Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அபியும் நானும்

அபியும் நானும்,Abium Naanum
01 ஜன, 1970 - 05:30 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அபியும் நானும்

- தினமலர் விமர்சனம் -

அப்பா - மகள் இடையேயான அளவில்லாத பாசமும், அவர்களுக்கு இடையேயான பிரிவுகளும்தான் அபியும் நானும் படத்தின் கதையும் - காட்சிகளும்!

ஊட்டி பக்கம் ஒரு எஸ்டேட் அதிபர் ரகுராமன். மனைவி அனு, மகள் அபி என்று தனக்‌கென ஒரு உலகில் வாழும் ரகு, மகளின் பள்ளிப் படிப்பில் தொடங்கி, கல்லூரி படிப்பு, கல்யாணம் காட்சி வரை... மகளு‌டனான பிரிவுகளை தாங்க முடியாமல் படும் அவஸ்தைகளை காட்சிகளாக்கி சுவாரஸ்யமாக படமாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. அதுவும் பிளாஷ்பேக் காட்சிகளாக, தான் பார்க்கில் சந்திக்கும் சுதாகரிடம், தனக்கும் தன் மகள் அபிக்கும் இடையில் இருந்த நட்பையும், நிகழ்ந்த சின்னச் சின்ன பிரிவுகளையும், கருத்து வேறுபாடுகளையும் ரகுராமன் சொல்வது போன்றே அபியும் நானும் மொத்த படமும் படமாகியிருப்பது விஷேசம்!

பாசக்கார அப்பாவாக... சில சமயங்களில் பைத்தியக்கார அப்பா ரகுராமனாக பிரகாஷ்ராஜ் பிரமாதப்படுத்தியிருக்கிறார். மகள் அபியை பிரிகேஜில் சேர்ப்பதற்காக இரவுபகலாக கண்விழித்து படிப்பதில் ஆர்வம் காட்டும் பிரகாஷ் ராஜ், கடைசியில் அப்படியொரு டெஸ்ட்டே வைக்கப்படாததில் காட்டும் வருத்தம், மகளுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்து விட்டு... பின்னாலேயே பயந்தபடி பாலோ - அப் செய்யும் பிரமாதம் என காட்சிக்கு காட்சி பொறுப்புள்ள அப்பாவாக பின்னி பெடலெடுத்திருக்கிறார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ்ராஜூக்கு தானும் சளைத்தவர் இல்லை என்பது மாதிரி, மகள் அபியாக த்ரிஷாவும், பிரேம் டூ பிரேம் வாழ்ந்திருக்கிறார் என்றால் அது மிகையல்ல. சைக்கிளில் தனியாக செல்லும் அளவிற்கு வளர்ந்த தன்னை குழந்தையாக நினைத்து காரில் பாலோ பணணும் அப்பாவுக்கு, தான் வளர்ந்து விட்டதை உணர்த்துவதில் ஆரம்பித்து, படிக்க சென்ற இடத்தில் தான் விரும்பிய பஞ்சாப் இளைஞரை அப்பா சம்மதத்துடன் மணம் முடிப்பது வரை எல்லாவற்றிலம் ஓ போட வைக்கும் உருப்படியான மகளாக த்ரிஷா உயர்ந்து நிற்பது பேஷ் பேஷ் சொல்ல வைக்கிறது.

பிரகாஷ் ராஜூக்கு முன் மகளை புரிந்து கொள்ளும் தாய் அனுவாக நடிகை ஐஸ்வர்யாவும் தன் பங்குக்கு பாடுபட்டுள்ளார். மகள் த்ரிஷாவை புரிந்து கொள்ளும் தாயாக நடித்துள்ள ஐஸ்வர்யா, அம்மா லட்சுமியின் பெயரை இந்த படத்தில் காப்பாற்றியிருக்கிறார் என்பது மட்டும் உண்மை. இவர்கள் தவிர மாப்பிள்ளை ஜோகிந்தர் சிங்காக புதுமுகம் கணேஷ் வெங்கட்ராம், கதைகேட்கும் சுதாகராக பிருத்விராஜ், பிரகாஷ் ராஜின் நண்பர் தாமுவாக தலைவாசல் விஜய், அவர் மனைவியாக ஸ்ரீரஞ்சனி என அத்தனைபேரும் பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு.

தன் ஆசை மகள் அழைத்து வந்து விட்டாள் என்பதற்காக தெருவோர பிச்சைக்காரனுக்கு பெயர் சூட்டி, தன் வீட்டில் ஒருவராக்கிக் கொள்வதில் ஆரம்பித்து, சர்தாஜி ஜோக் அடித்துக் கொண்டு திரியும் நம்மவர்களுக்கு பிச்சை எடுக்கும் சர்தார்ஜியை எங்காவது காட்டுங்கள் பார்க்கலாம் என குட்டு வைப்பது வரை காட்சிக்கு காட்சி இயக்குனர் ராதாமோகனின் தனித்துவம் முழுக்க வியாபித்து கிடக்கிறது. அதே நேரம் அப்பாவிற்கு பிடிக்கும் என ஒரு விஷயம் காதில் விழுந்ததால், அம்மாவிற்கு தெரியாமல் அப்பாவை அழைத்து சென்று நடு இரவில் நட்ட நடு ஏரியில் படகில் இருந்தபடி மகள் கத்த விடுவதும், அப்பாவின் பர்த் - டேயை கொண்டாடுவதும் டூ-மச்!

மகள் த்ரிஷா, திருமணம் செய்து கொண்டு தன்னை பிரிந்து செல்ல போகிறாள் எனும் காட்சி, அறையில் உள்ள சுவர் சித்திரங்களின் மூலமாக எல்லாம் பிரகாஷ் ராஜின் கண்களுக்கு தெரிவது, பாமர ரசிகனுக்கும் புரியும் படியான இயக்குனரின் கவிதை காமெடி! அதே மாதிரி க்ளைமாக்ஸில் பிரகாஷ் ராஜ் - த்ரிஷா கதையை கேட்டு முடிந்ததும் ப்ருத்வி ராஜ் தன் சின்ன மகளை ஏக்கத்துடன் பார்க்கும் காட்சிகளும் இயக்குனரின் இண்டலிஜென்ட்டை எடுத்துரைக்கும்!

படத்தின் ஆரம்பக் காட்சி முதல் இறுதி காட்சி வரை ஏ‌தோ ஏடாகூடமாக நடக்கப் போகிறது... என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியபடி காட்சிகளை நகர்த்தி சென்று அப்படி எதுவும் இல்லாமல் இப்படத்‌ைத இயக்குனர் ராதாமோகன், தனது முந்தைய படமான மொழியை காட்டிலும் பாசிட்டிவ்வாக கொடுத்திருப்பது, வாவ் சொல்ல வைக்கிறது. தனது கதை, திரைக்கதை, இயக்கத்தின் மூலம் இப்படியும் நல்ல சினிமா எடுக்க முடியும் என இந்த படத்தின் மூலமும் நிரூபித்திருக்கும் இயக்குனருக்கு, பெண் ஒளிப்பதிவாளர் பிரீதாவும், பின்னணி இசை மூலம் வித்யாசாகரும் பெரும் பக்க பலமாக இருந்துள்ளனர்.

அபியும் நானும் - குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்


*****


 விகடன் விமர்சனம்

மகளுக்கான அன்பால் மட்டுமே நிரம்பி அப்பாவின் டைரி!

மகள் அபி (த்ரிஷா) பிறப்பிலிருந்து, பேரன்பும் பெரும் பிரியமுமாக அவளைச் சகல சுதந்திரங்களுடன் வளர்க்கிறார் பிரகாஷ்ராஜ். அதீத அன்பில் தன் மகள் எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர், அவள் பள்ளியில் சேர்க்கும்போது பிரிவின் முதல் வலியை உணர்கிறார். அதன் பிறகு வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களை சுலபமாகத் தாண்டிச் செல்ல, அப்பா மட்டும் முதல் படியிலேயே தங்கி நிற்பதே கதை!

அப்பா மகள் உறவை சமூகப் பார்வையுடன் சுவாரஸ்யமாகச் சொன்ன விதத்துக்கு இயக்குநர் ராதாமோகனுக்கு முதலில் "ஹேட்ஸ் ஆஃப்'!

அபியின் வளர்ச்சியைக் காட்ட, ஒரு அறைக்குள் குழந்தையாக நுழைந்து, அடுத்தக்கட்ட வயதில் திரும்பி வருவது பளிச் ஐடியா. அவ்வப்போது பாஸிங் பஃபூனாக மனோபாலா ஏதாவது கேள்வி கேட்க, பிரகாஷ்ராஜ் எடக்குமுடக்காகப் பதில் சொல்வது, பிள்ளைகளை ப்ரி.கே.ஜி. சேர்க்க அப்பாக்கள், அலெக்சாண்டரின் குதிரை பேரைத் தேடி அலைவது, 2 பஞ்சாபி வாண்டுகள் பிரகாஷ்ராஜிடம் ஜாலி டெரரிஸம் பண்ணுவது எனப் படம் நெடுக ஜாலி சாக்லேட்டுகள்.

பிரகாஷ்ராஜுக்கு இந்த படம் மனசை அள்ளும் மைல் ஸ்டோன். மகளின் பிரிவுகளின் போது உறைவதிலும், பிரதமருடனான உரையாடலில் விறைப்பதிலும், நடிப்பின் அத்தனை திக்குதிசைகளையும் எட்டிப்பிடிக்கிறார். அவருக்கு இணையாக நடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு, த்ரிஷாவின் சின்ன தோள்களில். குறை இல்லையென்றாலும் பிரமாதமாக ஸ்கோர் செய்திருக்கலாமே த்ரிஷ்!

அபியின் அம்மாவாக வரும் ஐஸ்வர்யா இயல்பாக ஈர்க்கிறார். பிச்சைக்காரனாக அபி வீட்டில் நுழைந்து, ஆல் இன் ஆலாக வளர்கிற காமெடியிலும் சென்ட்டிமென்ட்டிலும் செம தீனி எடுக்கிறார் குமரவேல். "ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் ஒரு அப்பாவும் பிறக்கிறான்!', "வசந்த் அண்ட் கோல வரிசையாக டி.வி. வெச்சிருப்பாங்க. கிரிக்கெட் பார்க்கும் போதும் ஒவ்வொரு பாலையும் ஒவ்வொரு டி.வில பார்ப்பேன்' போன்ற வசனங்களில் சிலிர்க்கவும், சிரிக்கவும் வைக்கிறார்கள் சி.பி.நாராயணன் சுப்பிரமணியன். ("வாழ்க்கையில...' என்று துவங்கும் அட்வஸ்களைத் தவிர்த்திருக்கலாம்!)

"வா வா' பாடலில் பழைய இளையராஜாவாகக் கனிந்து உருகும் வித்யாசாகர், "ஒரே ஒரு ஊரிலே' வில் நரம்புக்குள் இசைக் குளிர் ஊட்டுகிறார். ஊட்டின் அழகையும் பனியின் பூடகத்தையும் கேமராவில் அள்ளி அளித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ப்ரீதா.

இடைவேளை உண்டாக்கிய எதிர்ப்பார்ப்புடன் இரண்டாம் பகுதிக்கு வந்தால் "பஞ்சாபி குடும்பம்' என ஒரே விஷயத்தை வைத்து மொக்கை போடுவது அலுப். ஐஸ்வர்யா, பிரகாஷ்ராஜ் எனப் பலருக்கும் பல கட்டங்களில் என்ன வயது என்றே தெரியாதவாறு பலவீன மேக்கப். ஓவர்டோஸாக குமரவேல் அடிக்கடி "அம்மா சென்ட்டிமென்ட்' பேசுவது, தலைவாசல் விஜய் தத்தெடுப்பது என அங்கங்கே டிராமா வாசம். த்ரிஷா திருமணத்தில் ஜோகிந்தர் சிங்கின் அவ்வளவு சொந்தங்களும் வந்து அலப்பறை செய்யும்போது, பிரகாஷ்ராஜ் தரப்பில் மட்டும் மாமனார், மாமியார், தலைவாசல் விஜய் தம்பதிகளைத் தவிர, வேறு யாருமே திருமணத்தில் கலந்துக்கொள்ளாதது ஏன்?

சில குறைகள் இருந்தாலும், நிச்சயமாக இது நெஞ்சை வருடும் நெகிழ்ச்சி மயிலிறகு!

விகடன் மார்க் : 40/100


*****


குமுதம் விமர்சனம்

ஒரு ஊர்ல அப்பா, அம்மா அவங்களுக்கு ஒரே ஒரு சமர்த்துப் பொண்ணு... என்று குழந்தைகளை தூங்க வைக்க சொல்வது போன்ற எளிமையான கதை. அதில் பாசம், ஆதங்கம், ஈகோ, கோபம் என சகலத்தையும் கலந்து ஜாலியாய் படத்தைக் கொண்டுபோய் இருக்கிறார் டைரக்டர் ராதாமோகன்.

அப்பா பிரகாஷ்ராஜ். மகள் சிரித்தால் சிரிக்கிற, அவள் சற்று முகம் சுளித்தால் ஓவென அழுகிற பாசக்கார கேரக்டர். நடிப்பு ராட்சசனுக்குச் சொல்லித் தரணுமா?

அபியாக மேக்கப் இல்லாமல் த்ரிஷா! ப்ளஸ் டூ பெண்ணாகக் கூட அவரை நம்ப முடிவது ப்ளஸ். ப்ராக்டிக்கலான அம்மா வேஷத்தில் ஐஸ்வர்யா, சரியான சாய்ஸ். குரல்தான் கொஞ்சம் இடறல்.

ஸ்கூலுக்குப் போன மகள் "ஜஸ்ட் லைக் தட்' பாணியில் ஒரு பிச்சைக்காரரை வீட்டுக்குக் கூட்டி வருவதும், அவரைத் தயக்கத்துடன் பிரகாஷ்ராஜ் எதிர்கொள்வதும் அழுத்தமான சிறுகதை. பேரே இல்லாத அந்த வித்தியாசமான கேரக்டரில் வருகிற குமரவேலுவுக்கு இனி நிறை<யக் குணச்சித்திரங்கள் கிடைக்கும். பிச்சைக்காரருக்கு மரியாதை செய்த இயக்குநருக்கு ஒரு சல்யூட்.

இவர் பெக்கரா இருக்காருப்பா என்று குட்டிப் பொண்ணு சொல்கிற ஒற்றை வரியிலேயே வசனக் கூட்டணி நிமிர்ந்து பார்க்கிறது. மகளின் பஞ்சாபிக் காதலால் எரிச்சலடையும் பிரகாஷ்ராஜிடம் இதே பிச்சைக்காரர் மேட்டரை எடுத்து வைப்பது திரைக்கதை லாவகம்!

த்ரிஷா ஜோடி மும்பை மாடல் மன்மீத் சிங்,  திருமணக் கூட்டத்தில் க்ரியேட்டிவாக குறும்பு பண்ணுகிற வாண்டுகள் மனசில் இடம் பிடிக்கிறார்கள்.


ஒரு ஃபேமிலி ஆல்பத்தைப் புரட்டிப் பார்க்கிற  ஸ்டோரிக்கு ஊட்டி பொருத்தமான கதைக் களம்.  "ஒரே ஒரு ஊர்ல' பாடலில் நம்மூர் நாட்டுப்புற ட்யூனுக்கு பாலிவுட் மியூசிக்கைக் கலந்தது அபாரம். பாடலின் குரலைத் தேர்வு செய்த வித்யாசாகரின் புதுமைக்கு சபாஷ்! படத்தில் ஒரே எரிச்சல் ஆளாளுக்கு மெச்சூரிட்டி டயலாக் பேசுவது.

"அபியும் நானும்' நல்ல கூட்டணி! நாமும் இணைகிறோம்.
    



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
தொடர்புடைய படங்கள்

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in