அழியாத கோலங்கள் 2,Azhiyatha Kolangal 2

அழியாத கோலங்கள் 2 - பட காட்சிகள் ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

நடிப்பு - பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி
தயாரிப்பு - வள்ளி சினி ஆர்ட்ஸ்
இயக்கம் - எம்.ஆர்.பாரதி
இசை - அரவிந்த் சித்தார்த்தா
வெளியான தேதி - 29 நவம்பர் 2019
நேரம் - 1 மணி நேரம் 42 நிமிடம்
ரேட்டிங் - 3/5

காதல், கதைகள் என்றாலே இளம் காதல் கதைகளைத்தான் நமது தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. எப்போதே ஒரு முறை தான் கொஞ்சம் முதிய காதல் கதைகள் வந்துள்ளன.

இயக்குனர் எம்.ஆர்.பாரதி, இந்த அழியாத கோலங்கள் 2 படத்தில் 24 வருடங்கள் ஆனாலும் அழியாமல் இருக்கும் ஒரு தனித்துவதமான காதலைக் காட்டியிருக்கிறார்.

படத்தில் முக்கியமாக மூன்றே கதாபாத்திரங்கள், ஒரே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வீடு. ஆனாலும், ஒரு படத்தை உணர்வு பூர்வமாக ரசிக்க வைக்க தேர்ந்த நடிப்பும், இயல்பான வசனங்களும் போதும் என நிரூபித்திருக்கிறார்கள்.

சாகித்ய அகாடமி விருதை டில்லியில் பெற்றுக் கொண்டு, 24 வருடங்கள் கழித்து தன் காதலி அர்ச்சனாவைச் சந்திக்க சென்னை செல்கிறார் எழுத்தாளர் பிரகாஷ்ராஜ். தங்களின் பழைய காதலை மீண்டும் நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள். ஆனால், திடீரென மாரடைப்பில் மரணமடைகிறார் பிரகாஷ்ராஜ். கல்லூரி செல்லும் வயதுடைய மகளுக்கு அம்மாவாய் இருக்கும் அர்ச்சனா வீட்டில் பிரபல எழுத்தாளர் பிரகாஷ்ராஜ் மரணமடைந்திருப்பதை மீடியாவும் மற்றவர்களும் ஏளனமாய் பேசுகிறார்கள். அப்போது பிரகாஷ்ராஜின் மனைவி ரேவதி வந்து அர்ச்சனாவைச் சந்திக்கிறார். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

கடந்த வருடம் வெளிவந்த 96 படத்தில் நாயகனான தன் பழைய காதலைனைத் நாயகனைத் தேடி நாயகி வருவார். இந்தப் படத்தில் தன் பழைய காதலியைத் தேடி நாயகன் வருகிறார். இரண்டு படங்களிலும் காதல் ஒன்றுதான். ஆனால், பிரிந்தாலும் தங்கள் காதலை மனதுக்குள் கொண்டாடும் காதலை இந்தப் படத்திலும் அழுத்தமாய் சொல்லியருக்கிறார்கள்.

எழுத்தாளராக பிரகாஷ்ராஜ். நிதானமான அவரது நடிப்பில் அனுபவம் பேசுகிறது. படபடவென பேசி வில்லத்தனம் காட்டும் பிரகாஷ்ராஜிடம் ஒரு தேர்ந்த நடிகர் உள்ளுக்குள் இருக்கிறார் என்பதை இது போன்ற படங்கள் அடிக்கடி ஞாபகப்படுத்திவிட்டுச் செல்கின்றன.

24 வருடங்கள் கழித்து முன்னாள் காதலன் பிரகாஷ்ராஜைச் சந்தித்த அதிர்ச்சியில் அர்ச்சனா. தேசிய விருதுகளை வாங்கிய நடிகைக்கு நடிப்பைச் சொல்லித் தர வேண்டுமா என்ன ?. ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுபூர்வமாய் நடித்திருக்கிறார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் அர்ச்சனாவின் அந்த அழுகை இன்னமும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஓரிரு காட்சியில் மட்டும் ரேவதி. ஆரம்பத்தில் வந்தவர் மீண்டும் கிளைமாக்சுக்கு முன்பாக ரீ-என்ட்ரி ஆகிறார். அர்ச்சனாவைப் பார்த்தபின், அவர் சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொண்டு அதற்கு அவர் தரும் ஒவ்வொரு விளக்கமும் மிக மிக மெச்சூர்டானவை. கணவனையும் தப்பாகப் புரிந்து கொள்ளாமல், அர்ச்சனாவையும் வருத்தப்ட வைக்காமல் அவர் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அர்த்தமானவை.

ஒரு போலீசின் சந்தேக விசாரணை எப்படியெல்லாம் இருக்கும் என்பதற்கு நாசரின் கதாபாத்திரம் சாட்சி. கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தாலும் அதிலும் ஒரு நிஜம் இருக்கத்தான் செய்கிறது.

அரவிந்த் சித்தார்த் இசையில் காட்சிகளுக்கேற்ற மென்மையான பின்னணி இசை பொருத்தமாக உள்ளது. ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் உணர்வுபூர்வமான காட்சிகளுக்குள் தன் ஒளிப்பதிவை இயல்பான் லைட்டிங்குடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் கே. நாயர்.

டிவி விவாத நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க வருவது போன்ற காட்சிகள் அமெச்சூராக இருக்கின்றன. பிரகாஷ் ராஜ், அர்ச்சனா, ரேவதி மூவரைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் வரும் காட்சிகளில் யதார்த்தம் இல்லாமல் நாடகத்தனம் அதிகம் இருக்கிறது. அவற்றைத் தவிர்த்திருக்கலாம்.

கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில் இது மாதிரியான படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தந்தால் மேலும் இது போன்ற சிறிய படங்கள் நிறைய வரலாம்.

அழியாத கோலங்கள் 2 - காதல் அழிவதில்லை

 

பட குழுவினர்

அழியாத கோலங்கள் 2

  • நடிகர்
  • இயக்குனர்

பிரகாஷ் ராஜ்

கர்நாடக மாநிலம், பெங்களூவை சேர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ். 1965ம் ஆண்டு, மார்ச் 26ம் தேதி, மஞ்சுநாத்ராய்-ஸ்வர்ணாலதா ஆகியோருக்கு, மகனாக பிறந்தவர் பிரகாஷ் ராய். ஆரம்பத்தில் பெங்களூர் டி.வி., நிகழ்ச்சி மற்றும் நாடகங்களில் பங்கேற்று வந்தவர், சினிமாவுக்காக தனது பெயரை பிரகாஷ் ராஜ் என்று மாற்றிக் கொண்டார். இயக்குநர் பாலசந்தரால் டூயட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமும் ஆன பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். குறிப்பாக தென்னிந்திய மொழிகளில் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் தன்னை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நிரூபித்துள்ளார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பிரகாஷ் ராஜ். நடிகை லலிதா குமாரியை 1994ம் ஆண்டு திருமணம் செய்தவர் 2009ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். பின்னர் நடன அமைப்பாளர் போனி வர்மாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

மேலும் விமர்சனம் ↓