2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு மற்றும் பலர்
தயாரிப்பு - போப்டா, கிரியேட்டிவ் என்டர்டெய்னர்
இயக்கம் - ராதாமோகன்
இசை - காஷிப்
வெளியான தேதி - 16 நவம்பர் 2018
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை வந்த திரைப்படங்களில் ஒரு உன்னதமான திரைப்படம் என்ற பாராட்டைப் பெற்ற ஒரு படமாக ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வெளிவந்த 'மொழி' படம் இருக்கிறது.

படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம்மை அந்த அளவுக்கு ஈர்த்தன. அது போன்றதொரு சிறப்பான படத்தை இனி, ராதாமோகன் கூட கொடுக்க முடியாது என்றே அப்போது தோன்றியது. அது உண்மைதான் என்பதை 'காற்றின் மொழி' படம் புரிய வைக்கிறது.

'60 வயது மாநிறம், காற்றின்மொழி' என அடுத்தடுத்து இரண்டு ரீமேக் படங்களை இயக்கி ராதாமோகன் அவருடைய தனித்தன்மையை இழந்து வருகிறாரோ என்று யோசிக்க வைக்கிறது.

உங்கள் உள்ளத்தில் உருகி உருகி நீங்கள் உருவாக்கிய ஒரு படத்துடன் அடுத்த முறை வாருங்கள் ராதாமோகன், உங்கள் திரைமொழியை ரீமேக் படங்களின் மூலம் கெடுத்துக் கொள்ள வேண்டாம். இது ஒரு அன்பான வேண்டுகோள்.

ஹிந்தியில் வெளிவந்த 'தும்ஹாரி சூலு' படத்தின் ரீமேக்தான் இந்த 'காற்றின் மொழி'. ஹிந்தியில் இல்லாத சில கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் தமிழில் சேர்த்திருக்கிறார்கள்.

ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் புரொடக்ஷன் மேனேஜர் ஆக வேலை பார்ப்பவர் விதார்த். அவருடைய மனைவி ஜோதிகா. மகன் தேஜஸ் கிருஷ்ணா என சிறிய குடும்பம். ஜோதிகாவிற்கு தனக்குப் பிடித்தமான வேலை ஒன்றைச் செய்ய வேண்டும் என்பது பேராசை. அப்படி அவருக்குப் பிடித்தமான ஒரு வேலையாக ரேடியோவில் ஆர்ஜே ஆக பணிபுரிய ஒரு வேலை கிடைக்கிறது. இரவு 10 மணிக்குதான் அந்த வேலை. அந்த நிகழ்ச்சி, கொஞ்சம் அப்படி, இப்படியான நிகழ்ச்சி. அதனால், அவரது குடும்பத்திற்குள் தென்றல் வீசாமல் புயல் வீச ஆரம்பிக்கிறது. அந்தப் புயலை அவர் சமாளித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஹிந்தியில் வித்யா பாலன் மிக மிக யதார்த்தமாக நடித்திருப்பார். இங்கு ஜோதிகாவை பழைய ஜோதிகாவாக காட்டுகிறேன் என அவரை முன்பை விட ஓவர் ஆக்டிங் செய்ய வைத்திருக்கிறார்கள். ஒரு சில சோகக் காட்சிகளில் மட்டுமே யதார்த்தமாக நடித்து கண் கலங்க வைக்கிறார். தனக்குப் பிடித்த வேலையைச் செய்ய விரும்பும் ஒரு பெண்ணாக முற்போக்கான சிந்தனை உள்ளவராகக் காட்டிவிட்டு, கடைசியில் குடும்பச் சூழலில் அவரை சிக்க வைப்பது முரண்படுகிறது. வேலைக்குப் போகும் ஜோதிகாவை மட்டம் தட்டுவதையே கணவர் விதார்த், அக்காக்கள், அப்பா ஆகியோர் வேலையாக வைத்திருக்கிறார்கள்.

ஜோதிகா, ஆர்ஜே செய்யும் அந்த இரவு நேர நிகழ்ச்சி என்ன மாதிரியான நிகழ்ச்சி என்பதில் ஒரு குழப்பத்தை உருவாக்குகிறார்கள். அது மன ரீதியிலான பிரச்சினைகளைச் சொல்லும் நிகழ்ச்சி என்றால் ஜோதிகா குடும்பத்தினர் எதிர்ப்பதில் அர்த்தமில்லை. ஆனால், படம் பார்ப்பவர்களுக்கு அது ஒரு பாலியல் ரீதியிலான நிகழ்ச்சி என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். நிகழ்ச்சியின் முதல் தொலைபேசி அழைப்பாளரே அவ்வளவு ஆபாசமாகப் பேசுகிறார். 'இட்லி, ஆப்பிள், ஹெட்லைட், வைப்பர்' என உள்ளாடை நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் நிச்சயம் அவ்வளவு ஆபாசமாகப் பேச மாட்டார். இந்தக் காலத்தில் உள்ளாடை நிறுவனங்களில் பெரும்பாலும் வேலை பார்ப்பவர்கள் பெண்களே.

படத்தில் அந்த ஒரு வசனம் மட்டும் ஆபாசமல்ல. ஆபாசமாக பேசுவதற்கென்றே படத்தில் மனோபாலா, மயில்சாமி கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். மனோபாலா வாயைத் திறந்தாலே இரட்டை அர்த்த வசனமாகவே பேசுகிறார். மயில்சாமி கதாபாத்திரம் பெண் பித்தன் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. ராதாமோகன், ஜோதிகா இருக்கும் ஒரு படத்தில் இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

ஜோதிகாவின் கணவராக விதார்த். ஒரு சில காட்சிகளில் ஜோதிகாவின் தம்பி போலவே தெரிகிறார். இருவரது பேவரிட் பாடல் 'நேத்து ராத்திர யம்மா' என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் இயக்குனரே. விதார்த்தின் நடிப்பிலும், பேச்சிலும் சேரன் அடிக்கடி எட்டிப் பார்க்கிறார். மனைவியுடனான சண்டைக்கு பஞ்சாயத்து செய்ய மாமனாரையும், மைத்துனிகளையும் அடிக்கடி அழைக்கும் சராசரிக்கும் கீழான ஒரு கணவர்.

ரேடியோ ஸ்டேஷன் ஹெட்டாக லட்சுமி மஞ்சு. மேக்கப்பிற்கு தனியாக சில மணி நேரம் செலவழித்திருப்பார் போலிருக்கிறது. நாயகி ஜோதிகாவை விட பளிச்சென மேக்கப் போட்டிருக்கிறார்கள். ராதாமோகனின் ஆஸ்தான நடிகர் குமரவேலுக்கு இந்தப் படத்தில் சரியான கதாபாத்திரம் அமையவில்லை.

இடைவேளை வரை ஒரு சராசரியான குடும்பக் கதையாக நகர்கிறது. இடைவேளைக்குப் பின் ஜோதிகா ஆர்ஜே-வான உடன் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். அது ஒரு நாடம் பார்க்கும் உணர்வையே தருகிறது.

12 வருடங்களாக வேலை பார்க்கும் விதார்த்துக்கே 25 ஆயிரம் கூட சம்பளமில்லை என்கிறார். ஆனால், அவர்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டின் வாடகையே 25 ஆயிரம் இருக்கும் போலிருக்கிறது.

எம்.எஸ். பாஸ்கர் கதாபாத்திரம் திணிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. அவருக்கு ஜோதிகா தான் அந்த ஆர்ஜே எனத் தெரிகிறது. அதை வைத்தே படத்தின் கிளைமாக்சை வேறு விதமாக காட்சிப்படுத்தி, நெகிழ்ச்சியுடன் முடித்திருக்கலாம்.

காஷிப்பின் இசையில் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. 'டர்ட்டி பொண்டாட்டி' என்ற பாடலின் ஆரம்பமே டூ மச். செல்லமாகப் பாடுவதில் கூட ஒரு அர்த்தம் வேண்டாமா?.

யோகி பாபு, சிம்பு எதற்காக 'கேமியோ' கதாபாத்திரங்களில் வருகிறார்கள் என்றே தெரியவில்லை. யோகி பாபுவின் இரண்டு காட்சிகளும் சிரிப்பை வரவைக்கவில்லை. சிம்பு வந்ததற்கு ஒரு டயலாக் பேசிவிட்டுச் செல்கிறார்.

'காற்றின் மொழி' என மொழியுடன் பேரை வைத்தால் மட்டும் 'மொழி' போல வந்துவிடாது.

காற்றின் மொழி - தென்றல் அல்ல

 

பட குழுவினர்

காற்றின் மொழி

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓