ஷிபு தமின்ஸ் தயாரிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமைய்யா, கருணாகரன், நாசர், ரித்விகா... உள்ளிட்ட இன்னும் பலர் நடித்து வெளிவந்திருக்கும் படமே "இருமுகன்".
கதைப்படி, மலேசிய இந்திய தூதரகத்தை தனி ஒருத்தராக தாக்கி 20 பாதுகாவலர்களை போட்டுத்தள்ளி தானும் சாகிறான் ஒரு 80 வயது சீனக்கிழவன். அவன் யார்? அவனது பின்னணி என்ன..? என ஆராயும் இந்தியா, அவன் லவ் எனும் தலைவனைக் கொண்ட சிம்பிள் ஆப் லவ் எனும் குரூப்பைச் சார்ந்தவன் என கண்டுபிடிக்கிறது.
சிம்பிள் ஆப் லவ் தலைவனால் நான்கு ஆண்டுகளுக்கு முன் தன் காதல் மனைவி நயன்தாராவை இழந்த இந்திய உளவு ஏஜன்சி ஆபிஸர் விக்ரமை தேடிப் பிடித்து, அவர் வசம் இந்த கேஸ் ஒப்படைக்கப்பட்டு அவரது சீப்பாக நித்யா மேனனையும் நியமித்து மலேசியா அனுப்புகிறது இந்தியா.
இரு கொலைகள், 12 ஹீயூமன் ரைட்ஸ் கேஸ்.. உள்ளிட்டவைகளால் தான் சார்ந்த இந்திய உளவு பாதுகாப்பு ஏஜென்சியில் இருந்து நான்கு ஆண்டுகளுக்கு முன் சஸ்பென்ட் ஆன விக்ரம், மீண்டும் அந்த ஏஜன்சியில் இணைந்து மலேசியாவில் எப்படி? இந்தியாவின் பெருமையை நிலைநாட்டி, இந்திய தூதரக தாக்குதலுக்கும், தன் காதல் மனைவி சாவுக்கும் காரணமான சிம்பிள் ஆப் லவ் கும்பலை கூண்டோடு கைலாசம் அனுப்புகிறார்...? என்பது தான் இருமுகன் படத்தின் கரு, கதை.. எல்லாம்.
இந்த கருவுடனும், கதையுடனும் விக்ரம் - நயனின் லவ் எபிசோட்டையும்., இப்படத்திற்கு இருமுகன் எனும் பெயர் காரணத்தையும், அது கூடவே, விக்ரமின் இரு முக ஆக்ஷன் அதிரடிகளையும் ஸ்பீட் எனும் ஊக்க மருந்தின் வீரியத்தால் மனித உடலில் நிகழும் மாற்றங்களையும் அதனால் நிகழும் அதிரடிகளையும் கலந்து கட்டி களமாக்கி? இருமுகனாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் இப்படக் குழுவினர்!
ஒதுக்கி வைக்கப்பட்ட உளவுத் துறை அதிகாரி அகிலன் வினோத்தாக விக்ரம், ஆரம்ப காட்சியில் குத்துசண்டை வீரராக அசத்துகிறார். அதன் பின் இந்தியாவிற்கு உதவும் ஏஜென்சி வீரராகபட்டையை கிளப்புகிறார். அவரை விட வில்லன் லவ்வாக சிம்பிள் ஆப் லவ் குரூப் பின் தலைவனாக லவ் எனும் பெயரில் அழகிய பெண் சாயலில் வரும் விக்ரம் பிய்த்து பெடலெடுக்கிறார். என்னடா லைப் மசாலாவே இல்லாமல் சப்புன்னு போயிட்டிருக்குன்னு நினைச்சேன்.... என லவ் விக்ரம் பேசும் பன்ச் ஒன்று போதும். வாவ்! ஆனாலும், மருந்து உபயத்தில் ஐந்து நிமிடம் பறந்து பறந்து அடிக்கும் வில்லன் லவ் விக்ரமையும், அவரது சகாக்களையும் அகிலன் விக்ரம் போட்டுத் தாக்கி ஜெயிப்பது தமிழ் சினிமாவுக்கு புதுசு. இரண்டு விக்ரமின் நடை, உடை, பாவனை எல்லாம் பிரமாதம்.
நயன்தாராவையும் அவரது அழகையும் ப்ளாஷ்பேக்கில் மட்டுமே பார்க்கிறோமே? என வருந்தும் ரசிகனுக்கு ஆறுதலாக நயனும் இருமுகியாக வருவது தாங்க முடியாத திகில் திருப்பம்.
"ஒரு உயிரை விட அவனுங்களை பாலோ பண்றது முக்கியமா போச்சுல்ல..." என நித்யா மேனன் இக்கட்டான சூழலில் ரித்விகா குண்டடிபட்டு இறந்ததற்காக விவாதம் செய்வது கொடுமை. மற்றபடி, அழகிய ஆபிஸராக நயன் இல்லாத இடங்களில் அசத்துகிறார்.
கருணாகரன் ஹிட்லர் காலத்து ஊக்க மருந்து பற்றி கதை சொல்லும் விதம் படத்தின் அடிநாதம் என்றாலும்., அக்காட்சி படத்தின் விறுவிறுப்பை வெகுவாக குறைப்பது பலவீனம்.
தம்பி ராமைய்யா, நாசர் உள்ளிட்டோரும் "உள்ளேன் ஐயா" என வந்து போகிறார்கள். ரசிகன் நொந்து போகிறான் பாவம்.
அன்பறிவ்வின் சண்டைப் பயிற்சியும், ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். ஹாரிஸ்ஜெயராஜ் இசையில் ஹலோனா ஹலோனா ....., "அய்யோ நெஞ்சிலே .....", "கண்ணை விட்டு ... " உள்ளிட்ட பாடல்களும் அவை கடற்கரை பிரதேசம் மற்றும் காஷ்மீர் பிரதேச பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் விதமும் ஹாசம்,வாசம்.
இத்திரைப்படம், மலேசியா இந்திய தூதரகத்தில் ஆரம்பமாகிறது.... என்பதையும் பாடல் காட்சிகள் பல்வேறு இயற்கை எழில் கொஞ்சும் உள்நாட்டு, வெளிநாட்டு லொகேஷன்களில் படமாகி இருக்கிறது... என்னும் பிரமாண்டத்தையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்., ஹிட்லர் காலத்து ஸ்பீட் எனும் ஊக்க மருந்து..., விக்ரம் - நயனின் இரு முக பரிமாணம்... உள்ளிட்டவையே ஆனந்த் ஷங்கரின் இயக்கத்தில் புதுசு. மற்றபடி, "உன்னோட தேவைக்காக என்னோட நேரத்தோட விளையாடாத..." உள்ளிட்ட டயலாக்குகள் வசீகரீக்கின்றன.
ஆக மொத்தத்தில், ஆனந்த் ஷங்கரின் எழுத்து, இயக்கத்தில் அடிக்கடி, "பன்முகனாக மாறித்மாறித் தெரியும் விக்ரமின் இருமுகன் தமிழ் சினிமாவுக்கு புதுமுகன் - வசூல் முகனா? பொறுத்திருந்து பார்ப்போம்!
---------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
அம்பியைக்கூட அஞ்சு நிமிஷத்துக்கு அந்நியனாக மாற்றும் அதிபயங்கர ஊக்க மருந்தை தயாரித்து அதை உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுக்கும் சப்ளை செய்ய நினைக்கும் மாஃபியா 'லவ்' அண்ட் கோ.. அவனை அழிக்கப் புறப்படும் உளவுத்துறை அதிகாரி அகிலனாக விக்ரம். அவருக்கு துணையாக ஆயுஷி (நித்யாமேனன்). லவ் Vs அகிலனே இருமுகன்.
'10 எண்றதுக்குள்ள' என்ற மிகப் பெரிய டிஸாஸ்டருக்கு பிறகு ஒரு சக்ஸஸ் கொடுத்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கி இருக்கிறார் விக்ரம். 'அரிமா நம்பி' என்ற வெற்றிப் படத்தை தந்த டைரக்டர் ஆனந்த் ஷங்கருக்கு இது இரண்டாவது படம். ஸோ... இருவர் தலையிலும் ஆப்பிள். கையில் துப்பாக்கி இறுதியில் ஆப்பிள் தப்பிவிட்டது பாவம்.
முரட்டு தாடி, மிரட்டும் உடல் மொழி என வழக்கம் போலவே 100 சதவீத உழைப்பைக் கொட்டி இருக்கிறார் விக்ரம். ஜிவ்வ்வ்வென்ற ஆரம்ப காட்சிகள் பலவீனமான திரைக்கதையால் ஜவ்வ்வ்வாக இழுபடுகிறது.
நயன் கொள்ளை அழகு தட்ஸ் ஆல். சீரியஸான இடங்களில் எல்லாம் மொக்கை காமெடி அடித்து கடுப்பை டாப் - அப் செய்து விட்டுப் போகிறார் தம்பி ராமய்யா.. வெரி ஸாரிய்யா! அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளால் முதல் பாதி ஓரளவு சுவாரஸ்யத்துடன் நகர்கிறது. லவ் என்ற வில்லன் கேரக்டரில் நளினமான உடல் மொழியிலும், பெண்மை கலந்த மாடுலேஷனிலும் அப்ளாஸ் அள்ளுகிறார் விக்ரம்.
தமிழில் ஒரு பாண்ட் மூவியாக வந்திருக்க வேண்டிய அத்தனை அம்சமும் கதையில் இருக்கிறது. அநியாயத்துக்கு கோட்டை விட்டிருக்கிறார்கள்.
இருமுகன்: கூகுள்மகன்
குமுதம் ரேட்டிங் ஓகே
-----------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
ஒருமுகன் உக்கிர ஜேம்ஸ்பாண்டாவான்;
மறுமுகன் மயக்கும் அரவாணியென்று
சுறுசுறு வேகம் சூப்பராய் காட்டி
நறுவிசு நடிப்பை நல்கினார் விக்ரம்!
பலப்பல படங்களில் பார்த்துச் சலித்த
பழியதை வாங்கிடும் கதைதான் இதுவும்!
கலகல குடும்பம் சிதறிய பின்னே
கலங்கும் நாயகன் சலம்பும் கதைதான்!
அசுரத் தனமாய்ச் செயல்பட வைக்கும்
அற்புத மருந்தைத் தவீர வாளன்/ளி
விற்றிட நினைக்கும் விபரீத நிகழ்வை
முற்றிலும் தடுத்திட முயல்வார் விக்ரம்!
நித்யா மேனன், நயன தாரா
வித்யாச வேடம் வெளுத்தே விட்டனர்!
அத்யா வசியப் பாதுகாப் பில்லா
சிறைக் காட்சிகள் சிரிப்போ சிரிப்பு!
இத்தனை நாளாய் இந்தியப் போலீஸ்
எத்தனை படத்தில் கோமாளி யானது...
மாத்தி யோசித்த படத்தில் இங்கே
மலேசியப் போலீஸ் ஏமாளி வேடம்!
லொக்கே ஷன்கள் அதகளம் அமர்க்களம்!
வெக்கே ஷனுக்கு வெளிநாடு சென்ற
அனுபவம் தன்னை அள்ளித் தந்திடும்;
ஒளியும் ஒலியும் டாப்பு டக்கர்!
படத்தின் நீளம் ஜவ்வாய் இழுக்குது
பாடல் காட்சிகள் பாடாய்ப் படுத்துது
ராமையா சிரிப்பு ரம்பம் போடுது
ஆமைபோல வேகம் பின்பாதி காட்டுது!
அரவாணி வேடம் பேசும் வசனம்
அரைகுறையாகவே புரிய முடியும்
பாடி லாங்வேஜ் விக்ரம் நடிப்பில்
லேடி யங்ஏஜ் லாகவ நளினம்!
ஆவல் தூண்டும் ஆடல் செட்டிங்க்ஸ்
கோவா கார்னிவல் போன்றே இளமை
பாதாம் பாலாய் இனிக்கும் நித்யா
பாடல் சீன்தான் பரவசம் போங்கோ!
அரிவாள் வீச்சுக்குத் தலையைச் சாய்க்கும்
அரிமா நிகர்த்தோர் அநேகர் உண்டு!
தோட்டா வுக்கே டாட்டா காட்டித்
தாத்தா ஒருத்தர் தலையைச் சாய்ப்பார்!
படத்தில் காட்டும் அதிசய மருந்தை
பாட்டில் முழுக்கக் குடித்தால் மட்டுமே
திடத்துடன் படத்தை ரசிக்க முடியும் -
முடியும் வரையில் இந்தப் படத்தை!
திரையரங்கில் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ரசிகர் ஜீவாவின் கருத்து: இடைவேளைக்கு முன்னர் வேகம், பின்பாதி இழுவை. அறிவியல் கருத்துக்கள் நிறைய உண்டு. ம்ம்ம்.. பார்க்கலாம்!