2.75

விமர்சனம்

Advertisementசீமராஜா - விமர்சனம்


நடிப்பு - சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, சிம்ரன், நெப்போலியன் மற்றும் பலர்

இயக்கம் - பொன்ராம்

இசை - இமான்

தயாரிப்பு - 24 ஏஎம் ஸ்டுடியோஸ்


வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரண்டு கமர்ஷியல் வெற்றிகளைக் கொடுத்த இயக்குனர் பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் சீமராஜா படத்தின் மூலம் இணைந்ததால் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை அந்தக் கூட்டணி முழுமையாகப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.


சிவகார்த்திகேயன் என்றாலே கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்து குட்டீஸ்களையும் ரசிக்க வைத்து, குடும்பத்தினரையும் தியேட்டர் பக்கம் வரவைப்பார் என்ற பேச்சு இருக்கிறது. அது இந்தப் படத்திலும் தொடர்கிறது. ஆனாலும், அவருடைய கதாபாத்திரத்திற்கு தேவையற்ற பில்ட்-அப்புகளையும் கொடுத்து ஹீரோயிசத்தை அதிகப்படுத்தியிருக்கிறார்கள். அந்த மாயையில் சிவகார்த்திகேயன் சிக்காமல் இருப்பது அவருக்கும் நல்லது.


தனக்கு கை வந்த ஏரியாவான கிராமத்துப் பின்னணியை மீண்டும் எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் பொன்ராம். ஆனால், காட்சியமைப்புகளிலும், கதாபாத்திர அமைப்புகளிலும் பெரிய வித்தியாசத்தை வைக்கவில்லை. அதே டெம்ப்ளேட் கதாபாத்திரங்களாகவே இருக்கின்றன. படத்தின் நீளமும் அதிகம். அந்த மல்யுத்த காட்சி, பிளாஷ்பேக் மன்னர் காட்சி ஆகியவற்றை ரத்தின சுருக்கமாகச் சொல்லியிருக்கலாம்.


சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் மன்னர் வாரிசு சிவகார்த்திகேயன். சமந்தாவை முதல் முறை பார்த்ததும் காதல் கொள்கிறார். ஆனால், சமந்தா சிவகார்த்திகேயனை விட்டு விலகியே இருக்கிறார். சமந்தாவிடம் தன் காதலை சொல்ல சிவகார்த்திகேயன் முயற்சிக்கும் சமயத்தில் வில்லனான லால், சமந்தாவை தன் மகள் என சொல்லி அழைத்துக் கொண்டு வீட்டுச் சிறைக்குள் வைக்கிறார். மறுபுறம், சிங்கம்பட்டி சமஸ்தானம் மக்களுக்குக் கொடுத்த நிலங்களையும் காற்றாலை கம்பெனிக்கு விற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார் லால். தங்கள் சமஸ்தான நிலங்களையும், சமந்தாவையும் சிவகார்த்திகேயன் காப்பாற்றுகிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.


மன்னர் வாரிசாக இருந்தாலும் இந்தப் படத்திலும் ஊரைச் சுற்றிக் கொண்டு, நாயகி பின்னால் சுற்றிக் கொண்டு திரியும் கதாபாத்திரத்தில்தான் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இம்மாதிரியான கதாபாத்திரங்கள் சிவகார்த்திகேயனுக்குப் புதிதல்ல. என்ன தேவையோ அதை சிறப்பாகவே செய்திருக்கிறார். கேப் கிடைக்கும் போதெல்லாம் ஓரிரு பன்ச் வசனங்களைப் பேசி தன்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த ஆசைப்படுகிறார் போலிருக்கிறது. தோற்றத்தில் சீமராஜா கெத்தாக இருந்தாலும் போஸ்பாண்டி, ரஜினிமுருகன் அளவிற்கு சத்தாக இல்லாமல் இருக்கிறார்.


ஆனாலும், பிளாஷ்பேக்கில் சரித்திர கால மன்னராக மிரட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயனை வைத்து தனியாகவே ஒரு சரித்திரக் கதையை படமாக்கலாம். வளரி பிடித்து சண்டையிடுவதிலும், மன்னருக்கே உரிய கம்பீரமும் அசத்தல்.


பி.டி. டீச்சராக சமந்தா. சிலம்பம் சுற்றுகிறார், சிரிக்கிறார், கொஞ்சம் கோபப்படுகிறார், கொஞ்சம் காதல் கொள்கிறார், பாடல்களில் அழகாக அசைகிறார். மற்றபடி அடடா, நடிப்பில் அசத்திவிட்டார் என்று சொல்லுமளவிற்கு அழுத்தமான காட்சிகள் இல்லை.


சீமராஜா சிவகார்த்திகேயனின் வழக்கமான வலது கையாக சூரி. படம் முழுவதுமே இருந்தாலும் சிரிப்புக்குப் பஞ்சம் வைத்துவிட்டார். பத்து சீனுக்கு ஒரு சீனில்தான் சிரிக்க வைக்கிறார். இன்னும் கொஞ்சம் ஹோம் ஒர்க் செய்திருக்கலாம்.


மெயின் வில்லன் லாலை விட அவருடைய மனைவி சிம்ரன் அதிகமான டயலாக் பேசுகிறார். ஆவேசப்பட்டு சிம்ரன் பேசும் போது உடைந்து விடுவாரா என்று பதற்றமடைய வைக்கிறார். அந்த அளவிற்கு ஒல்லியோ ஒல்லியாக இருக்கிறார் சிம்ரன். அவருக்குப் பின்னணி குரல் கொடுத்தவரால் சிம்ரனின் வில்லித்தனம் எடுபடுகிறது. சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியன். மன்னர் வாரிசு அப்பா, மகன் போல் நடந்து கொள்ளாமல் சாதாரணமாகப் பழகுகிறார்கள்.


இமானின் இசையில் பாடல்கள் அனைத்துமே ரசிக்க வைக்கின்றன. பாடல்களில் மட்டுமல்லாது மற்ற காட்சிகளிலும் நெல்லைச் சீமையின் அழகை பசுமையாய் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்.


பொன்ராம், சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் ஒரு முறை இணைய வாய்ப்பு வந்தால் கிராமத்துக் களத்தை விட்டு வெளியே வருவது நல்லது. நகரத்துக் கதையோ, வெளிநாட்டுக் கதையோ, ஏன், பிளாஷ்பேக்கில் காட்டிய சரித்திரக் கதை போன்று பிரம்மாண்டமாக சரித்திரப் படத்தைக் கூடக் கொடுக்கலாம்.


சீமராஜா - சீம இளவரசர்

 

சீமராஜா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சீமராஜா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓