60 வயது மாநிறம்,60 Vayathu Maniram

60 வயது மாநிறம் - சினி விழா ↓

Advertisement
3.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - விக்ரம்பிரபு, பிரகாஷ்ராஜா, சமுத்திரக்கனி, இந்துஜா, குமரவேல் மற்றும் பலர்
இயக்கம் - ராதாமோகன்
இசை - இளையராஜா
தயாரிப்பு - வி கிரியேஷன்ஸ்

பணம் சம்பாதிக்க வேண்டும், அமெரிக்காவோ, சிங்கப்பூரோ ஏதோ ஒரு வெளிநாட்டிற்கு வேலைக்குப் போக வேண்டும் என்ற பேராசையில், தங்களது குடும்பத்திற்குக் கூட நேரம் ஒதுக்காமல் எப்போதுமே ஏதோ ஒரு பரபரப்பில் இருக்கும் அனைவருமே இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் உறவுகளின் உன்னதத்தை நாமும் உள்ளுக்குள் உணரும்படி படத்தைக் கொடுக்கும் இயக்குனர் ராதாமோகன், இந்தப் படத்திலும் அதையே செய்திருக்கிறார். கன்னடப் படத்தின் ரீமேக் என்றாலும் தமிழுக்கும் பொருத்தமான கதையாகவே இருக்கிறது. ஆனால், பல காட்சிகளில் ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்பது இல்லாமல் காட்சி அமைப்புகள் மிகவும் சாதாரணமாக இருக்கின்றன. செயற்கையாக படத்திற்கு எந்தவிதமான ரிச்னெஸ் கொடுக்க வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்களோ?.

ஞாபக மறதியைத் தரும் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர் பிரகாஷ்ராஜ். மும்பையில் வேலை கிடைத்ததால் அப்பா பிரகாஷ்ராஜை ஒரு இல்லத்தில் சேர்த்துவிட்டுச் செல்கிறார் மகன் விக்ரம் பிரபு. அமெரிக்காவில் வேலை கிடைத்ததால், சென்னைக்கு வந்து அப்பாவுடன் சில நாட்கள் இருக்க ஆசைப்படுகிறார். இல்லத்திலிருந்து அப்பாவை வெளியில் அழைத்துச் சென்று மீண்டும் இல்லத்தில் விட்டுச் செல்லும் போது பிரகாஷ்ராஜ் காணாமல் போய்விடுகிறார். தொலைந்து போன அப்பாவை இல்லத்தின் டாக்டரான இந்துஜாவுடன் சேர்ந்து கண்டுபிடிக்கத் தொடங்குகிறார் விக்ரம் பிரபு. அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

அப்பா பிரகாஷ்ராஜ் - மகன் விக்ரம்பிரபு பாசம் ஒரு பக்கம், விக்ரம் பிரபு - இந்துஜா காதல் மறுபக்கம், பிரகாஷ்ராஜ் - சமுத்திரக்கனி நேசம் மற்றொரு பக்கம் என உறவுகளின் உன்னதத்தால் பின்னப்பட்ட கதை. படத்தில் உள்ள மற்ற கிளைக் கதாபாத்திரங்களும் விலை மதிக்க முடியாத பாசத்தை அவரவர் கதாபாத்திரங்களில் வெளிப்படுத்துகின்றன. படத்தைப் பார்க்கும் போது எப்படிப்பட்ட தைரியசாலிக்கும் ஒரு காட்சியிலாவது கண்ணீர் எட்டிப் பார்த்துவிடும்.

விக்ரம் பிரபு முதல் முறையாக அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்புக்காகக் கைத்தட்டல் வாங்குவது இந்தப் படத்தில்தான் நடந்திருக்கும். அம்மாவுக்கு கேன்சர் வந்து இறந்துவிட்டார்கள், அப்பாவுக்கு அல்சைமர், நான் என்ன பாவம் செய்தேன் என தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் காட்சியில் நடிகர் திலகத்தின் வாரிசு என்பதை புரிய வைக்கிறார். அப்பா பிரகாஷ்ராஜுடன் தன் பாசத்தைப் பகிர்ந்து கொள்வதிலும், அவரைக் கவனிக்காமல் விட்டதைப் பற்றித் தவிப்பதிலும், இந்துஜாவிடம் காதலை சொல்லாமல் மறைப்பதிலும் விக்ரம் பிரபுவின் நடிப்பு மெருகேறியிருக்கிறது.

பிரகாஷ்ராஜ். இன்னும் எத்தனைப் படங்களில் இவருடைய நடிப்பைப் பற்றிப் பாராட்டுவது. சில சமயம் ஓவர் ஆக்டிங் கூடச் செய்துவிடுவார். ஆனால், இந்தப் படத்தில் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இப்படித்தான் இருப்பாரோ என்று நமக்கு அந்தக் கதாபாத்திரத்தில் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்.

கொலைகளைச் செய்யும் அடியாளாக சமுத்திரக்கனி. அவருடைய உதவியாளராக கலக்கப் போவது யாரு சரத். சில காட்சிகளில் சமுத்திரக்கனியைக் கூட தன் யதார்த்த நடிப்பில் ஓவர்டேக் செய்கிறார் சரத். சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் சினிமாத்தனம் இல்லாமல் சாதாரண அடியாளாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு ஏற்படும் முடிவு, அவருடைய முதலாளி ஆகியவை சம்பந்தப்பட்ட காட்சிகள்தான் சினிமாத்தனமாக இருக்கிறது. இவை இல்லாமல் இருந்தாலும் படத்திற்கு அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காது.

இல்லத்தின் டாக்டராக இந்துஜா. தமிழ் சினிமா நாயகி என்றாலே இப்படித்தான் இருக்கும் என்ற வரையறையைத் தாண்டிய ஒரு இயல்பான கதாபாத்திரம். அனைத்துமே வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் இப்படி ஒரு சேவை மனப்பான்மையுடன் இந்தக் காலத்தில் இருக்கும் டாக்டர்கள் குறைவுதான். தனக்குள் இருக்கும் காதலை கண்கள் வழியே வெளிப்படுத்தும் கனிவான கதாபாத்திரம் இந்துஜாவுக்கு. தமிழ் சினிமாவில் இவரைப் போன்ற நடிகைகளை நம்பி பல வித்தியாசமான கதாபாத்திரங்களை உருவாக்கலாம்.

சீரியசான படத்தின் கலகலப்புக்கு குமரவேல் கதாபாத்திரம் பெரிய ரிலாக்சாக அமைந்துள்ளது. ராதா மோகன் படத்தில் மட்டும் எப்படி அற்புதமான கதாபாத்திரம் அவருக்குக் கிடைத்துவிடுகிறது.

இளையராஜாவின் இசை தனியாகத் தெரியாமல் கதையுடன் சேர்ந்து பயணிக்கிறது. இளையராஜா பாடும் பாடல் என்றாலே உருக்கம் வந்துவிடும். இந்தப் படத்தில் அந்த உருக்கம் கண்களில் மட்டும் கண்ணீரை வரவழைக்கிறது, இதயத்தில் இடிக்கவில்லை.

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள பல படங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. இந்தப் படம் ரீமேக் படமாக இருந்தாலும் பாசமற்ற சிலர் இந்தப் படத்தைப் பார்த்தால் தங்களை ரீமேக் செய்து கொள்வார்கள்.

60 வயது மாநிறம் - தவறவிட வேண்டாம்.

 

60 வயது மாநிறம் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

60 வயது மாநிறம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓