விமர்சனம்
கல்கி திரை விமர்சனம்
இன்று நேற்று நாளை!
அறிவியல் கதைகள் தமிழ்த் திரைப்படங்களாக வருவது அபூர்வம். அதிலும் டைம் மெஷின் மாதிரியான நுட்பமான சமாச்சாரங்கள் ஒதுக்கப்பட்டே வந்திருக்கின்றன. தப்பித் தவறி வெளியாகியிருக்கும் ஒன்றிரண்டு படங்களும், சரியான முறையில் கையாளப்பட்டிருக்கவில்லை. ஆனால் இன்று நேற்று நாளை படம் நேர்த்தியான முறையில், துணிச்சலுடன் எடுக்கப்பட்டிருக்கிறது.
கடந்த காலத்தைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று ராஜா ராணிக் காலத்துக்கோ அல்லது எதிர்காலத்தைக் காண்பிப்பதற்காக வேற்றுக் கிரகத்துக்கோ அழைத்துச் சென்று ஜல்லியடிக்காமல் 50 வருட காலகட்டத்திலேயே கதை முன்னும் பின்னும் தொய்வில்லாமல் நகர்கிறது. அதிலும் வெறும் 20 நிமிடக் கால வித்தியாசத்தால் ஏற்படும் விளைவுகள் நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் அசந்தாலும் கதை நம்மை விட்டு விட்டு அதன் போக்கில் ஜெட் வேகத்தில் போயே போய்விடும். நிறையப் பாடல்களைப் போட்டுக் காதை ரணமாக்காமல் இருப்பதும் பாராட்டத்தக்கதுதான்!
ஆர்ப்பாட்டமான அரங்க நிர்மாணங்களையும், அபத்தமான நகைச்சுவையையும், வௌ்ளையுடை தேவதைசூழ் நடனங்களையும் புறந்தள்ளிவிட்டு, பலமான திரைக்கதை ஒன்றை மட்டுமே நம்பிப் படம் எழுதியிருக்கிறார்கள்.
டைம் மெஷின் கிடைத்தால் வாழ்க்கை எப்படி அமையும், கிடைக்காமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதுதான் கதையின் ஒற்றை வரி!
கதாநாயகனாக வரும் விஷ்ணுவிஷால் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கடவுளின் தேசத்து இறக்குமதியான மியா ஜார்ஜ், கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை.
(போலி) ஜோசியராக நடித்திருக்கும் கருணா தமிழ் சினிமாக் காமெடியன்களுக்கே உண்டான மிகை நக்கல், கோணங்கிச் சேஷ்டைகள், ஆபாச வசனங்கள் போன்றன இல்லாமல் நமது பக்கத்து வீட்டுப் பையன் போல இயல்பாக நடித்திருக்கிறார்.
ஒன்பது கூட்டம் கிரிதர் பார்த்தசாரதியாக வரும் டி.எம். கார்த்திக் அசட்டு ஜீனியஸ் பாத்திரத்தை அனாயாசமாகச் செய்திருக்கிறார்.
குறைகண்டுபிடித்தே ஆக வேண்டும் என்றால்... மதுவருந்தும் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றுகிறது.
கடந்த காலத்துக்குள் நுழையும் கதாநாயகி, குழந்தையாக இருக்கும் தன்னையே ஆச்சரியத்துடன் பார்த்து அரவணைக்கும் காட்சி போல பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார் இயக்குநர் ரவிக்குமார்.
மொத்தத்தில்... அறிவியல் திரைப்படங்களுக்கான நல்ல ஆரம்பம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!