2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஷ், யோகி பாபு
இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
இசை - சைமன் கே கிங்
தயாரிப்பு - நாதாம்பாள் பிலிம் பேக்டரி

த்ரில்லர் வகைப் படங்களை விறுவிறுப்பாகக் கொடுத்து ரசிக்க வைப்பது தனி ரகம். அந்தத் திறமை அனைவருக்கும் வந்துவிடாது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற படபடப்பு, படம் பார்க்கும் ரசிகனுக்கு படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே வந்துவிட வேண்டும்.

ஆரம்பத்தில் இருந்தே காட்சிகள் சஸ்பென்சாக நகர வேண்டும், கிளைமாக்சில் தான் அந்த சஸ்பென்ஸ் உடைய வேண்டும். இடையிலேயே அந்த சஸ்பென்ஸ் உடைந்துவிட்டால் படத்தின் சுவாரசியம் முழுவதும் குறைந்துவிடும். அதில் தான் த்ரில்லர் வகைப் படங்களின் வெற்றி அடங்கியிருக்கிறது.

சிபிராஜ், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடித்து வெளிவந்துள்ள 'சத்யா' படம் த்ரில்லர் வகைப் படம் தான். ஆனால், முழுமையான த்ரில்லர் படமாக அமையாமல் ஏமாற்றிவிட்டது.

ரம்யா நம்பீசனைக் காதலித்தும் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போக ஆஸ்திரேலியாவுக்குச் சென்று நான்கு வருடங்களாக வேலை செய்து வருகிறார் சிபிராஜ். ஒரு நாள் திடீரென சிபிராஜுக்கு போன் செய்யும் ரம்யா நம்பீசன், தன்னுடைய பெண் குழந்தையைக் காணவில்லை, அதை உன்னால் தான் கண்டுபிடிக்க முடியும் என சிபியை அழைக்கிறார். முன்னாள் காதலியின் நினைவிலேயே இருக்கும் சிபி, உடனே சென்னை வருகிறார். ரம்யா கொடுக்கும் தகவல்களை வைத்து தனிப்பட்ட விசாரணையில் இறங்குகிறார். ஆனால், ரம்யாவுக்கு அப்படி ஒரு பெண் குழந்தையே இல்லை என்று காவல் துறை உட்பட பலரும் அதிர்ச்சித் தகவல்களை அளிக்கிறார்கள். அதன் பின் நடப்பவைதான் படத்தின் கொஞ்சம் குழப்பமான மீதிக் கதை.

சிபிராஜ், காதலில் தோல்வியடைந்தவர் என்பதால் கொஞ்சம் இறுக்கமான முகத்துடன், முழு தாடியுடனும் இருந்தாலும் முன்பை விட அந்தத் தோற்றத்தில் ஸ்டைலாகவே இருக்கிறார். காதலியை விட்டுப் பிரிந்து நான்கு வருடமானாலும், அவர் அழைத்தவுடன் வெளிநாட்டிலிருந்து உடனடியாக ஓடி வருவதும், வந்த இடத்தில் காதலி ரம்யாவின் குழந்தை காணாமல் போன துயரத்தைப் பகிர்ந்து கொள்வதிலும் உண்மைக் காதலனாக இருக்கிறார்.

ரம்யா நம்பீசன், நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறார். மகளைக் காணாத பதட்டம், தன்னைப் பற்றி யாருமே புரிந்து கொள்ளாத கவலை என படபடப்புடனேயே நடித்திருக்கிறார். அவருக்கு ஏற்படும் முடிவு துயரமானது. அது தேவையில்லாதது.

சிபிராஜ், ரம்யா நம்பீசன் தவிர வரலட்சுமி சரத்குமார், ஆனந்தராஜ், சதீஷ் ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள். யாருமே அவர்களுடைய கதாபாத்திரங்களிலும், படத்திலும் ஒட்டவேயில்லை. சில காட்சிகளே வரும் யோகி பாபுவும் சில டபுள் மீனிங் வசனங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார்.

இடைவேளைக்குப் பின் கதையில் வரும் திருப்பங்களை விட குழப்பங்கள் தான் அதிகமாக இருக்கிறது. அடுத்தடுத்த காட்சிகளில் படத்தின் முக்கியத் திருப்பங்களை சொல்லி முடித்துவிடுவதில் அவசரம் காட்டியிருக்கிறார்கள். அது கிளைமாக்சில் ஏற்படும் எதிர்பாராத திருப்பத்தின் அழுத்தத்திற்கு கனத்தைக் கூட்டத் தவறிவிடுகிறது. அந்தத் திருப்ப முடிச்சுகளை மெதுவாக ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்திருக்கலாம்.

சைமன் கே கிங் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இல்லை. பின்னணி இசை பரவாயில்லை.

ஆஸ்திரேலியாவில் படம் ஆரம்பமாகும் போது விஷுவலாக ஒரு 'ரிச்சான' உணர்வைத் தரும் படம், போகப் போக அதை 'ரிச்னெஸ்'ஐ இழந்து விடுகிறது.

தெலுங்கில் வெளிவந்த 'க்ஷனம்' படத்தின் ரீமேக்தான் இந்த 'சத்யா'. தெலுங்கில் உள்ளதை அப்படியே ரீமேக் செய்யாமல், அந்தப் படத்தில் இருந்த குறைகளை தமிழில் மாற்றி எடுத்திருந்தால் 'சத்யா' இன்னும் சத்தாக இருந்திருப்பார்.

மொத்தத்தில், "சத்யா - சத்தமில்லை"

 

சத்யா தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சத்யா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

சிபிராஜ்

நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பு பயின்ற இவர் 2003ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து லீ, கோவை பிரதர்ஸ், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், ஜோர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


மேலும் விமர்சனம் ↓