எதற்கும் துணிந்தவன்
விமர்சனம்
நடிப்பு - சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ்
இயக்கம் - பாண்டிராஜ்
இசை - இமான்
வெளியான தேதி - 10 மார்ச் 2022
நேரம் - 2 மணி நேரம் 30 நிமிடம்
ரேட்டிங் - 2.75/5
'எதற்கும் துணிந்தவன்' என்ற தலைப்பைப் பார்த்ததுமே ஒரு அதிரடியான ஆக்ஷன் படம் அல்லது அழுத்தமான எமோஷனல் படம் ஆக இருக்கலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் டிரைலரைப் பார்த்த பின் அது கொஞ்சம் கூடுதலாகவும் ஆனது. ஆனால், படத்தைப் பார்த்த பின் ஒரு நல்ல தலைப்பை இப்படி வீணடித்து விட்டார்களே என்ற ஏக்கம்தான் வருகிறது.
'சூரரைப் போற்று, ஜெய் பீம்' என சூர்யா நடித்து வெளிவந்த படங்கள் அவர் மீதான ரசிகர்களின் பார்வையை நிறையவே மாற்றியது. சூர்யா வேறு ஒரு தளத்திற்குச் சென்று விட்டார் என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஆனால், இந்தப் படத்தில் அவரை மீண்டும் கமர்ஷியல் பக்கம் கீழிறக்கி விட்டாரோ இயக்குனர் பாண்டிராஜ் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
இந்த சமூக வலைத்தள, யு டியூப் காலத்தில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் பரவிய பொள்ளாச்சி சம்பவம்தான் படத்தின் மையக் கரு. அதை வைத்து சென்டிமென்ட்டுடன் ஒரு ஆக்ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். அந்த ஆக்ஷனில்தான் அழுத்தமும் குறைவு, எமோஷனலும் குறைவு. கதாபாத்திரங்களை சரியாக உருவாக்காததே அதற்குக் காரணம்.
குறிப்பாக வில்லன் வினய் கதாபாத்திரம். மத்திய அமைச்சரின் மகனான வினய், ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு எதற்காக இதையெல்லாம் செய்கிறார் என்பது விளக்கமாக சொல்லப்படவில்லை. அதுவே, படத்தை நாம் ஒன்றிப் பார்க்கவிடாமல் செய்துவிடுகிறது. கடந்த வருடம் வெளிவந்த 'டாக்டர்' படத்தில்தான் வினய் இது போன்ற ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதையே திரும்பவும் பார்ப்பது போல் உள்ளது.
வட நாடு, தென்னாடு என்று இரண்டு பகுதிகளில் அமைந்துள்ள சில கிராமங்கள். தென்னாட்டு கிராமங்களில் இருந்து வடநாட்டிற்குப் பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பார்கள். ஆனால், பெண்ணின் ஒரு தற்கொலையால் இரண்டு பகுதி கிராமங்களுக்கும் தீராத பகை. தென்னாடு பகுதி கிராமத்து இளைஞர் வக்கீல் சூர்யா, வடநாடு பகுதி பெண்ணான பிரியங்காவைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அது ஒரு புறமிருக்க, தென்னாடு பகுதிப் பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து அவர்களை பெரிய மனிதர்களுக்கு இரையாக்குகிறார் மத்திய அமைச்சர் மகன் வினய். இது சூர்யாவுக்குத் தெரிய வர, அதன் பின் என்ன நடக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
வேட்டி கட்டினால் இறங்கி அடிக்கும் வீரன் சூர்யா, கோட் போட்டால் வாதாடி ஜெயிக்கும் சூரன் சூர்யா என்று சொல்ல ஆசைதான். ஆனால், மனைவியின் ஆபாச வீடியோவையே வில்லன் எடுக்கும் அளவிற்கு கோட்டை விடுகிறார். அடுத்து வில்லனின் சூழ்ச்சியால் கோர்ட்டிலும் வெற்றி பெற முடியாமல் சிறைக்கும் செல்கிறார். ஒரு ஹீரோவின் கதாபாத்திரத்தில் இப்படி ஒரு தடுமாற்றம் இருந்தாலும் தன் நடிப்பால் தனது கதாபாத்திரத்தை எப்படியோ கரை சேர்க்கிறார் சூர்யா. பிரச்சினை வந்தால் பெண்கள் எப்படி சமாளிக்க வேண்டும் என்று பேசும் சில வசனங்களில் மட்டும் கைத்தட்டல் வாங்கிவிடுகிறார்.
படத்தின் ஆரம்பக் காட்சிகளில் நேரம் போவது தெரியாமல் தன் காதல் நடிப்பில் கரை சேர வைப்பவர் பிரியங்கா மோகன். அந்தக் கண்ணும், குறும்பான பார்வையும் தமிழுக்கு இன்னொரு ரேவதி கிடைத்துவிட்டார் என்று சொல்ல வைக்கிறது. கீப் இட் அப் பிரியங்கா.
படத்தில் வில்லன் வினய்யை விடவும் அதிகக் காட்சிகளில் வருபவர்கள் சூர்யாவின் பெற்றோர் சத்யராஜ், சரண்யா. சில பல சுவாரசிய காட்சிகளில் இருவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். பிரியங்காவின் பெற்றோர்களாக இளவரசு, தேவதர்ஷினி, சில காட்சிகள்தான் என்றாலும் சிரிக்க வைக்கிறார்கள். படத்தில் சூரியும் இருக்கிறார் என்பதுடன் அவரது கதாபாத்திரம் இருக்கிறது.
இமான் பின்னணி இசையில் எப்படியோ சமாளித்துவிடுகிறார். ஆனால், பாடல்களில் ஏமாற்றிவிட்டார். 'சும்மா சுர்ருன்னு..' பாடல் மட்டும் கொஞ்சமாக ஆட்டம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் பரவாயில்லை ரகம் கூட இல்லை. 'உள்ளம் உருகுதையா' பாடலில் ரசிகர்கள் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
பெண்களின் பாதுகாப்புக்காக 'காவலன் எஸ்ஓஎஸ்' என்ற மொபைல் ஆப் இருக்கிறது என்பது இந்தப் படம் மூலம் பலருக்குத் தெரிய வரும். பெண்களின் மொபைல்களில் டிக்டாக், இன்ஸ்டாகிராம் இருப்பதை விட இந்த ஆப் இருக்க வேண்டும் என்ற காட்சியும், அதை படத்தில் சரியான நேரத்திலும் பயன்படுத்தியிருப்பதும் பாராட்டுக்குரியது.
பெண்களின் கொடுமைக்கு எதிராக பொங்கி எழும் ஒரு ஹீரோயிசப் படம். இது போல பல ஹீரோயிசப் படங்களைப் பார்த்துவிட்டோம். சூர்யா படம் என்பதால் அது வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கலாம் என்ற எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. வழக்கமான ஒரு கமர்ஷியல் படத்தை சுமாராகத் தந்திருக்கிறார் பாண்டிராஜ்.
எதற்கும் துணிந்தவன் - துணிவே துணை
எதற்கும் துணிந்தவன் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
எதற்கும் துணிந்தவன்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்
சூர்யா
நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் சூர்யா. வஸந்த் இயக்கிய நேருக்கு நேர் படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவக்கிய சூர்யா, தனது நடிப்பாலும், ஸ்டைலாலும் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்த போது ஜோதிகாவுடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. 2006ம் ஆண்டு அவரை திருமணமும் செய்து கொண்டார். அவருக்கு தியா, தேவ் என்ற குழந்தைகள் உள்ளனர்.