3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கேஜேஆர் ஸ்டுடியோஸ்
இயக்கம் - ரவிக்குமார்
இசை - ஏஆர் ரஹ்மான்
நடிப்பு - சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங்
வெளியான தேதி - 12 ஜனவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 35 நிமிடம்
ரேட்டிங் - 3/5

தமிழ் சினிமாவில் சயின்ஸ் பிக்ஷன் படங்கள் எப்போதோ ஒரு முறைதான் வருகின்றன. இந்தப் படம் கடந்த சில வருடங்களாகத் தயாரிப்பில் இருந்து சில பல சிக்கல்களைச் சந்தித்து கடைசியாக வருமோ, வராதோ என சந்தேகத்தைக் கிளப்பி நேற்று ஒரு வழியாக வெளிவந்தது. சில வருடங்களாகத் தயாரிப்பில் இருந்த படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு சமீபத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்ற ஒரு தோற்றத்தைப் படத்தில் பார்க்க முடிகிறது.

'இன்று நேற்று நாளை' என்ற டைம் டிராவல் படத்தைக் கொடுத்த இயக்குனர் ரவிக்குமார் இந்தப் படத்தை இத்தனை சிக்கல்களுக்கு மத்தியிலும் தரமாகக் கொடுக்க முயற்சித்ததற்குத் தனி பாராட்டுக்கள். அவருடைய எண்ணத்தை திரையில் சரியாகவே வடிவமைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களுடன் ஒப்பிடும் போது இந்தப் படத்தின் 'விஎப்எக்ஸ்' காட்சிகள் உயர்ந்த தரத்தில் இருக்கிறது என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இயற்கை விவசாயம் மீதும், உயிரினங்களின் மீதும் பற்று கொண்ட சிவகார்த்திகேயன் அம்மாவின் வற்புறுத்தலால் சென்னைக்கு வேலை தேடி வருகிறார். வந்த இடத்தில் கருணாகரன், யோகி பாபுவுடன் பழக ஆரம்பித்து அவர்களுடன் 'செட்' ஆகிவிடுகிறார். ஒரு நாள் திடீரென ஒரு 'ஏலியன்'ஐ சந்திக்கிறார்கள். ஒரு தனியார் நிறுவனத்தால் பூமியில் அதிக ஆழத்தில் இருந்து 'நோவா கேஸ்' எடுக்கப்படுவதைத் தடுக்கத்தான் அந்த ஏலியன் பூமிக்கு வந்திருக்கிறது. அதை ஏலியனும், சிவகார்த்திகேயனும் சேர்ந்து தடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், ஏலியன் அந்த நிறுவனத்திடம் மாட்டிக் கொள்கிறது. ஏலியனால் அங்கிருந்து தப்பிக்க முடிந்ததா, சிவகார்த்திகேயன் அந்த ஏலியனைக் காப்பாற்றினாரா, அந்த கேஸ் திட்டம் தடுக்கப்பட்டதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஹாலிவுட்டில் பல ஏலியன் படங்களைப் பார்த்தவர்களுக்கும் இந்தப் படத்தைப் பிடிக்கும் அளவிற்கு எடுக்க வேண்டும் என இயக்குனர் ரவிக்குமார் முயற்சித்திருக்கிறார். அதற்கு உறுதுணையாக விஎப்எக்ஸ் குழுவினரும், கலை இயக்குனரும் அமைந்திருக்கிறார்கள். ஏலியன் வரும் அனைத்து காட்சிகளுமே சுவாரசியமாக பரபரப்பாக அமைந்துள்ளது. ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார், அது பொருத்தமாகவும் உள்ளது. இடைவேளைக்குப் பின் ஏலியன் எதிரிகளால் சிறைபிடிக்கப்பட்ட பின் அதற்கான முக்கியத்தும் குறைந்துவிட்டது.

சிவகார்த்திகேயன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய ஒரு கதாபாத்திரம். ஆரம்பத்தில் இயற்கை விவசாயம், எல்லா உயிரினங்களுக்கும் பூமியில் இடமுண்டு என்று தத்துவம் பேசி வாழ்பவர். பூச்சிகள் வந்து தன் நிலத்தில் உள்ள பயிர்களை அழித்தால் கூட கவலைப்படாதவர். அப்படிப்பட்டவர்தான் தனக்கு பொருத்தமானவர் என பூமியைக் காப்பாற்ற ஏலியன் அவரைத் தேர்ந்தெடுக்கிறது. இடைவேளைக்குப் பின்பு சிவகார்த்திகேயனுக்கு ஏலியன் சக்திகள் கிடைக்கிறது. அதை வைத்து கூடுதலாக, சில சுவாரசியமான காட்சிகளை இயக்குனர் வைத்திருக்கலாம்.

இந்தப் படம் சில வருடங்கள் தயாரிப்பில் இருந்தது என யோசிக்க வைப்பது நாயகி ரகுல் ப்ரீத் சிங் தான். தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக இருந்த போது ஒப்பந்தம் செய்து ஆரம்பித்த படம். அதன்பின் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தில் அறிவியல் ஆர்வம் கொண்ட பெண்ணாக நடித்திருக்கிறார். காதல் காட்சிகளையும், டூயட் பாடலையும் வேண்டாமென தூக்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

நகைச்சுவைக்கென கருணாகரன், யோகி பாபு கூட்டணி. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்கள். சில காட்சிகள் 'க்ரின்ஜ்' ஆக இருக்கிறது. வில்லனாக ஷரத் கெல்கர் நடித்திருக்கிறார். பூமியிலிருந்து 'நோவா கேஸ்' எடுத்து உலகத்தை ஆள நினைக்கிறார். பல படங்களில் பார்த்த அதே கார்ப்பரேட் டைப் வில்லன். அவருக்கு உதவியாளராக இஷா கோபிகர். ஆரம்பத்தில் சில காட்சிகளில் மட்டும் சிவகார்த்திகேயன் அம்மாவாக வந்து போகிறார் பானுப்ரியா.

ஏஆர் ரஹ்மான் பாடல்களிலும், பின்னணி இசையிலும் நிறையவே ஏமாற்றிவிட்டார். படத்தில் உள்ள அந்த சில பாடல்களைத் தூக்கினாலும் படம் விறுவிறுப்பாக நகரும் என்று சொல்லுமளவிற்கு உள்ளது. நீரவ் ஷா ஒளிப்பதிவு, ரூபன் படத் தொகுப்பு, முத்துராஜ் கலை அமைப்பு படத்தில் குறிப்பிட வேண்டியவை.

படத்தை குழந்தைகளுடன், குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். ஆரம்பக் காட்சிகள், இடைவேளைக்குப் பிறகான சில காட்சிகள் அழுத்தமாய் அமையவில்லை. பெரிய எதிர்பார்ப்பு படத்தின் மீது இருந்தது. அதை முழுவதுமாய் பூர்த்தி செய்யவில்லையே என்ற ஒரு குறை வரத்தான் செய்கிறது.

அயலான் - சொந்தக்காரன்..

 

அயலான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

அயலான்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓