ரத்தம்
விமர்சனம்
தயாரிப்பு - இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ்
இயக்கம் - சிஎஸ் அமுதன்
இசை - கண்ணன் நாராயணன்
நடிப்பு - விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார்
வெளியான தேதி - 6 அக்டோபர் 2023
நேரம் - 2 மணி நேரம் 23 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
ரவுடிக்கள், தாதாக்கள் தான் இதுவரையில் தமிழ் சினிமாவில் கொலைகளைச் செய்யும் கூலிப்படைகளாக இருந்துள்ளார்கள். ஆனால், முதல் முறையாக டெக்னாலஜியை வைத்து கொலைகளைச் செய்யும் ஒரு டெக்னிக்கல் டீம் கூலிப்படையை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார் இயக்குனர் சிஎஸ் அமுதன்.
இதற்கு முன்பு 'தமிழ்ப் படம், தமிழ்ப் படம் 2' என 'ஸ்பூப் காமெடி' படங்களைத் தந்தவர் இந்த 'ரத்தம்' படத்தில் ஒரு க்ரைம் த்ரில்லர் கதையைக் கையாண்டிருக்கிறார். அதற்காக போலீஸ் நாயகன் எனச் சொல்லாமல் 'இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்' என பத்திரிகை பக்கம் வந்திருக்கிறார். சொல்ல வந்த விஷயத்தை முடிந்தவரையில் சுவாரசியமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார்.
ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட், தமிழில் புலனாய்வு பத்திரிகையாளர், ஆக சர்வதேச அளவில் புகழ் பெற்றவர் விஜய் ஆண்டனி. பிரசவ சமயத்தில் அவரது மனைவி இறந்துவிட தனது வேலையும் ஒரு காரணம் என வேலையை விட்டு தன் மகளுடன் கோல்கட்டாவில் வசிக்கிறார். தனது கவலைகளை மறக்க குடிக்கு அடிமையாகிறார். இந்நிலையில் சென்னையில் பத்திரிகை நடத்தும் நிழல்கள் ரவியின் மகன் அலுவலகத்திலேயே கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். விஜய் ஆண்டனியை தன் இன்னொரு மகன் போல வளர்த்த நிழல்கள் ரவி, விஜய் ஆண்டனியை சந்தித்து அக்கொலை பற்றிச் சொல்கிறார். விஜய் ஆண்டனியும் சென்னை வந்து நிழல்கள் ரவி பத்திரிகையில் வேலைக்குச் சேர்கிறார். கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயலும் விஜய் ஆண்டனிக்கு கூடுதலாக பல தகவல்கள் கிடைக்கின்றன. அவை என்ன, குற்றவாளி யார் ? என்பதைக் கண்டுபிடித்தாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
மீண்டும் ஒரு மென் சோகக் கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி. தனக்காகவே இப்படிப்பட்ட கதாபாத்திரங்களைத் தேடித் தேர்வு செய்து நடிக்கிறார் என்றே தெரிகிறது. மனைவி இல்லாமல் மகளை வளர்க்கும் சோகம் ஒரு பக்கம், சகோதரனைப் போன்றவரை இழந்தது இன்னொரு பக்கம் என சோகமயமாகக் காட்சியளிக்கிறார். பொதுவாக பத்திரிகையாளராக நடிப்பவர்கள் கொஞ்சம் ஓவராகவே நடிப்பார்கள். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி அப்படியான நாடகத்தன்மையைக் கொண்டு வராமல் இயல்பாக நடித்திருக்கிறார்.
க்ரைம் எடிட்டர் ஆக நந்திதா ஸ்வேதா. பத்திரிகை அலுவலகத்தில் மட்டுமே அவரது கதாபாத்திரம் முழுமையாக நகர்கிறது. அக்கதாபாத்திரத்திற்குரிய மேன்மை, அழுத்தம் ஆகியவற்றைச் சரியாகக் கொடுத்திருக்கிறார். மகிமா நம்பியார் கதாபாத்திரம் ஆரம்பத்தில் ஒரு சாதாரண அம்மா கதாபாத்திரம் என நாம் நினைக்க அவர் கதாபாத்திரத்தில் ஒரு பெரும் சஸ்பென்சை சேர்த்திருக்கிறார் இயக்குனர். ரம்யா நம்பீசனுக்கு அவ்வளவாக வேலையில்லை, சில காட்சிகளில் மட்டும் வந்து போகிறார்.
படத்திற்குத் தேவையான அளவோடு கண்ணன் நாராயணன் பின்னணி இசையும், கோபி அமர்நாத் ஒளிப்பதிவும் அமைந்துள்ளது.
படத்தில் போலீஸ் கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் செய்யும் வேலையை படத்தின் நாயகன் விஜய் ஆண்டனியே செய்து முடிக்கிறார். ஒரு புதுவிதக் கதையை யோசித்தது சிறப்பு. இடைவேளைக்குப் பின் யார் குற்றவாளி என்பதை ஒரு 'திடுக்' சம்பவத்துடன் காட்டியிருந்தால் இன்னும் அதிர்வுகளை உண்டாக்கியிருக்கும். குழப்பமில்லாத ஒரு க்ரைம் திரில்லரைத் தந்தால் போதும் என்பதுதான் படக்குழுவின் விருப்பமாக இருந்திருக்கிறது.
ரத்தம் - பி பாசிட்டிவ்