2

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - வைட் கார்ப்பெட் பிலிம்ஸ்
இயக்கம் - வெங்கி
இசை - விபிஆர்
நடிப்பு - சதீஷ், சிம்ரன் குப்தா, ஆனந்தராஜ்
வெளியான தேதி - 23 பிப்ரவரி 2024
நேரம் - 2 மணி நேரம் 9 நிமிடம்
ரேட்டிங் - 2/5

படத்தின் தலைப்பு, அதற்கான போஸ்டர்கள் ஆகியவற்றைப் பார்த்து ஏதோ ஒரு வித்தியசமான படத்தை எடுத்திருப்பார்களோ என்று ஓரளவிற்கு நம்ப வைத்தது. ஆனால், படத்தைப் பார்த்த பிறகு எந்த 'சினிமா வித்தையும்' தெரியாமல் ஒரு படத்தை எப்படி எடுத்தார்கள் என்று கேள்வி கேட்க வைத்துவிட்டது.

மேஜிக் நிபுணர் சதீஷ். சென்னையில் கடத்தல் வேலை செய்யும் மூன்று முக்கிய புள்ளிகளான ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்பிரமணிய சிவா ஆகியோருக்கு உதவி செய்வதாகச் சொல்லி அவர்களை ஏமாற்றுகிறார். அவர்களை சதீஷ் ஏன் ஏமாற்ற வேண்டும், அதற்கான காரணம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

துறைமுகத்திலிருந்து தங்கத்தைக் கடத்துவதில் முதல் பாதியும், விமான நிலையத்திலிருந்து வைரத்தைக் கடத்துவதில் இரண்டாம் பாதியும் வழவழவென நகர்ந்து போகிறது. பிளாக் காமெடி செய்கிறோம் என சிரிக்கவே முடியாத காமெடிகளைச் செய்திருக்கிறார்கள். ஒரு கிரைம் கதையை இதைவிட மோசமாக எடுத்திருக்க முடியாது.

காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்த சதீஷுக்கு கடைசியாக வெளிவந்த 'கான்ஜுரி கண்ணப்பன்' படம் கூட வசூல் ரீதியான வெற்றிப் படம் என்று சொன்னார்கள். அப்படி ஒரு படத்தைக் கொடுத்துவிட்டு இந்தப் படத்தில் என்ன கதை இருக்கிறது என சதீஷ் நடிக்க சம்மதித்தார் என்பது ஆச்சரியமாக உள்ளது.

படத்தில் கதாநாயகியாக சிம்ரன் குப்தா. இன்வெஸ்டிகேட் ஜர்னலிஸ்ட். சதீஷ் ஏமாற்றும் அந்த கடத்தல் வில்லன்களைப் பற்றி துப்பறிந்து ரிப்போர்ட் எழுதுகிறாராம் சிம்ரன். படத்தில் சீரியசாக நடித்திருப்பவர் இவர் மட்டுமே. ஆனால், எதற்காக அவ்வளவு இன்வால்வ்மென்ட்டுடன் நடித்தார் என்பதுதான் தெரியவில்லை.

ஆனந்தராஜ், மதுசூதனன், சுப்பிரமணிய சிவா ஆகியோர்தான் வில்லன்கள். ஆனந்தராஜ் காமெடி கலந்த வில்லத்தனத்தை வழக்கம் போல செய்ய முயற்சிக்கிறார். மதுசூதனன் உட்கார்ந்து கொண்டே பேச, சுப்பிரமணிய சிவா நின்று கொண்டே பேச அதை வில்லத்தனம் என நம்மை நம்ப வைக்க நினைத்துள்ளார் இயக்குனர்.

விபிஆர் இசை, யுவா கார்த்திக் ஒளிப்பதிவு ஆகியவை படத்தைக் கொஞ்சமாவது உட்கார வைக்க முயற்சிக்கிறது.

கிளைமாக்சில் மட்டும் சில திருப்புமுனைகளை வைத்து அதுவரை கடந்து போன காட்சிகளை ஞாபகப்படுத்தி கொஞ்சம் விவரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதை படத்தின் முதலில் இருந்தே கடைபிடித்திருக்கலாம்.

வித்தைக்காரன் - விதையில்லாமல்...

 

வித்தைக்காரன் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

வித்தைக்காரன்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓