2.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - வைபவ், பல்லாக் லால்வானி
தயாரிப்பு - வால்மேட் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் - சாச்சி
இசை - ஜிப்ரான்
வெளியான தேதி - 30 ஆகஸ்ட் 2019
நேரம் - 2 மணி நேரம் 21 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களைத் தருவதற்கென்று இருக்கும் இயக்குனர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள். பலருக்கும் ஆக்ஷன் படங்களை இயக்குவதில்தான் ஆர்வம் இருக்கிறது. அதிலும் புதுமுக இயக்குனர்கள் அவர்களது முதல் படமாக நகைச்சுவைப் படங்களைக் கொடுப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அந்த விதத்தில் இப்படத்தின் இயக்குனர் சாச்சி தன் முதல் படத்தையே நகைச்சுவைப் படமாகக் கொடுத்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

படத்தில் கதை என்றெல்லாம் அவர் பெரிதாக யோசிக்கவில்லை. மாலை 6 மணிக்கு மேல் கதாநாயகனுக்கு கண் தெரியாது. மாலைக் கண் நோய். அவருக்கு டிவியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. தனக்கு இருக்கும் பார்வை பிரச்சினையைப் பற்றி அந்தப் பெண்ணிடம் மறைத்து அவரைக் காதலித்து திருமணம் வரை சென்று விடுகிறார். அந்த சமயத்தில் வில்லனால் ஒரு பிரச்சினை வர அதை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் காமெடி நாயகனாக வைபவ். தனக்கு நகைச்சுவையும் வரும் என்பதை இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார் வைபவ். தன் கண் பார்வை பிரச்சினை பற்றி காதலி பல்லாக் லால்வானியிடம் மறைத்து சாமர்த்தியமாகக் காதலிக்கிறார். அதை வைத்து வரும் சிக்கல்களை அருமையாக சமாளிக்கிறார்.

கதாநாயகியாக பல்லாக் லால்வானி. டிவி ரிப்போர்ட்டராக இருக்கிறார். ஆரம்பத்தில் அவர் பேசுவதற்கும் முகபாவத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. போகப் போக ஓரளவிற்கு நடித்து சமாளித்து விடுகிறார்.

கதாநாயகனின் நண்பனாக காமெடி செய்யும் ஒருவர்தான் இருப்பார் என்ற வழக்கப்படி இந்தப் படத்திலும் சதீஷ். முடிந்தவரையில் அவ்வப்போது காமெடி செய்து சமாளிக்கிறார். இப்போதெல்லாம் காமெடி நடிகர்களும் இரண்டாவது கதாநாயகன் போல படம் முழுவதும் வருகிறார்கள்.

படத்தில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர்களில் இருவர் முக்கியமானவர்கள். வைபவ்வின் அப்பா இளவரசு, அம்மா ஸ்ரீரஞ்சனி. இந்தக் காலத்தில் பெற்றோர்கள் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என இளைஞர்கள் ஏங்குவார்கள். அந்த அளவிற்கு அன்பான பெற்றோராக இருக்கிறார்கள்.

கதாநாயகியின் அப்பாவாக ராதாரவி. ஒரு சுவாரசியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வில்லனாக ஆர்என்ஆர் மனோகர், தமிழ் சினிமாவில் பல படங்களில் பார்த்த அதே வழக்கமான வில்லன். கொலைகளைச் செய்யும் சேட்டா-வாக ராமர். ஆனால், வைபவ்வைக் கண்டால் மட்டும் ஓடிவிடுகிறார்.

ஜிப்ரான் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. டெக்னிக்கலாக பாராட்டும்படியான படமில்லை.

சரியாக 6 மணி ஆனால் பார்வை தெரியாது என்கிறார்கள். அது எப்படி எல்லா நாளிலும் அவ்வளவு சரியாக நடக்கும் என்று தெரியவில்லை. காமெடிப் படம் என்றால் லாஜிக் பார்க்க வேண்டாம் என்பதை இந்தப் படத்திலும் தொடர்கிறார்கள். பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் ஓரளவிற்கு சிரித்துவிட்டு வரலாம்.

சிக்சர் - காமெடி மிக்சர்

 

சிக்சர் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

சிக்சர்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓