கபடதாரி
விமர்சனம்
நடிப்பு - சிபிராஜ், நந்திதா, நாசர், ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு - கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்
இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
இசை - சைமன் கே கிங்
வெளியான தேதி - 28 ஜனவரி 2021
நேரம் - 2 மணி நேரம் 26 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
கன்னடத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்த காவலுதாரி படத்தை கபடதாரி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள். சைத்தான், சத்யா படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார்.
கன்னடப் படத்தின் கதையை அப்படியேதான் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். பெரிய மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படம் என்று வரும் சில படங்களில் அந்த சஸ்பென்ஸை கடைசி வரை காப்பாற்றாமல் விட்டுவிடுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் யார் கொலையாளி என்ற சஸ்பென்ஸ் நாம் சிறிதும் யூகிக்க முடியாதபடி இருப்பதுதான் படத்திற்கு பிளஸ் பாயின்ட்.
டிராபிக் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சிபிராஜ். அவருக்கு க்ரைம் டிபார்ட்டிமென்ட்டில் பணியாற்ற வேண்டும் என்பது பேராவல். மெட்ரோ பணி நடக்கும் ஒரு இடத்தில் மூன்று எலும்புக் கூடுகள் கிடைக்கின்றன. அது மூன்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தது என யூகிக்கிறார் சிபிராஜ். அவராகவே அந்த வழக்கில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இரவு நேரங்களில் விசாரணையைத் துவக்குகிறார். அந்த மூன்று எலும்புக் கூடுகளும் 40 வருடத்திற்கு முன்பு மரணம் அடைந்தவர்கள் என கண்டறிகிறார். அதன்பின் அவருடைய விசாரணையை அவர் தொடர்ந்து நடத்தி அந்த மர்மங்களை விடுவிக்கிறாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
சிபிராஜின் உயரமும், முறுக்கேற்றிய உடலும் போலீஸ் கதாபாத்திரத்தில் அவருக்குப் பொருத்தமான தோற்றத்தைக் கொடுக்கிறது. எப்படியாவது க்ரைம் டிபார்ட்டிமென்ட்டில் வேலைக்குச் சேர்ந்துவிட வேண்டும் என்று துடிக்கிறார். போலீஸ் வேலையில் அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்படுகிறார். வழக்கு விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் சந்திக்கும் இடையூறுகள், பரபரப்பு ஆகியவற்றை இயல்புடன் கடக்கிறார். ஹீரோயிசம் செய்ய முடியாத யதார்த்த போலீஸ் கதாபாத்திரத்தைப் பார்ப்பது வித்தியாசமாகவே உள்ளது.
படத்தின் நாயகி நந்திதாவுக்கு அதிக வேலையில்லை. அவரும் சிபியும் ஜோடி என்று கூட சொல்ல முடியாது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள் அவ்வளவே.
சிபிராஜ் தான் படத்தின் நாயகன் என்றாலும் நாசர், ஜெயப்பிரகாஷ் இருவரது கதாபாத்திரமும் கதையின் முக்கியக் கதாபாத்திரங்கள். நாசர் எந்தவிதமான கதாபாத்திரத்திலும் தன்னை அப்படியே இயல்பாய் வெளிக்காட்டிக் கொள்வார், இதிலும் அப்படியே. ஆனால், பத்திரிகை எடிட்டர் கதாபாத்திரத்தில் ஜெய்பிரகாஷ் சாதாரண சென்னைத் தமிழைப் பேசி நடிக்க முயற்சித்து நாடகத்தமானக்கி இருக்கிறார். அவருக்கு அந்தப் பேச்சும் வரவில்லை, அந்தக் கதாபாத்திரத்திலும் பொருந்தவில்லை. பசங்க, நான் மகான் அல்ல அப்பா போல இயல்பாகவே விட்டிருக்கலாம்.
படத்தின் மிகப் பெரும் மைனஸ் பாயின்ட் வில்லன். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத் மைத்ரேயா துளி கூட பொருத்தமில்லாமல் இருக்கிறார். அவரை டிரைவராக வேண்டுமானால் பார்க்கலாம், முதல்வராகக் கொஞ்சம் கூட பொருந்தவில்லை. இக்கதாபாத்திரத்தில் தெரிந்த நடிகர் யாரையாவது நடிக்க வைத்திருக்கலாம்.
இம்மாதிரியான க்ரைம் திரில்லர் படங்களில் கேமரா கோணங்கள், படத் தொகுப்பு, பின்னணி இசை ஆகியவை விறுவிறுப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், ஒரு சராசரி த்ரில்லர் படத்துக்குரிய எபெக்டையே மேலே குறிப்பிட்டவர்கள் கொடுத்திருக்கிறார்கள். அதிலும், கிளைமாக்சில் முக்கிய சண்டைக் காட்சி ஒன்றிற்கான பின்னணி இசை அந்தக் காட்சிக்குப் பொருத்தமில்லாமல் ஒலிக்கிறது.
ஆரம்பிக்கும் போது 1979ம் ஆண்டு, தடா, தொல்லியல் துறை அலுவலகம் என ஒரு பரபரப்புடன் ஆரம்பிக்கிறார்கள். சரி, தொடர்ந்து பரபரப்பாகவே நகரும் என நினைத்தால் அவை மிஸ்ஸிங். சஸ்பென்சைக் காப்பாற்றிய அளவிற்கு பரபரப்பையும், விறுவிறுப்பையும் சேர்த்திருந்தால் அவை படத்தை இன்னும் காப்பாற்றியிருக்கும்.
கபடதாரி - வெளிவேஷம்