மலேஷியா டூ அம்னீஷியா,Malaysia to Amnesia

மலேஷியா டூ அம்னீஷியா - பட காட்சிகள் ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - மங்கி மேன் கம்பெனி
இயக்கம் - ராதாமோகன்
இசை - பிரேம்ஜி
நடிப்பு - வைபவ், வாணி போஜன், கருணாகரன்
வெளியான தேதி - 28 மே 2021 (ஜீ 5)
நேரம் - ஒரு மணிநேரம் 56 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

இந்த கொரோனா காலத்தில் ஓடிடி வெளியீட்டிற்காகவே உருவாக்கப்பட்ட படம் இது. இயக்குனர் ராதாமோகன் கதைக்காக பெரிதும் மெனக்கெடவில்லை. கமல்ஹாசன் நடித்த பஞ்ச தந்திரம் படத்தின் கதையிலிருந்தே ஒரு தந்திரத்தை எடுத்துக் கொண்டு இந்தப் படத்தின் கதையை அமைத்துவிட்டார்.

பஞ்ச தந்திரம் படத்தில் பஞ்சமில்லாத விதத்தில் விறுவிறுப்பும், பரபரப்பும், நகைச்சுவையும் இருந்தது. இந்தப் படத்தில் அது கொஞ்சம் பஞ்சத்துடனேயே இருக்கிறது.

வைபவ் ஒரு பிசினஸ்மேன். அன்பான மனைவி வாணி போஜன், ஒரு பெண் குழந்தை என இருப்பவருக்கு ஒரு சபல புத்தி. பெங்களூருவில் இருக்கும் ஆசைத்தோழி ரியா சுமனை சந்திக்க, வீட்டில் மலேஷியா செல்வதாக பொய் சொல்லிவிட்டு செல்கிறார். ரியாவின் வீட்டில் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என நினைப்பவருக்கு, அவர் செல்வதாகச் சொன்ன மலேஷியா விமானம் நடுவானில் காணாமல் போன செய்தி பேரிடியாக வருகிறது. தான் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை சொல்ல வேண்டிய கட்டாயம். நண்பன் கருணாகரன் ஆலோசனையின்படி தனக்கு பழைய விஷயங்கள் மறந்துவிட்டதாக நாடகமாடுகிறார். மனைவி வாணி போஜன் அதை நம்பிவிட்டாலும், அவர்கள் வீட்டிற்கு வரும் வாணியின் தாய்மாமா எம்.எஸ்.பாஸ்கருக்கு சந்தேகம் வருகிறது. வைபவ், கருணாகரனின் களவாளித்தனங்களை கண்டுபிடிக்க முயல்கிறார். வைபவ் தப்பித்தாரா, மாட்டினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் ஆரம்பான கொஞ்ச நேரத்திலேயே சுவாரசியமாக நகர்ந்து அடிக்கடி சிரிக்கவும் வைக்கிறது. அப்படியே மலேஷியாவுக்குச் செல்லும் விமானம் போல டேக் ஆப் ஆகும் என்று எதிர்பார்த்தால் இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென பெங்களூருவில் தரையிறங்கிய விமானம் போல தரையிறங்கி விடுகிறது. அந்த சுவாரசிய தருணங்களை அடுத்தடுத்து மெயின்டைன் செய்யத் தவறிவிட்டார் இயக்குனர். இல்லையென்றால் முழுவதுமாக ஒரு கலகலப்பான படத்தைப் பார்த்தத் திருப்தி கிடைத்திருக்கும்.

அம்னீஷியா வந்த அப்பாவிக் கணவனாக வைபவ். அது எப்படி அப்பாவி என சொல்ல முடியும். அதான் பெங்களூருவில் ஆசைத்தோழி ஒருவரை வைத்திருக்கிறாரே ?. அதனால், அடப்பாவிக் கணவன் என்றே சொல்வோம். இதற்கு முன் வைபவ் கதாநாயகனாக நடித்த படங்களைவிட இந்தப் படத்தில் அவருடைய நடிப்பில் நிறையவே முன்னேற்றம் தெரிகிறது. தன் குடும்பத்தின் பாசத்தை உணர்ந்து என்ன முடிவெடுக்கலாம் என்பதில் நெகிழவும் வைக்கிறார்.

வைபவ்வின் அன்பான மனைவியாக வாணி போஜன். அழகான சிட்டி பெண் போல உள்ளவரை, அப்பாவியான ஒன்றுமே தெரியாத மனைவி எனக் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வைபவ்வின் நண்பனாக கருணாகரன். உயிர் காப்பான் தோழன், மனைவியிடமிருந்தும் காப்பான் தோழன் என நண்பனின் சிக்கலில் இருந்து அவனைக் காப்பாற்றத் துடிக்கும் உயிர் நண்பனாக கலகலப்பூட்டுகிறார். வைபவ்வின் ஆசைத் தோழியாக ரியா சுமன். ஓரிரு காட்சிகள்தான் என்றாலும் யாரிவர் என கவனிக்க வைத்துள்ளார்.

ராதாமோகன் படம் என்றாலே எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு சிறப்பான கதாபாத்திரம் அமைந்துவிடும். இந்தப் படத்தில் அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போல தாய்மாமா கதாபாத்திரத்தில் தெறிக்க விடுகிறார். பலரது குடும்பங்களில் இப்படி இம்சை கொடுக்கும் மாமாக்கள் கண்டிப்பாக இருப்பார்கள். ஞாபகமறதி சச்சு கதாபாத்திரம், ராதாமோகன் இயக்கத்தில் இதற்கு முன் வெளிவந்த மொழி படத்தின் எம்எஸ் பாஸ்கர் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்துகிறது.

பிரேம்ஜி இசையில் ஒரே ஒரு மிகச் சுமார் ரக பாடல். ஆனால், பின்னணி இசையில் ஏமாற்றவில்லை. ஒரே பிளாட்டில் பல காட்சிகள் நகர்வது கொஞ்சம் நாடகத்தனமாக இருக்கிறது. இரண்டு மணி நேரப் படத்தில் முதல் ஒரு மணி நேரத்தில் இருந்த சுவாரசியம் இரண்டாவது ஒரு மணி நேரத்தில் இல்லாமல் போய்விடுகிறது.

மலேஷியா டூ அம்னீஷியா - செலக்டிவ்...

 

மலேஷியா டூ அம்னீஷியா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மலேஷியா டூ அம்னீஷியா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓