இரவுக்கு ஆயிரம் கண்கள்,Iravukku Aayiram Kangal

இரவுக்கு ஆயிரம் கண்கள் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

நடிப்பு - அருள்நிதி, மகிமா நம்பியார், அஜ்மல் மற்றும் பலர்
இயக்கம் - மு. மாறன்
இசை - சாம். சிஎஸ்
தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரி

ஒரு கொலை, அதற்கான காரணம் என்ன, பின்னணி என்ன என்ற ரீதியில் இருக்கும் மர்மக் கதைகளை தமிழ் சினிமாவில் யாரும் அவ்வளவாக படமாக்குவதே கிடையாது. ஒரு நாயகன், ஒரு காதலி, ஒரு வில்லன் என பார்த்துப் பார்த்துப் பழகின் போன பார்முலாவில் படம் எடுப்பவர்கள் தான் இங்கு அதிகம்.

அவற்றிலிருந்து வித்தியாசமான கதைக் களத்துடன் வரும் படங்கள் மிகப் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், முதலுக்கு மோசமில்லாத வரவேற்பைப் பெற்றுவிடும். அப்படி வந்திருக்கும் ஒரு படம்தான் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்'.

அறிமுக இயக்குனர் மு.மாறன் தன் முதல் படத்திலேயே கொஞ்சம் சிக்கலான கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார். படமாகக் கொடுத்த விதத்தில் பெரிய குறையில்லை. ஆனால், திரைக்கதை அமைப்பில் ஒரு நேர்க்கோட்டு யுக்தியைக் கையாண்டிருந்தால் படத்தில் விறுவிறுப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும். காட்சிக்குக் காட்சி, அடுத்தடுத்து திருப்புமுனைகள் வருவதால் படம் பார்க்கும் ரசிகன் திரைக்கதையைத் தொடர்வதில் குழப்பம் ஏற்படும் என்பதை மட்டும் அவர் யோசிக்கவில்லை போலிருக்கிறது.

கால் டாக்சி டிரைவராக இருப்பவர் அருள்நிதி, அவருடைய நர்ஸ் காதலி மகிமா நம்பியார். மகிமா மருத்துவப் பணி செய்யும் ஒரு வீட்டில் உள்ள சாயா சிங்குடன் நட்பாகப் பழகுகிறார். சாயா சிங்கை நிர்வாணப்படுத்தி வீடியோ ஒன்றை எடுத்து அவரை பிளாக் மெயில் செய்கிறார் அஜ்மல். அவரிடமிருந்து அந்த வீடியோவை எப்படியாவது வாங்கித் தரும்படி காதலர் அருள்நிதியிடம் கேட்கிறார் மகிமா. காதலி சொன்னதற்காக அந்த வீடியோவை எடுக்க அஜ்மல் வீட்டிற்குள் நுழைகிறார். அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டுக் கிடக்கிறார். அவரை அருள்நிதிதான் கொலை செய்தார் என போலீஸ் அவரைத் துரத்துகிறது. செய்யாத கொலையிலிருந்து தப்பிக்க அருள்நிதி என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் தனக்குப் பொருத்தமான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்வதில் அருள்நிதி பிரகாசிக்கிறார். எடுத்து நடிக்கும் கதாபாத்திரங்களில் அப்படியே பொருந்திப் போகிறார். இந்த கால் டாக்சி டிரைவர் கதாபாத்திரத்திலும் அவ்வளவு யதார்த்தமாக நடித்திருக்கிறார். தனக்கு ஜோடியாக நயன்தாரா வேண்டும், ஹன்சிகா வேண்டும் என்றெல்லாம் அருள்நிதி அடம்பிடிக்க மாட்டார் போலிருக்கிறது. தனக்கான பொருத்தமான ஹீரோயின்களுடன் திருப்திப்பட்டுக் கொள்கிறார்.

அவருடைய காதலியாக மகிமா நம்பியார். படத்தில் ஏற்கெனவே இருவரையும் காதலர்களாகக் காட்டிவிடுவதால் படத்தில் காதல் காட்சிகள் இல்லை. மகிமா வரும் ஒவ்வொரு காட்சியிலும் இயல்பான அழகுடன், மகிழ்ச்சியான முகத்துடன், அழகான சிரிப்புடன் கவர்கிறார். நடிப்பதற்குத்தான் அதிக வேலையில்லை.

அஜ்மல், வித்யா, சுஜா வருணி இந்தக் கூட்டணிதான் படத்தின் வில்லன், வில்லிகள். வித்யா, சுஜாவை வைத்து சபலக்காரர்களிடமிருந்து பிளாக் மெயில் செய்து பணம் பறிப்பது தான் அஜ்மல் வேலை. பணம் பறிப்பதற்கான அரதப்பழசான டெக்னிக் இது. இதை இந்தக் காலத்திற்கேற்ப கொஞ்சம் 'டெக்னோ'வாக மாற்றியிருக்கலாம். வித்யா, சுஜா இருவரும் சில காட்சிகளில் வருவதோடு வேலை முடிந்துவிடுகிறது. அஜ்மல் தேவையே இல்லாமல் ஓவர் ஆக்டிங் செய்கிறார். அவருக்கு வில்லத்தனம் வரவேயில்லை.

ஜான் விஜய், சாயா சிங், ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், லட்சுமி ராமகிருஷ்ணன் என கதையில் வேறு சில முக்கிய துணை கதாபாத்திரங்களும் உண்டு.

ஒரு கொலை, அந்தக் கொலை நடக்கும் சமயத்தில் நால்வர் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவது. இதுதான் படத்தின் ஒன்லைன். இதை அற்புதமான முடிச்சுடன் ஒரு மர்மக் கதை நாவலாசிரியரிடம் கொடுத்திருந்தால் விறுவிறுப்பான, பரபரப்பான திரைக்கதை அமைத்து கொடுத்திருப்பார். இடைவேளைக்குப் பின் படத்தில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் ஆனால் எதுவுமே நம்மை திக்கென்று அதிர்ச்சியடைய வைக்கவில்லை.

அற்புதமான படத் தலைப்பை வைத்த இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் முதல் படத்திலேயே பிரமாதமான த்ரில்லர் படத்தைக் கொடுத்த இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றிருப்பார். இந்தக் குறையை அடுத்த படத்தில் நிவர்த்தி செய்து கொள்ளட்டும்.

படத்தில் நாயகன் பெயர் பரத், நாயகி பெயர் சுசீலா. பட்டுக்கோட்டை பிரபாகரின் மர்மக் கதை நாவல் கதாபாத்திரங்கள். ஒருவேளை அவர் கதையைத்தான் படமாக்கியிருக்கிறார்களோ ?.

சாம் சி.எஸ். பின்னணி இசை, த்ரில்லர் படங்களுக்கு எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருக்கிறது.

படம் முடிந்த பிறகும், எழுத்தாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் அருள்நிதியிடம், அவருக்கு நடந்த சம்பவங்களை வைத்து அப்படியே கதையாக எழுதப் போகிறேன், அதில் சில மாற்றங்களை செய்யலாம் என இருக்கிறேன் சொல்லி, மேலும் சில காட்சிகள் வருவது படத்திற்குத் தேவையில்லாதது. ஏற்கெனவே, குழப்பமான திரைக்கதையாகச் சென்று முடிந்த படம், மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்தக் காட்சிகளை தாராளமாக வெட்டித் தூக்கலாம். ரசிகர்கள் குழம்பாமல் இருப்பார்கள்.

இரவுக்கு ஆயிரம் கண்கள் - முழுமையாகப் பார்க்கவில்லை...!

 

பட குழுவினர்

இரவுக்கு ஆயிரம் கண்கள்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓