மாவீரன் (2023),Maaveeran (2023)

மாவீரன் (2023) - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - சாந்தி டாக்கீஸ்
இயக்கம் - மடோன் அஷ்வின்
இசை - பரத் சங்கர்
நடிப்பு - சிவகார்த்திகேயன், அதிதி, மிஷ்கின்
வெளியான தேதி - 14 ஜுலை 2023
நேரம் - 2 மணி நேரம் 46 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

'மண்டேலா' படத்தில் ஒரு அழுத்தமான கதையுடன், சமூக அக்கறையுள்ள பல கருத்துக்களைப் பகிர்ந்து தேசிய விருதையும் பெற்றவர் இயக்குனர் மடோன் அஷ்வின். இந்த 'மாவீரன்' படத்தில் சமூக அக்கறையுடன் ஒரு கதையை எடுத்துக் கொண்டிருந்தாலும் 'பேன்டஸி' கலந்த படமாகக் கொடுத்து கருத்தான படம் என சொல்வதற்குப் பதிலாக கமர்ஷியல் படம் என சொல்ல வைத்திருக்கிறார்.

ஏழை மக்களுக்காக, சென்னை, புளியந்தோப்பு பகுதியில் கே.பி பார்க் பன்னடுக்கு குடியிருப்பு' என்று கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில் கட்டுமானத் தரம் மிக மோசமாக இருந்தது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த விவகாரத்தை மையமாக வைத்துக் கொண்டு இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர்.

தரமற்ற கட்டிடங்களைக் கட்டித் தரும் கட்டிட காண்ட்ராக்டருக்கும், அந்த காண்ட்ராக்டரை எதிர்க்கும் பயந்த சுபாவம் கொண்ட கதாநாயகனுக்கும் இடையில் நடக்கும் சண்டைதான் இந்த 'மாவீரன்'. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு அமைச்சரே இப்படி கட்டிட காண்ட்ராக்ட் வேலைகளை செய்ய முடியாது. அவரது பினாமி கட்டினார் என்று கூட காட்டாமல் அமைச்சர் தான் கட்டினார் என்று கதையின் ஆரம்பத்திலேயே தவறிழைத்திருக்கிறார் இயக்குனர்.

கார்ட்டூன் படம் வரையும் சிவகார்த்திகேயன், அம்மா சரிதா, தங்கை மோனிஷா ஆகியோருடன் குடிசைப் பகுதியில் வசிக்கிறார். அவர்களும், அவர்களது பகுதியைச் சேர்ந்தவர்களும் 10 அடுக்கு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்படுகிறார்கள். அந்தக் குடியிருப்பு மோசமாக கட்டப்பட்ட ஒரு குடியிருப்பு. கதாநாயகி அதிதி உதவியால், ஒரு பத்திரிகையில் கார்டூனிஸ்ட் ஆக வேலைக்குச் சேரும் சிவகார்த்திகேயன், அவர்கள் குடியிருப்புப் பிரச்சினையை வைத்தே கார்ட்டூன் கதை ஒன்றை வரைந்து, எழுத ஆரம்பிக்கிறார். அதனால், அவருக்கும் அந்த கட்டிடத்தை கட்டிக் கொடுத்த அமைச்சர் மிஷ்கினுக்கும் இடையே மோதல் உருவாகிறது. இதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

80களில் வந்த ஆக்ஷன் படங்களின் கதை போல இருந்தாலும், பயந்த குணம் கொண்ட சிவகார்த்திகேயன், அவருக்குக் கேட்கும் அசரீரி குரல் கட்டளைப்படி நடந்து கொள்கிறார் என 'பேன்டஸி' விஷயம் ஒன்றை இணைத்து முதல் பாதியை கலகலப்பாகக் கொண்டு போய் இருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் ஹீரோயிசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை அப்படியே 'டிராக்' மாற்றிவிட்டார்.

பயந்த குணம் கொண்டவராகவும், அசரீரி குரல் சொல்வது போல் நடப்பவராகவும் சிவகார்த்திகேயன். இக் கதாபாத்திரத்தில் கொஞ்சம் 'அந்நியன்' வாசம் அடித்தாலும் தனக்கான ஒரு ஸ்டைலில் நகைச்சுவை கலந்து சத்யா என்ற கதாபாத்திரத்தில் சத்தாகவே நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கற்பனைக்கு எட்டாத ஒரு கதாபாத்திரம், அதற்கு முழு ஈடுபாட்டுடனேயே உயிர் கொடுத்திருக்கிறார் சிவா.

ஒரு பத்திரிகையில் சப் --எடிட்டராக வேலை பார்ப்பவர் அதிதி. சிவகார்த்திகேயன் குடியிருக்கும் கட்டிடம் பற்றிய அனைத்துப் பிரச்சினைகளையும் தெரிந்தவர். அதைப் பற்றி அவரது பத்திரிகையில் எழுத முடியவில்லை என்றாலும் ஒரு பத்திரிகையாளராக சிவாவுக்கு வேறு எந்த பெரிய உதவியையும் செய்யாமல் வந்து போகிறார். சிவாவுக்கு வேலை வாங்கித் தருவதில் மட்டும் அவரது தைரியம் வெளிப்படுகிறது. மக்களின் பிரச்சினைகளைப் பார்த்து அவரது கதாபாத்திரம் ஒன்றுமே செய்யாமல் இருப்பது ஆச்சரியம்.

அமைச்சராக மிஷ்கின். கண்களை உருட்டி, மிரட்டி கொஞ்சம் ஓவர் ஆக்டிங்காகவே நடித்திருக்கிறார். இப்படி எத்தனையோ அரசியல்வாதி கதாபாத்திரங்களைப் பார்த்துவிட்டோம். புதிதாக ஏதோ செய்திருப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே. அவரது உதவியாளராக, நண்பராக சுனில். இவரும் ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் அதிலும் ஏமாற்றமே.

படத்தின் முழு கலகலப்புக்கும் சொந்தக்காரர் யோகிபாபு. அந்தக் குடியிருப்பில் மேஸ்திரி ஆக வேலைக்குச் சேர்ந்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவர் அடிக்கும் சின்னச் சின்ன கமெண்ட்கள் கருத்தாக அமைந்து ரசிக்க வைக்கின்றன.

சிவாவின் அம்மாவாக சரிதா. சென்டிமென்ட் காட்சியில் அவரது அனுபவ நடிப்பில் கண் கலங்க வைக்கிறார். சிவாவின் தங்கையாக மோனிஷா, கட்டிட எஞ்சினியராக மதன் மற்ற கதாபாத்திரங்களில் அதிகக் காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனுக்குக் கேட்கும் அசரீரி குரலாக விஜய் சேதுபதியின் குரல். படத்தை கதை சொல்லி நகர்த்திக் கொண்டு போவது இந்தக் குரல்தான். ஒரு கட்டத்தில் அதுவே போரடித்தும் விடுகிறது.

சிவகார்த்திகேயன் படங்களில் பாடல்கள் எப்போதுமே சூப்பர் ஹிட் ஆகும். இந்தப் படத்தில் பரத் சங்கர் இசையில் அது மிஸ்ஸிங். அடுக்கு மாடி குடியிருப்பில்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நகர்கிறது. ஒளிப்பதிவாளர் விது அய்யன்னாவுக்கு நிறைய வேலை கொடுத்திருக்கிறார் இயக்குனர். இரண்டே முக்கால் மணி நேரப் படம் என்பது நீ….ளம். ஒரு கிளைமாக்ஸ் முடிந்த பிறகு, மீண்டும் ஒரு கிளைமாக்ஸ் என கொண்டு போகிறார்கள்.

கிளைமாக்ஸ் காட்சியில் மீடியாக்களோ, போலீசோ வேறு யாருமே வராமல் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். அந்த குடியிருப்புப் பிரச்சினையில் அரசாங்கம் என்ன செய்தது, சில காட்சிகளில் வந்து போகும் முதல்வர் என்ன செய்தார், எதிர்க்கட்சிகள் என்ன செய்தது என எதுவுமே இல்லை. ஏழை மக்களின் உயிர் பிரச்சினையில் யாருமே தலையிடாமல் இருந்தார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி ?.

மாவீரன் - வீரன்

 

பட குழுவினர்

மாவீரன் (2023)

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓