கான்ஜுரிங் கண்ணப்பன்,Conjuring Kannappan

கான்ஜுரிங் கண்ணப்பன் - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - செல்வின் ராஜ் சேவியர்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
நடிப்பு - சதீஷ், ரெஜினா கசன்ட்ரா
வெளியான தேதி - 8 டிசம்பர் 2023
நேரம் - 2 மணி நேரம் 21 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5

பேய்ப் படங்கள் என்றாலே பயமுறுத்தும் படங்கள் என்பதை மாற்றி அதைக் காமெடிப் படங்களாகவும் கொடுத்து ரசிக்க வைத்தார்கள். அந்த வரிசையில் வந்துள்ள மற்றுமொரு பேய், காமெடிப் படம்தான் இந்தப் படம். சந்தானம் நடித்து வெளிவந்த சில பேய்ப் படங்கள் வெற்றி பெற்றதால் அவருக்காக எழுதப்பட்ட கதையாக இருக்குமோ என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை.

அதீத கற்பனையுடன் ஒரு கதையை யோசித்திருக்கிறார் இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர். காமெடிக்கான களம் திரைக்கதையில் பல இடங்களில் இருந்தாலும் அதை 'மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட வெள்ளம் போல ஆங்காங்கே மட்டுமே இருக்கிறது. சில இடங்களில் திடீரென வந்து காணாமல் போய்விடுகிறது. படம் முழுவதும் அப்படியே தேங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கேமிங் டிசைனராக வேலை தேடிக் கொண்டிருப்பவர் சதீஷ். அம்மா சரண்யா, அப்பா விடிவி கணேஷ், மாமா நமோ நாராயணன் என வீட்டில் எப்போதுமே கலகலப்பாக இருப்பவர்கள். அவர்கள் வீட்டு கிணற்றிலிருந்து ஒரு மந்திர வலை போன்ற பொருள் ஒன்று சதீஷுக்குக் கிடைக்கிறது. அதிலிருந்த ஒரு இறக்கையை மட்டும் யதேச்சையாக எடுத்துவிட்டு, மற்றதை கிணற்றிலேயே போட்டு விடுகிறார். ஆனால், அன்று முதல் அவருக்கு ஒரு கனவு வருகிறது. ஒரு பங்களாவில் ஒரு பேயைப் பார்க்கும் கனவு வருகிறது. தூங்கினால் அந்த கனவுக்குள் போய்விடுகிறார். அவர் தூக்கிப் போட்ட அந்த மந்திர வலை மீண்டும் அவரது வீட்டுக்குள் தானாக வருகிறது. அதன் இறக்கையை அவரது குடும்பத்தினர்களும், டாக்டர் ரெடின் கிங்ஸ்லி, வட்டி வசூலிக்கும் ரவுடி ஆனந்தராஜ் ஆகியோரும் பிய்த்து எடுக்க அவர்களும் சதீஷ் கனவில் வரும் அதே பங்களாவுக்குள் வருகிறார்கள். அந்தக் கனவிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஒரு சாதாரண நடுத்தர வீடு, ஒரு பேய் பங்களா என இரண்டே இடங்களில் அதிகப்படியான காட்சிகளை வைத்து படத்தை நகர்த்தியிருக்கிறார்கள். சதீஷ் வீடாக காட்டப்படும் அந்த வீடும் வீட்டில் உள்ளவர்களும் அவ்வளவு கலகலப்பாய் இருக்கிறார்கள். சதீஷ், சரண்யா, விடிவி கணேஷ், நமோ நாராயணன் ஆகியோரைப் பார்ப்பதற்கு ஒரு நிஜ குடும்பத்தைப் பார்ப்பது போலவே உள்ளது. நால்வருமே அவரவர் கதாபாத்திரங்களில் அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார்கள். குறிப்பாக யு டியூப் சேனல் நடத்துபவராக சரண்யா, பல பெண் யு டியூபர்களை அப்படியே பிரதிபலிக்கிறார்.

சதீஷ் கதாநாயகனாக நடிக்க தனக்குப் பொருத்தமான ஒரு கதை, கதாபாத்திரத்தைத் தேர்வு செய்திருக்கிறார். அதிகம் சிரிக்க வைக்கவில்லை என்றாலும் அவரது சில பல டைமிங்குகள் சிரிக்க வைக்கின்றன. முழுமையாக ஒரு ஸ்கிரிப்ட் கூட்டணியை வைத்துக் கொண்டால் இன்னும் முன்னேறலாம்.

படத்தில் சதீஷுக்கு ஜோடியாக யாருமில்லை. ஆனால், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ரெஜினா கசன்ட்ரா. மந்திரம், சூனியம் செய்பவராக வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார். அவருக்கும், சதீஷுக்கும் கனவிலாவது ஒரு பாடலைக் கொடுத்திருக்கலாம்.

ஆனந்தராஜ் ஆங்காங்கே சிரிப்பு மழையைத் தூவ, ரெடின் கிங்ஸ்லி சிரிப்பு தூறலைத் தூவுகிறார். சதீஷுக்கு உதவி செய்யும் மந்திர, தந்திரத்தில் தேர்ந்தவராக நாசர்.

பேய்ப் படங்களுக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்ததில்லை. இந்தப் படத்தில் தன் பாணியை மாற்றிக் கொண்டு பின்னணி இசையமைத்திருக்கிறார். ஓரிரு பாடல்களையாவது படத்தில் வைத்திருக்கலாம். லைட்டிங்கில் நிறைய வித்தைகளைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா.

முதல் பாதியில் காட்சிகள் மெதுவாக நகர்கின்றன, விறுவிறுப்பும் இல்லாமல். இரண்டாவது பாதியில்தான் பயம், நகைச்சுவை, விறுவிறுப்பு என சேர்த்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் கூடுதலாக கற்பனை செய்து யோசித்திருந்தால் மிகவும் சுவாரசியமான படமாக அமைந்திருக்கும்.

கான்ஜுரிங் கண்ணப்பன் - அதிக 'கான்ஜுரிங்', குறைவான 'காமெடி'

 

கான்ஜுரிங் கண்ணப்பன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கான்ஜுரிங் கண்ணப்பன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓