1.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர்
தயாரிப்பு - டிரீம் வாரியர் பிக்சர்ஸ்
இயக்கம் - செல்வராகவன்
இசை - யுவன்ஷங்கர் ராஜா
வெளியான தேதி - 31 மே 2019
நேரம் - 2 மணி நேரம் 28 நிமிடம்
ரேட்டிங் - 1.5/5

நாட்டின் தேர்தல் முடிவுகள் வந்து புதிய ஆட்சி பதவியேற்று இன்னும் 24 மணி நேரம் கூட ஆகவில்லை. மக்கள் அனைவருமே கடந்த சில மாதங்களாகவே அரசியல் பரபரப்பில் தான் இருக்கிறார்கள்.

மக்களின் அந்த அரசியல் பரபரப்பை ஒரு பரபரப்பான அரசியல் படத்தைக் கொடுத்து மெஜாரிட்டியைப் பெறுவதை விட்டுவிட்டு இப்படி டெபாசிட் கூட கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலைக்கு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

அரசியல் படம் எடுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. நம் மக்கள் மனதில், இன்றைய தலைமுறை ரசிகர்கள் மத்தியிலும் 25 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த அமைதிப்படை படம் ஆணியடித்தாற் போல் அவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. அந்தப் படத்தை மிஞ்சும் அளவிற்கு இந்த 25 ஆண்டுகளில் ஒரு படம் கூட வரவில்லை, ஒரு இயக்குனரால் கூட அதைச் செய்ய முடியவில்லை என்பது வருத்தமான விஷயம்தான்.

கொஞ்சம் எல்கேஜி, கொஞ்சம் நோட்டா, கொஞ்சம் நிகழ்கால அரசியல் காமெடி ஆகியவை இணைந்த ஒரு கலவைதான் இந்த என்ஜிகே. இறங்கி விளையாட வேண்டிய ஒரு கதையில் எட்டி நின்று விளையாடியிருக்கிறார் செல்வராகவன். அரசியலில் இறங்குவது போலத்தான் அரசியல் படமும். படத்தில் எம்டெக் முடித்த கதாநாயகனை டாய்லெட் கழுவ வைப்பவர், அரசியல் ஒரு சாக்கடை என்பவர் படத்தின் திரைக்கதையில் தூர அமர்ந்தே சுத்தம் செய்ய நினைத்தால் எப்படி, உள்ளே இறங்கி அடைப்பை எடுக்க வேண்டாமா.... இது அரசியல் படமா ?, ஆக்ஷன் படமா ?, காதல் படமா ?, சென்டிமென்ட் படமா ?, என இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் ஏதோ ஒரு படமாக வெளிவந்திருக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த திருமணமான இளைஞர் சூர்யா, எம்டெக் முடித்து, கம்பெனி வேலை வேண்டமென்று சொல்லி ஆர்கானிக் விவசாயம் செய்து வருகிறார். ஊர் மக்களுக்கு அடிக்கடி சமூக சேவை செய்து நல்ல பெயருடன் இருக்கிறார். அவரது மனதில் ஒரு சந்தர்ப்பத்தில் அரசியல் ஆசையை விதைக்கிறார், அரசியல் கட்சித் தொண்டரான பாலாசிங். அவரது ஊர் எம்எல்ஏவான எதிர்க்கட்சியைச் சேர்ந்த இளவரசுவிடம் அடிமட்டத் தொண்டனாக சேர்கிறார். எதிர்க்கட்சித் தலைவருக்கு எல்லா பிளான்களையும் போட்டுத் தரும் கார்ப்பரேட் பிஆர் ரகுல் ப்ரீத் சிங் அறிமுகம் கிடைத்து, அப்படியே மேலே வருகிறார். ஆளும் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த ரகுலுக்கு ஒரு உதவி செய்கிறார். அப்படியே முதல்வரிடமும் நேரடியாக டீல் பேசுகிறார். சூர்யாவின் வளர்ச்சியைப் பிடிக்காத முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சூர்யாவை அழிக்க நினைக்கிறார்கள், பின்னர் என்ன என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தன் நரம்பில் துடிக்கும் முதுகெலும்பாக தன் நடிப்பால் படத்தை முடிந்த அளவு தூக்கி நிறுத்த முயற்சிக்கிறார் சூர்யா. ஆர்கானிக் விவசாயி, காதல் கணவன், அன்பான மகன், உயிர்த் தோழன், அடிமட்டத் தொண்டன், கார்ப்பரேட் நாயகியின் (கள்ளக்) காதலன், போராளி என படம் முழுவதும் காட்சிக்குக் காட்சி மாறிக் கொண்டேயிருக்கிறார். அவர் எப்போது என்ன செய்கிறார் என்பது அவருக்கும் புரியவில்லை, படம் பார்க்கும் நமக்கும் புரியவில்லை. ஏதோ செய்யப் போகிறார் என்று பார்த்தால் என்னென்னமோ செய்கிறார். துப்பாக்கியால் சுடுகிறார்கள், கத்தியால் குத்துகிறார்கள், ரவுண்ட் கட்டி அடிக்கிறார்கள், எல்லாவற்றையும் மீறி மேடையில் பேசி முழங்குகிறார். சூர்யாவின் நடிப்பை செவ்வனே வீணடித்திருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.

இரண்டு நாயகிகள் என்றாலே நடிப்பில் போட்டி இருக்கும் என்பார்கள். இங்கு சூர்யாவுக்கு போட்டி போடுகிறார்கள். அதிலும் மனைவி சாய் பல்லவி நேரடியாகவே சூர்யாவிடம் குத்திக் காட்டுகிறார். ஆனாலும், அடுத்த காட்சியில் ரகுல் ப்ரீத்துடன் சூர்யா டின்னர் சாப்பிடுகிறார். சாய் பல்லவி கணவன் சூர்யாவின் அரசியல் நுழைவுக்கு ஏதோ உதவி செய்யப் போகிறார் என்று பார்த்தால் வைப்பாட்டி சண்டை போட்டு தன் கடமை முடிந்ததென ஒதுங்கிப் போகிறார். சில ஆட்சிகளை கவிழ்த்தவர், சில ஆட்சிகளை உருவாக்கியவர் என ரகுல் கதாபாத்திரமான கார்ப்பரேட் பிஆர் தொழிலுக்கு பில்ட்அப் கொடுக்கிறார்கள். அவர் அரசியல்வாதிகளுக்கு உதவுவதை விட சூர்யா மீது காதல் கொண்டு அவருக்கு உதவுகிறார்.

பொன்வண்ணன் எதிர்க்கட்சித் தலைவர், தேவராஜ் மாநில முதல்வர். இளவரசு, சூர்யா தொகுதியின் எம்எல்ஏ. சூர்யாவின் அப்பாவாக ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஆக நிழல்கள் ரவி. அம்மாவாக உமா பத்மாநாபன். சூர்யாவுக்காக உயிர் கொடுத்த நண்பனாக ராஜ்குமார். இப்படி பல கேரக்டர்கள் இருந்தாலும் ஒருவர் கதாபாத்திரமும் முழுமையாக இல்லாமல் தவிக்கிறது.

யுவன்ஷங்கர் ராஜாவும் படம் பார்த்து ஏதாவது பீல் வந்தால்தானே பின்னணி இசையைக் கொடுக்க முடியும். அவர் பங்குக்கு அன்பே பேரன்பே.. என ஒரு மெலடியில் மட்டும் தன் இருப்பைக் காட்டிக் கொள்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் எனக் காட்டும் செட் தெருக்களில் அப்படி ஒரு நாடகத்தனம்.

முதல்வருடன் மிரட்டும் தொனியில் வீடியோ கான்பரசிங்கில் சூர்யா உரையாடும் ஒரு காட்சி, சூர்யா கேட்டார் என்பதற்காக அவரின் அப்பா ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் நிழல்கள் ரவி, ஒரு மந்திரியின் இல்லீகல் உறவு பற்றி விசாரிப்பது அபத்தமான பல காட்சிகளுக்கு சிறு உதாரணம்.

படத்தின் ஆரம்பக் காட்சியில் சூர்யா கொட்டும் மழையில் இரவு நேரத்தில் நிலத்தில் விவசாய வேலை பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்து அம்மா கையால் சாப்பிட்டுவிட்டு, அம்மா எதிரிலேயே மனைவி சாய் பல்லவியுடன் ஐஸ்க்ரீமை பங்கு போட்டு சாப்பிட்டு படுத்துறங்கும் அந்த முதல் காட்சியைப் பார்த்ததும் நாமும் உருகி, அடடா...செல்வராகவன் என்னமோ பெரிதாகச் சொல்லப் போகிறார் என நிமிர்ந்து உட்கார்ந்தால், அதன் பின்.... பல காட்சிகளையும் பார்த்து படம் முடிந்து வெளியே வந்தபின் அந்த முதல் காட்சியை மட்டுமே மீண்டும் நினைப்பது மட்டும்தான் செல்வராகவன் டச். மற்ற எல்லாம் ப்ச்.

என்ஜிகே - நாட் ஓகே!

 

பட குழுவினர்

என்ஜிகே

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

சூர்யா

நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. வஸந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவக்கிய சூர்யா, தனது நடிப்பாலும், ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்த போது ஜோதிகாவுடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. 2006ம் ஆண்டு அவரை திருமணமும் செய்து கொண்டார். அவருக்கு தியா, தேவ் என்ற குழந்தைகள் உள்ளனர்.

மேலும் விமர்சனம் ↓