தேவ்
விமர்சனம்
நடிப்பு - கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர்
இயக்கம் - ரஜத் ரவிஷங்கர்
தயாரிப்பு - பிரின்ஸ் பிக்சர்ஸ்
இசை - ஹாரிஸ் ஜெயராஜ்
வெளியான தேதி - 14 பிப்ரவரி 2019
நேரம் - 2 மணி நேரம் 38 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
காலம் காலமாக தமிழ் சினிமாவைக் காப்பாற்றி வரும் காதலை மையமாக வைத்து காதலர் தினத்தில் ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். காதல் என்றாலே ஒரு பீலிங். அதை சொன்னாலும், கேட்டாலும் உணர முடியாது. நாமாக அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.
காதல் படங்களும் அப்படித்தான். திரையில் பொய்யாகக் காதலிப்பவர்களை நாம் நிஜக் காதலர்களைப் போல உணர வைக்கும் விதத்தில் அந்தக் காதல் படம் அமைய வேண்டும். ஆனால், இந்த தேவ் படத்தில் காதலைப் பற்றி நண்பன் பேசுகிறான், தோழி பேசுகிறாள், காதலிக்கும் நாயகனும், நாயகியும் பேசுகிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் பேசி நடித்தாலும், நமது கண்கள் வழியாக இதயத்துக்குள் நுழைந்து எதையும் செய்ய மறுக்கிறது அந்தக் காதல். எங்கோ ஒன்று இடிக்கிறது. நமக்குள் அந்தக் காதலர்களின் நேசமும், விலகலும் நுழைய மாட்டேன் என்கிறது. அது பணக்கார நாயகன், நாயகியின் காதல் என்பதால் கூட இருக்கலாம்.
கார்த்தி ஒரு பணக்கார இளைஞன். வீட்டின் செல்லப் பிள்ளை. அட்வென்ச்சர் ஆக எதையாவது செய்வதுதான் அவரது பொழுதுபோக்கு. சிறு வயதிலிருந்தே அவருடைய நெருங்கிய நண்பன் விஜே விக்னேஷ், நண்பி அம்ருதா. கார்த்திக்குக் காதல் வந்தால் நன்றாக இருக்கும் என விக்னேஷும், அம்ருதாவும் நினைக்க, அவர்கள் பேஸ்புக்கில் வலை விரிக்க, அதில் சிக்குகிறார் அமெரிக்காவில் செட்டில் ஆன இளம் பெண் தொழிலதிபரான ரகுல் ப்ரீத் சிங். கார்த்தியின் சில பல அட்வென்ச்சர்களுக்குப் பின் இருவரும் ஐ லவ் யூ சொல்லிக் கொள்கிறார்கள். பின்னர் இருவருக்கும் இடையே பிரிவு. அடுத்து காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.
எந்தவிதமான திருப்பமும், அழுத்தமும் இல்லாமல் கதை அதன் போக்கில் போகிறது, போகிறது போய்க் கொண்டேயிருக்கிறது. எந்தப் பிரச்சினையும் வரவில்லை, எந்த சிக்கலும் வரவில்லை. இடைவேளை கூட ஒரு கேள்விக்குறியுடன் வரவில்லை. அழுத்தமில்லாத ஒரு பிரச்சினைக்காக காதலி ரகுல் பிரிந்து போகிறார். அதன்பின் அவரைத் தேடி கன்வின்ஸ் செய்து மீண்டும் காதல் செய்யாமல், எவரெஸ்ட் சிகரம் ஏறப் போகிறார் நாயகன் கார்த்தி. சிறு வயதில் இருந்தே ஒன்றாகப் படித்து, ஒன்றாக வளர்ந்தவர்கள், நண்பன் கார்த்தியின் காதலுக்கு பிரச்சினை என்றதும் விக்னேஷும், அம்ருதாவும் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. காதலிக்க வைக்கும் வரை இரவு பகல் பாராமல் அட்வைஸ் சொன்னவர்கள், பிரிந்த பிறகு அட்வைஸ் செய்து சேர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
பையா படம் போல இதுவும் ஒரு ஜாலியான படமாக அமையும் என எதிர்பார்த்து கார்த்தி நடித்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. அவருக்கான ஒரு டெய்லர் மேட் கதாபாத்திரம். எப்போதும் சிரிப்புடன், நண்பர்களுடன் கலாட்டாவாக, அப்பாவுடன் பாசமாக, இருப்பவருக்கு காதல் ஒரு அட்வென்ச்சர் ஆக அமைகிறது. பைக்கில் 1300 கிலோமீட்டர் பயணித்து ஐ லவ் யூ சொல்கிறார். மீண்டும் பைக்கிலேயே காதலியுடன் திரும்புகிறார். பையாவில் காரில் காதலியுடன் பயணித்தவர், இந்தப் படத்தில் பைக்கில் பயணிக்கிறார். கார்த்தியின் காதல் பீலிங் மட்டுமே படத்தைக் காப்பாற்றுகிறது. காதலனாக ரசித்து நடித்திருப்பதால் மட்டுமே அவரையும் படத்தில் நமக்குப் பிடித்துப் போகிறது.
இளம் பெண் தொழிலதிபராக ரகுல் ப்ரீத் சிங். கொஞ்சம் திமிர் பிடித்தவர், சுயநலவாதி என அவருடைய இந்த குணம்தான் படத்தின் வில்லனும் கூட. அதுதான் அவருக்கும் கார்த்திக்கும் இடையிலான காதலையும் பிரிக்கிறது. தொழிலதிபராகக் காட்டுவதற்காக ரகுலை மெச்சூர்டு தோற்றத்தில் மாற்றியிருக்கிறார்கள். அந்தத் தோற்றமே அவருடைய காதல் உணர்வுகளை உள்வாங்குவதற்கும் ஒரு தடையாக இருக்கிறது. காதலிக்காகப் பார்த்து பார்த்து ஒரு மால்ஐ டிசைன் செய்யும் கார்த்தியின் காதலைப் புரிந்து கொள்ளாமல் ஊரைவிட்டே போகிறார் ரகுல். பிரிந்த காதலர்கள் ஒன்று சேர்ந்துவிட மாட்டார்களா என்ற பதைபதைப்பு படத்தைப் பார்க்கும் நமக்கு வர மறுக்கிறது. காரணத்தை இயக்குனர் மீண்டும் மீண்டும் பார்த்து புரிந்து கொள்வது நல்லது. மும்பையிலிருந்து பைக்கில் வரும் போது பின்னாடி உட்கார்ந்திருக்கும் ரகுல் சில இடங்களில் பார்க்கும் போது கார்த்தியின் தோழி அம்ருதா போலவே தெரிகிறார்.
கார்த்தியின் தோழியாக அம்ருதா. ஆண் நண்பனை, வாடா மச்சான், மச்சி என அழைக்கும் 2கே தலைமுறையின் நட்பு. கார்த்தியன் நண்பனாக விஜே விக்னேஷ். யு டியூப் காமெடி வேறு சினிமா காமெடி வேறு என்பதைப் புரிந்து கொண்டால் மட்டுமே விக்னேஷ் சினிமாவில் முன்னேற முடியும். ஒரு காட்சியில் அவரை மேடை ஏற்றி ஸ்டான்ட்அப் காமெடி செய்ய வைக்கிறார் கார்த்தி. ஒரு ஜோக் மட்டும் சொல்லிவிட்டு, மீதி அவர் என்ன பேசுகிறார் என்பதைக் காட்டாமல் பின்னணி இசையால் காட்சியை நகர்த்திவிட்டார்கள். அவர்களுக்கே அந்தக் காட்சியைப் பார்த்து சிரிப்பு வரவில்லை போலிருக்கிறது.
தமிழ் சினிமாவின் நடிப்புப் புயல், சூறாவளி என பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் இவ்வளவு முக்கியத்துவமே இல்லாத கதாபாத்திரங்களில் இதற்கு முன் நடித்திருப்பார்களா என்பது சந்தேகமே. அவர்கள் கதாபாத்திரங்களில் வேறு யாரையாவது நடிக்க வைத்திருந்தால் கூட அது படத்தை எந்தவிதத்திலும் பாதித்திருக்காது.
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளிக்குப் பின் புரியாத மொழியில் ஆரம்பமாகும் ஒரு பாடல். அப்படியென்றால் இசை ஹாரிஸ் ஜெயராஜ் என்று சிறு குழந்தை கூட சொல்லிவிடும். தான் இசையமைத்த முந்தைய பாடல்களின் டியூனிலிருந்தே அனங்கே... பாடலை அமைத்திருக்கிறார். இருந்தாலும் அந்த ஒரு பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது.
உக்ரைன், ஹிமாச்சல், அமெரிக்கா (?), சென்னை என காட்சிகளில் ஒரு ரிச்னெஸ் இருக்கிறது. அதற்குக் காரணம் வேல்ராஜ்.
இரண்டு மணி நேரம் முப்பத்தெட்டு நிமிடம் ஓடுகிறது படம். ஒரு கட்டத்தில் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சோர்வு வந்துவிடுகிறது. கிளைமாக்ஸ் வந்துவிட்டதோ என நினைத்து அதற்கு சில காட்சிகளுக்கு முன்பாகவே பொறுமையிழந்து தியேட்டரில் கைதட்டுகிறார்கள்.
தேவ் - காதலின் தீபம், குறைவான ஒளியுடன்...!
தேவ் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
தேவ்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
கார்த்தி
நடிகர் சிவக்குமாரின் இளைய வாரிசு கார்த்தி. 1977ம் ஆண்டு, மே 25ம் தேதி பிறந்த கார்த்தி, அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர். அப்படிப்பட்டவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல்படத்திலேயே கிராமத்து முரட்டு இளைஞனாக அனைவரையும் கவர்ந்த கார்த்தி, தொடர்ந்து பையா, சிறுத்தை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். 2011ம் ஆண்டு, ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.