சட்டம் என் கையில்
விமர்சனம்
தயாரிப்பு - சண்முகம் கிரியேஷன்ஸ், சீட்ஸ் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சாச்சி
இசை - ஜோன்ஸ் ரூபர்ட்
நடிப்பு - சதீஷ், அஜய்ராஜ், பாவல் நவகீதன்
வெளியான தேதி - 27 செப்டம்பர் 2024
நேரம் - 2 மணி நேரம் 4 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
ஒரே இடத்தில், ஒரே இரவில் நடக்கும் சில பல கதைகள் வந்ததுண்டு. இந்தப் படத்தில் அது ஒரே காவல் நிலையத்தில் நடக்கிறது. இயக்குனர் சாச்சி தன் கதையையும், திரைக்கதையையும் நம்பி இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார். மலையாளப் படங்களில் சொல்லப்படும் க்ரைம் திரில்லர் படங்களைப் போல இந்தப் படத்தை தரமாகவே ரசிக்க வைத்திருக்கிறார்.
ஏற்காடு செல்ல இரவு நேரத்தில், ஏதோ ஒரு பதட்டத்தில் காரை ஓட்டிக் கொண்டு செல்கிறார் சதீஷ். வழியில் குறுக்கே பைக்கில் வந்த ஒருவர் மீது எதிர்பாராத விதமாக மோத அவர் இறந்து போகிறார். அந்த பிணத்தை தனது கார் டிக்கியில் வைத்துக் கொண்டு தொடர்ந்து பயணிக்கிறார். வழியில் போலீஸ் சோதனை செய்ய, குடித்து விட்டு காரை ஓட்டினேன் என்று சொல்லியதோடு, உதவி சப் இன்ஸ்பெக்டரான பாவல் நவகீதனையும், சதீஷ் அடித்து விட ஏற்காடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். தன்னை அடித்த சதீஷை ஏதோ ஒரு வழக்கில் சிக்க வைக்கத் துடிக்கிறார் பாவல் நவகீதன். இதனிடையே ஒரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர் அஜய் ராஜ். அதோடு, காணாமல் போன ஒருவரைப் பற்றிய வழக்கும் சேர்ந்து கொள்கிறது. ஒரு விபத்து, ஒரு கொலை, காணாமல் போன ஒருவர் என இந்த வழக்குகள் எப்படி முடிவுக்கு வருகிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஒரு அப்பாவித் தோற்றம், அதிகம் உணர்ச்சிவசப்பட்டால் பேச முடியாமல் திக்குவது என ஒரு யதார்த்த கதாபாத்திரத்தில் முதல் முறையாக தன்னை சரியாகப் பொருத்திக் கொண்டிருக்கிறார் சதீஷ். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் அவர் நடிக்கும் போது அவரது நடிப்பில் ஒரு நாடகத்தன்மை இருக்கும். அது இந்தப் படத்தில் சுத்தமாக இல்லை. படத்தில் அவரது கதாபாத்திரம் மீதான சஸ்பென்ஸ் கடைசி வரை நீடிக்கிறது. அவர் பற்றிய உண்மை தெரியவரும்போது நமக்கும் எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
வேலை செய்யும் இடங்களில் உள்ள 'போட்டி' அனைத்துவிதமான பணிகளிலும் உண்டு. அதற்கு காவல் நிலையமும் விதிவிலக்கல்ல. சப் இன்ஸ்பெக்டர் அஜய் ராஜ், உதவி சப் இன்ஸ்பெக்டர் பாவல் நவகீதன் இடையிலான போட்டி, அந்த சீனியர், ஜுனியர் பதவி வித்தியாசத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறது. வேறு எந்த நடிகர்களாவது அவர்களது கதாபாத்திரங்களில் நடித்திருந்தால் அதில் ஒரு சினிமாத்தனம் தெரியும். ஆனால், அஜய், பாவல் இருவரும் நடித்திருக்கும் விதம் அந்தக் கதாபாத்திரங்களின் உண்மைத் தன்மைக்கு மிக அருகில் உள்ளது.
சில காட்சிகளில் வந்தாலும் அனுதாபத்தைப் பெற்றுவிடுகிறார் ரித்திகா. காவலர்கள் ஈவி ராமதாஸ், பவா செல்லத்துரை, கேபிஒய் சதீஷ் கிடைத்த சில காட்சிகளில் நிறைவாய் நடித்திருக்கிறார்கள்.
ஓர் இரவில் மட்டுமே நடக்கும் கதை, அதிலும் காவல் நிலையக் காட்சிகள்தான் அதிகம், த்ரில்லர் கதை வேறு, கோணங்களிலும், லைட்டிங்குகளிலும் அதற்குரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிஜி முத்தையா. த்ரில்லர் படங்களுக்கேயுரிய பின்னணி இசையைகொடுத்திருக்கிறார் ஜோன்ஸ் ரூபர்ட்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைக்கதைகளில் இரண்டு வகை உண்டு. படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்கு மட்டும் சஸ்பென்ஸ் என்ன என்பதை சொல்லிவிடுவது, மற்றொன்று கடைசியில் கிளைமாக்ஸ் வரையிலும் அந்த சஸ்பென்ஸை பார்வையாளர்களுக்கு சொல்லாமல் இருப்பது. இப்படத்தை மேலே சொன்ன இரண்டாவது விதத்தில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அது ஒரு பக்கம் பலம் என்றாலும் படத்துடன் ஒன்றி ரசிப்பதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகிறது.
சட்டம் என் கையில் - தாமதமான நீதி
சட்டம் என் கையில் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
சட்டம் என் கையில்
- நடிகர்
- இயக்குனர்