Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்)

அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்),Ayyappanum koshiyum
 • அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்)
 • பிருத்விராஜ்
 • பிஜூமேனன்
 • இயக்குனர்: சாச்சி
21 பிப், 2020 - 12:00 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்)

நடிகர்கள் : பிரித்விராஜ், பிஜுமேனன், அனில் நெடுமங்காடு, அன்னா ராஜன், இயக்குனர் ரஞ்சித், கெளரி நந்தா மற்றும் பலர்
இயக்கம் : சாச்சி

ஒரு சிறிய ஈகோ மோதல் எந்த அளவிற்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் இந்த படத்தின் கதை.

ஓய்வுபெற்ற ராணுவ வீரரான பிரித்விராஜ் (கோஷி) தனது ஊரிலிருந்து மிக தொலைவில் உள்ள இன்னொரு பகுதிக்கு காரில் இரவு நேரத்தில் பயணிக்கிறார். அட்டப்பாடி என்கிற பகுதியில் நள்ளிரவு வாகன சோதனை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிஜுமேனன் (அய்யப்பன் நாயர்) பிரித்விராஜின் காரை நிறுத்தி சோதனையிட அதில் அதிக அளவில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவருகிறது. அதுகுறித்து பிரித்விராஜ் விளக்கம் அளித்தும் ஏற்றுக் கொள்ளாததால் கைகலப்பு ஏற்படுகிறது. பிரித்விராஜ் மீது உடனே ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கைத் தொடர்ந்து இரவு நேரம் முழுதும் ஸ்டேஷனிலேயே வைக்கிறார்கள்.

ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அவர் மிகப்பெரிய விஐபிகளுக்கு வேண்டப்பட்ட நபர் என்கிற விபரம் தெரிய வர, எப்ஐஆரை திரும்ப பெற முடியாமல் அதேசமயம் மேலதிகாரியின் உத்தரவுப்படி பிரித்விராஜூக்கு சகாயமாக செயல்பட முடிவெடுக்கின்றனர். அந்த நேரத்தில் பிரித்திவிராஜ் தந்திரமாக நாடகமாடி பிஜுமேனன் மூலமாகவே மது பாட்டிலில் இருந்து கிளாசில் மது ஊற்றி தர வைக்கிறார்.. அவர் அறியாமல் அதை வீடியோவும் எடுத்துக்கொள்கிறார். பத்து நாட்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்தவுடன் இந்த வீடியோவை பரவ விட, இன்னும் இரண்டு வருடங்களில் ஒய்வு பெற இருக்கும் நேர்மையான அதிகாரியான பிஜூமேனனின் வேலைக்கே அது உலை வைக்கிறது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் தொடங்கும் ஈகோ யுத்தம் நாம் யூகிக்க முடியாதபடி அனல் தெறிக்க வைக்கிறது. இந்த யுத்தம் முடிவுக்கு வந்தத யாருக்கு என்ன இழப்பு ஏற்பட்டது என்பது மீதி கதை.

படம் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை நம்மை ஒருவித டென்சனுடன் இருக்கையில் கட்டிப்போடும் படங்கள் எப்போதாவதுதான் வரும். அப்படி ஒரு படம் தான் இந்த அய்யப்பனும் கோஷியும். படத்துவக்கத்தில் டைட்டில் கார்டு போடும்போதே காட்டுக்குள் நள்ளிரவு கார் பயண காட்சியும் அதன் பின்னணியில் ஒலிக்கும் பாடலும் நமக்கு ஒரு விதத்தில் உணர்வைத் தருகின்றன.

பிரித்விராஜ் பிஜுமேனன் இருவரும் இரு துருவங்களாக தங்களது நடிப்பால் மிரட்டுகிறார்கள். இருவருக்குமே சம அளவிலான கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் யார் பெரியவர் என்கிற பேச்சுக்கே இந்த படத்தில் இடம் இல்லை. அதைவிட இந்த இருவரும் தங்களது கோப உணர்வுகளை வெளிப்படுத்தும்போது அந்த நிகழ்வுகள் நடக்கும் பகுதியில் நாமும் ஒரு பார்வையாளராக அவர்களை கவனிப்பது போன்ற ஒரு உணர்வை படம் முழுவதும் ஏற்படுத்துகிறார்கள். குறிப்பாக இறுதிக்காட்சியில் இருவரும் சண்டை போடும்போது பிஜுமேனனின் கிடுக்கிப்பிடியிலிருந்து தப்பிக்க போராடும் பிரித்விராஜ் அவரது கால்களை வளைக்க முயற்சி செய்யும் காட்சிகளில் நம்மை அறியாமலேயே நாம் கால்களும் வளைவதை உணர முடிகிறது.

இவர்கள் மட்டுமல்ல படத்தில் இன்னும் சில கதாபாத்திரங்கள் படம் முழுவதும் மிகுந்த முக்கியத்துவத்துடன் வலம் வருவது ஆச்சரியமான ஒன்று. அந்த வகையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சதீஷ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அனில் நெடுமங்காடு படம் முழுவதும் இந்த இருவரின் ஈகோ யுத்தத்தை சமாளிக்கும் கதாபாத்திரத்தில் வெகு நேர்த்தியாக ஒரு கை தேர்ந்த போலீஸ் அதிகாரி போலவே செயல்பட்டிருப்பது இல்லை இல்லை நடித்திருப்பது பிரமிக்க வைக்கிறது.

அதேபோல இவர்கள் இருவரின் ஈகோ யுத்தம் ஏதோ ஒரு இடத்தில் முடிவுக்கு வருவது போல தோன்றும்போது பிரித்விராஜின் தந்தை (இயக்குனர் ரஞ்சித்) அதற்கு தூபம் போட்டு பிரித்விராஜை தூண்டி விடும்போது நமக்கே அவர் மீது கோபம் வருகிறது. பிஜூமேனனின் மனைவியாக போராளி கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌரி நந்தா கதாபாத்திரமும், பிஜூ மேனனுக்கு பின்னணியில் இருக்கும் மிரளவைக்கும் பிளாஷ்பேக்கும் நம்மை திடுக்கிட வைக்கின்றன.

படத்தில் நடித்துள்ள குறிப்பாக படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறும் அந்த ஸ்டேஷனில் காவலர்களாக நடித்துள்ள ஒவ்வொருவரும் தங்களது யதார்த்த நடிப்பால் முக்கியத்துவம் பெறுகிறார்கள். குறிப்பாக பிரித்திவிராஜுக்கு உதவி செய்யப்போய் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளும் தன்யா அனன்யா கதாபாத்திரம் பரிதாபத்தை அள்ளுகிறது. படம் முழுவதும் பிரித்திவிராஜ் டிரைவராக பயணிக்கும் ரமேஷ் கோட்டயம் விசுவாசத்தனத்தை வெகு இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் இடம் பெற்றுள்ள களக்காத்த சந்தனமேரம்... பாடல், வாழ்வியலை யதார்த்தமாக சொல்லும் விதமாக அருமையாக அமைந்துள்ளது. இதை பாடியது கேரளாவில் மலைகிராமத்தில் வசிக்கு தமிழக பெண் நஞ்சம்மா என்பது பெருமை கொள்ளும் விஷயம்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான டிரைவிங் லைசன்ஸ் என்கிற படம் சூப்பர் ஹிட்டானது. ஒரு சூப்பர் ஹீரோவுக்கும் அவரது தீவிரமான ரசிகருக்கும் எதிர்பாராமல் ஈகோ மோதல் ஏற்பட்டால் என்னவாகும் என்பதை வெகு சிறப்பாக கதை உருவாக்கம் செய்திருந்தார் அந்தப்படத்தின் கதாசிரியர் சாச்சி. அந்த சாச்சி தான் இந்த படத்தின் கதையை எழுதியதுடன் இயக்கியும் உள்ளார். முந்தைய படத்தின் ஒன்லைனான அதே ஈகோ மோதல்தான், இதில் வேறு விதமான கதாபாத்திரங்கள், வேறு விதமான கதைக்களம் என தனது டைரக்ஷனில் இன்னும் மிரட்டியிருக்கிறார் மனிதர். ஏற்கனவே அனார்கலி என்கிற படத்தில் பிரித்விராஜ், பிஜூமேனன் கூட்டணியில் மிகப்பெரிய வெற்றியை ருசித்த சாச்சி, இந்த படத்திலும் இன்னொரு வெற்றியை வெகு அழகாக கைப்பற்றி இருக்கிறார்.

மொத்தத்தில் ரசிகர்கள் இந்த படத்தை வான்டட் ஆக பார்த்து ஒரு புதுவிதமான அனுபவத்தை பெற வேண்டுமென்றால் உடனடியாக டிக்கெட் போடலாம்.வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

 • டாப் 5 படங்கள்

 • Advertisement
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in