நெஞ்சம் மறப்பதில்லை,Nenjam Marappathillai

நெஞ்சம் மறப்பதில்லை - பட காட்சிகள் ↓

Advertisement
3.25

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்
இயக்கம் - செல்வராகவன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - எஸ்ஜே சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசான்ட்ரா
வெளியான தேதி - 5 மார்ச் 2021
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 3.25/5

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு பேய்ப் படங்கள் ஆட்டிப் படைத்தன. பலரும் பல விதமான பேய்ப் படங்களைக் கொடுத்தார்கள். அவற்றில் சில படங்கள் பேய் ஓட்டம் ஓடின. சில படங்கள் வந்த சுவடு கூட தெரியாமல் ஓடிப் போயின. அந்த காலகட்டத்தில் இந்த நெஞ்சம் மறப்பதில்லை படம் வந்திருந்தால் நிச்சயம் பேயோட்டம் ஓடியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வழக்கமான பழி வாங்கும் பேய்க் கதை தான். ஆனால், இது செல்வராகவன் கொடுத்துள்ள பேய்க் கதை என்பதில் தான் வித்தியாசம் இருக்கிறது. திரைக்கதையிலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பிலும் தன்னுடைய தடத்தை அழுத்தமாகப் பதித்திருக்கிறார் செல்வராகவன்.

கம்பெனி ஓனரான எஸ்ஜே சூர்யா, மனைவி நந்திதா ஸ்வேதா, குட்டி மகன், நான்கு வேலைக்காரர்களுடன் காட்டுக்கு நடுவில் இருக்கும் பங்களாவில் வசிக்கிறார். அந்த குட்டி மகனைப் பார்த்துக் கொள்ளும் வேலையில் சேருகிறார் ரெஜினா கசன்ட்ரா. தான் வளர்ந்த ஆசிரமத்திற்கும், சர்ச்சுக்கும் நன்றாக உதவி செய்யலாம் என்ற ஆசையில் அங்கு செல்கிறார் ரெஜினா. கொஞ்சம் சைக்கோத்தனமாக இருக்கும் சூர்யாவிற்கு ரெஜினா மீது ஆசை. மனைவி ஊரில் இல்லாத சமயத்தில் ரெஜினாவைக் பாலியல் பலாத்காரம் செய்து, கொலையும் செய்துவிடுகிறார். அவரோடு அந்த வேலைக்காரர்களும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். பேயாக வரும் ரெஜினா அவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் மீதிக் கதை.

செல்வராகவன் எந்தக் கதையைச் சொன்னாலும் நேரடியாக புரியும்படி சொல்ல மாட்டார். நாமாக யோசித்து யோசித்து புரிந்து கொள்ளும்படி சுற்றி வளைத்துக் கதை சொல்வார். அது இந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனாலும், திரைக்கதையையும், கதாபாத்திரங்களின் உருவாக்கத்திலும் அவரது பாணி மாறுபட்டு இருக்கும். அவைதான் இந்தப் படத்தையும் ரசிக்க வைக்கிறது.

ராமசாமி என்று சொன்னால் பிடிக்காது, அதனால் ராம்சே. அந்த ராம்சே கதாபாத்திரத்திற்கு யாரை ரெபரன்ஸ் ஆக வைத்து உருவாக்கினார் என செல்வராகவனிடம் கேட்க வேண்டும். இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்களா என யோசிக்க வைக்கிறார். செல்வராகவன் யோசித்த அந்த ராம்சே கதாபாத்திரத்தை அவரைவிடவும் எஸ்ஜே சூர்யா நன்றாக உள்வாங்கிவிட்டார் போலிருக்கிறது, நடித்துத் தள்ளிவிட்டார். அவருடைய உடல்மொழி, வசனம் பேசும் தோரணை, நேரத்திற்கேற்ற பார்வை என மிரட்டியிருக்கிறார் சூர்யா.

ரெஜினா கசன்ட்ரா, நந்திதா ஸ்வேதா இருவரும் இதற்கு முன் சில பல தமிழ்ப் படங்களில் நடித்திருக்கிறார்கள். அந்தப் படங்களில் எல்லாம் அவர்களுடைய நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரம் பெரும்பாலான படங்களில் அமையவில்லை. அவர்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக இந்தப் படம் நிச்சயம் அமையும்.

வீட்டு வேலைக்குச் செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக ரெஜினா. அவர் முகத்தில் காட்டும் உணர்வுகளை அதற்கு முன்பாகவே முந்திக் கொண்டு காட்டுகிறது அவருடைய பெரிய விழிகள். பேயாக மாறிய பின் அவருக்கான ஸ்கோப் குறைந்துவிட்டது. இருந்தாலும் அதற்கு முன்பு வரை ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்துவிடுவதால் அந்தக் குறை தெரியவில்லை. எஸ்ஜே சூர்யாவின் மனைவியாக நந்திதா ஸ்வேதா. ஒரு பணக்கார வீட்டுப் பெண் எப்படியெல்லாம் நடந்து கொள்வாரா அப்படியே நடந்து கொள்கிறார்.

செல்வராகவன் படம் என்பதால் யுவன் இப்படி இசையமைக்கிறாரா அல்லது யுவனுக்காகவே காட்சிகளை அமைக்கிறாரா செல்வராகவன் எனச் சொல்லும் அளவிற்கு சில பல காட்சிகள் அமைந்துள்ளன. படம் முழுவதுமே யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை அந்தக் காட்சிகளை இன்னும் அழுத்தமாய் தூக்கி நிறுத்துகிறது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் பல குளோசப் காட்சிகள். ஒரு வீட்டிற்குள் அதிகம் நகரும் கதையில் கேமரா கோணங்களால் இன்னும் உயிரூட்டியிருக்கிறார்.

இடைவேளை வரை இருக்கும் ஒரு சுவாரசியம் அதன்பின் கொஞ்சம் குறைவது நிஜம்தான். ரெஜினா பேயான பின் தன்னைக் கொன்றவர்களைப் பழி வாங்குவதில் செல்வராகவனிடமிருந்து மேலும் வித்தியாசத்தை எதிர்பார்த்தால் அவரும் வழக்கமான பழி வாங்கலாகவே யோசித்திருக்கிறார். அதை மட்டும் மாற்றி யோசித்திருந்தால் நெஞ்சத்தில் இன்னும் ஆழமாக இடம் பிடித்திருக்கலாம்.

நெஞ்சம் மறப்பதில்லை - இதயத்தில் இடமுண்டு...

 

நெஞ்சம் மறப்பதில்லை தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

நெஞ்சம் மறப்பதில்லை

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓