும் படி சூரியை டயலாக் அடிக்க விட்டிருப்பது..... இப்படி, சீன் பை சீன் ஏதாவது மோட்டிவேஷன் வைத்திருக்கும் இயக்குனர் பொன்ராம், மரியாதையான வாழ்க்கை வேணும்னா ஒரு உத்தியோகம் வேணும்ல... என ராஜ்கிரண் பேரனுக்காக உருகும் காட்சி உள்ளிட்ட ஒவ்வொரு காட்சியிலும், காமெடியுடன் மெஸேஜூம் வைத்திருப்பதில் ரஜினி முருகன் ஜெயித்திருக்கிறான்!
மொத்தத்தில், ரஜினி முருகன் - கொஞ்சமே கொஞ்சம் பின்பாதியில் இழுவை என்றாலும் ரசனை முருகன்!
-----------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கிறான் ரஜினி முருகன்.
தாத்தா, பாசம், குடும்பம், காதல், பஞ்சாயத்து என்று பக்கா செண்டிமெண்ட் படத்தை கலகலவென சூப்பர்ஸ்டார் டச்சுடன் மதுரை மணம் கமழ தந்திருப்பதற்கு பொன்ராமுக்கு ஒரு பொக்கே!
கதை?
வேலை வெட்டியில்லாத பேரன் செட்டிலாக, தன்னுடைய சொத்தைப் பிரித்துக் கொடுக்க தாத்தா முயலும் போது ஏற்படும் பிரச்னை ஒருபக்கம், சண்டைக்கார மாமனுடைய மகளை சிவகார்த்திகேயன் காதலிக்க, அதற்கு மாமன் வீட்டார் கொடுக்கும் எதிர்ப்பு ஒரு பக்கம், இரண்டும் ஒரு புள்ளியில் இணையும்போது சொத்து என்ன ஆனது? மாமன் மகள் கிடைத்தாளா இல்லையா என்பதுதான் படம்.
பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சிவகார்த்திகேயன். டான்ஸ், காதல், காமெடி என்று பஞ்சாமிர்தம் படைக்கிறார். காதலியின் வீட்டு முன்னால் டீக்கடை போடுவதும், அவர் பணிபுரியும் கார் ஷோரூமுக்குச் சென்று பந்தா காட்டுவதும் பக்கா. அதுவும் சூரியும், சிவாவும் சேர்ந்தால் ங்ஙொக்கமக்கா! மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் கலாய்ப்பதும் இவர்கள் மற்றவர்களைக் கலாயப்பதும் களை - ரகளை!
குடும்பக் குத்துவிளக்காக கீர்த்தி சுரேஷ். அந்தக் கழுத்து மச்சம் ச்சோ ச்வீட்!
ரொம்ப நாள் கழித்து 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' 'உன் மேல ஒரு கண்ணு' என்று எல்லாப் பாடல்களையும் தெறி ஹிட் கொடுத்திருக்கிறார் இமான். இடையிடையே பி.ஜி.யில் வரும் பொருத்தமான பழைய பாடல்கள் பட்டாசு.
ராஜ்கிரண் செத்துப் போகும் காட்சி சும்மா போங்கு என்றாலும் வெளிநாட்டில் இருக்கும் மகனிடம் 'தமிழ் கூடத் தெரியாத பேரனுக்கு என்னைப் பத்தி என்னப்பா தெரிஞ்சிருக்கும்' என்று கலங்குவதும் உருகுவதும் நெகிழ்ச்சியின் தொட்டபெட்டா!
சமுத்திரக்கனி இனிமேல் நல்ல மனிதர் இமேஜைத் தூர வீசிவிட்டு இதுபோல் வில்லன் பாத்திரத்தில் தாராளமாக இறங்கலாம். கடிக்க வரும் நாயை ஒரு துண்டைச் சுற்றித் தூக்கி வீசும் காட்சியிலிருந்து எல்லாமே டெரர். அவருக்கு பத்துக்கு ஏழரை மார்க் தாராளமாகக் கொடுக்கலாம்!
பாலசுப்ரமணியெம்மின் கேமரா கரும்பு!
க்ளைமாக்ஸில் வரும் இன்னொரு பேரன் யார் எனத் தெரியும் போது தியேட்டரே அதிர்கிறது!
ரஜினி முருகன் - பொங்கலில் தீபாவளி!
குமுதம் ரேட்டிங் - நன்று