தினமலர் விமர்சனம்
"ஒவ்வொரு குழந்தையிடமும் சிறப்பாக இருக்கும் திறமைகளை கண்டறிந்து அதற்கேற்ப அவற்றை சிறந்தவர்களாக அதன் போக்கிலேயே விட்டு வளர்க்க வேண்டும் ... " எனும் பாடத்தை பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும்சொல்லி அழகாக வந்திருக்கும் பாடம் தான் பசங்க - 2. .
பிரபல நாயகர் சூர்யாவுடன் கார்த்திக்குமார், முனிஸ்காந்த ராமதாஸ் உள்ளிட்ட வளரும் நடிகர்களும் இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்க, அமலா பால், பிந்து மாதவி, வித்யா பிரதீப் உள்ளிட்டோர் கதையின் நாயகியராக நடிக்க., பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களின் இயக்குனர் பாண்டிராஜின் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும், நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பிலும் வெளிவந்திருக்கும் பசங்க-2, சின்ன பசங்களை மட்டும் கவருமா? பெரியவர்களையும், பெற்றோர்களையும் கவரும் படமா..? பார்போம் ....
கதை: என்ஜினியரான கார்த்திக்குமார் - பிந்து மாதவி தம்பதியினரின் மகளும், வங்கி அதிகாரியான "முனிஸ்காந்த் - வித்யா பிரதீப் தம்பதியினரின் மகனும் ஹைப்பர் ஆக்டிவிட்டி குழந்தைகளா? ஒவர் ஆக்டிவிட்டீஸ் குழந்தைகளா..? என்பது பெற்றோருக்கு தெரிய, புரிய வருவதற்குள் சில பள்ளிகள், சிலகுடியிருப்புகளில் இருந்து அந்த குடும்பங்கள், மேற்படி , பிள்ளைகளுக்காகவே குடித்தனம் மாறவேண்டிய சூழ்நிலை.
இந்நிலையில், அதுவரை சென்னையில் இருந்தும் ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத இரு குடும்பங்களும் தாம்பரம் அருகே ஒரே குடியிருப்புக்கும், குழந்தைகள் இரண்டும் ஒரே பள்ளிக்கூடத்திலும் சேருகின்றனர், கொஞ்ச நாளில் இந்த குழந்தைகளின் சுட்டி - குட்டி குறும்பு தனங்களால் அந்தகுடியிருப்பிலும் இரு குடும்பத்திற்கும் கெட்ட பெயர். இதன் பிறகும் பொறுத்துக் கொள்ள முடியாது... என வெகுண்டெழும் இருபிள்ளைகளின் பெற்றோரும்., இரு குழந்தைகளையும் அந்த ஸ்கூல் ஹாஸ்டலில் போட்டு விடுகின்றனர். ஆனால், அந்த ஹாஸ்டலிலும் வம்பு-தும்பு செய்து கொஞ்ச நாளிலேயே குடியிருப்புக்கு திரும்பும் மேற்படி, குழந்தைகளை தங்கள் குழந்தைகள் மாதிரி நல்ல குழந்தைகளாக மாற்றி காட்டுகிறோம்... என தங்கள் அரவணைப்பில் வளர்க்க ஆரம்பிக்கின்றனர். அதே குடியிருப்பில் வசிக்கும் மனம் ஒத்த ஜோடிகளான குழந்தைகள் டாக்டர் சூர்யாவும், சிறப்பு பள்ளி டீச்சர் அமலாபாலும்... சூர்யா - அமலா பால் ஜோடியின் எண்ணம் ஈ.டேறியதா? கார்த்திக்குமார், முனிஸ்காந்த் ராம்தாஸ் குடும்பங்கள், குழந்தைகள் சந்தோஷத்தில் திளைத்ததா...? என்னும் கேள்விகளுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பதில் சொல்கிறது... இயக்குனர் பாண்டிராஜின் பசங்க - 2 படத்தின் மீதிக் கதை.
நற்சாந்து பட்டி எனும் கிராமத்து பள்ளிதொடர் ஓட்டப்பந்தயத்தில் ஆரம்பமாகிறது.... பசங்க - 2 படம். கடைசியாக வந்த மாணவனுக்கு அவனது விடா முயற்சிக்காக சிறப்புபரிசு. அந்தப் பரிசை வாங்கும் சூர்யா, பின்நாளில் நகரத்து பெரிய குழந்தைகள் மருத்துவர் என கோர்த்து வாங்கி காட்சிப்படுத்தியிருப்பதிலும், அதில், கடைசி பெஞ்ச் மாணவர்களும் சாதிக்க முடியும்.... எனும் கான்செப்ட்டை திணித்திருப்பதிலும் மிளிர்கிறது இயக்குனர் பாண்டிராஜின் தைரியமும், சாமர்த்தியமும் ...
சூர்யா, கார்த்திக்குமார் , முனிஸ் ராமதாஸ் என மூன்று நாயகர்கள்.... அதில், இப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சூர்யா சற்றே முந்திக் கொண்டு நடித்திருக்கிறார். அவர் , டாக்டராக நடிப்பது, நன்றாகவே தெரிவது பலவீனம்... கார்த்திக்குமார், முனிஸ்காந்த் ராம்தாஸ் இரு குடும்ப தலைவர்களில் சின்ன , சின்ன திருட்டுகளை செய்யும் "கிளப்டோமேனியா வியாதியுடைய வங்கி மேலாளர் முனிஸ், நடிப்பில் முத்திரைப் பதித்திருக்கிறார்.
கதாநாயகியர்: அமலா பால் டீச்சராக நச்சென்று நடித்திருக்கிறார் என்றாலும், கொஞ்சம் சூர்யா மாதிரியே ஒவர் ஆக்டிங்காக பாலின் நடிப்பும் செயற்கையாக தெரிவது பலவீனம். நிஜத்தில் அமலாபாலுக்கு இயக்குனர் ஏ.எல் விஜய்யுடன் திருமணம் ஆகி விட்டதாலோ என்னவோ., கணவராக இதில் நடித்திருக்கும் சூர்யாவுடன் அமலாவுக்கு அவ்வளவாக இல்லை ஒட்டுதல்.
அமலா பாலும் நான் இயக்குனர் விஜய்யின் மனைவி இதற்கு மேல் சூர்யாவுடன் இறங்கி, கிறங்கி நடிக்க மாட்டேன்... என கொள்கை வகுத்துக் கொண்டு நடித்திருப்பது போல், சூர்யாவும், நான் ஜோதிகாவின் ஆத்துக்காரர் இதற்கு மேல் அமலா பாலுடன் நெருக்கம் காட்ட மாட்டேன்..... என பிடிவாதம் காட்டியிருப்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சற்றே சலிப்பு தட்ட விடுகிறது. இதை இயக்குனரும், சூர்யா, அமலா பால் உள்ளிட்டோரும் இன்னும் கவனித்து முயற்சித்திருந்தால் தவிர்த்திருக்கலாம் . மற்றபடி, கார்த்திக்குமாரின் ஜோடியாக வரும் பிந்து மாதவி, முனிஸ்ஸின் ஜோடி வித்யா பிரதீப் இருவரும் நடிப்பில் அமலாவைக் காட்டிலும் இயல்பாக நடித்து இயன்றவரை அசத்தியிருப்பது ஆறுதல் .
சுட்டிகளாக வரும் மாஸ்டர் நிசேஷ், பேபி வைஷ்ணவி, அருஷ் உள்ளிட்டோர் சூர்யா மாதிரியே அளவுக்கு அதிகமாக நடித்திருப்பது, அளவுக்கு மிஞ்சினால், அமிர்தமும் நஞ்சு எனும் மெய்பிக்கும் விதமாகவே சில இடங்களில் தெரிவது பலவீனம். சிறப்புபள்ளி தாளாளர் கேரக்டரில் வரும் டைரக்டர் ஆர்.வி .உதயகுமார், கெஸ்ட் ரோலில் வரும் காமெடி சூரி, டைரக்டர் சீனு ராமசாமி, சமுத்திரகனி உள்ளிட்டோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.
தொழில் நுட்ப கலைஞர்களில் பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு, பிரமாதமென்றால், ஆரெல் கரோலியின் இசையும் பின்னணி, பாடல்கள் இசை என இரட்டை பிரமாதம். இவரது இசையில் சோட்டா பீமா.... உள்ளிட்ட நான்கு பாடல்களுமே குழந்தைகளுக்கான குதூகலாம். பிரவின் கே.எல். லின் படத்தொகுப்பு அவசரகதியில் முடியும் க்ளைமாக்ஸ் தவிர்த்து பிற இடங்களில் பக்காதொகுப்பு.
பசங்க படத்தின் பெரும் பலமாக, அதிக பீஸ் அவங்க தான் வாங்கறாங்க அப்ப அவங்க தானே பெஸ்ட் ஸ்கூல், நம்ம காலத்துல பள்ளிக்கூடத்த கவர்மெண்ட் நடத்துச்சு ... ஓயின்ஷாப் பை தனியார் நடத்துனாங்க... இப்போ, ஸ்கூல்ஸை தனியார் நடத்துறாங்க., ஒயின்ஷாப்பை கவர்மெண்ட் நடத்துது... அதான், இப்படி ... , உங்க ஸ்கூல்ல பசங்க தமிழ்ல கெட்ட வார்த்த பேசுவாங்க, இங்க இங்கிலீஷ்ல கெட்ட வார்த்த பேசுவாங்க ... அதான் வித்தியாசம்... , இந்த உலகிலேயே சிறந்த வகுப்பறை தாயின் கருவறை... , "குழந்தைகளை நாம குழந்தைகளா நினைச்சா தான், பெரிய வங்கள அவங்க பெரிய வங்களா மதிப்பாங்க... " , குழந்தைங்க எப்பவுமே கெட்ட வார்த்தை பேசமாட்டாங்க, கேட்ட வார்த்தையைத்தான் பேசுவாங்க..... ஆட்டோ ஓட்டும்போது.... அப்பாவா., நீங்க எவ்ளோ பேசி பிருப்பிங்க ....? " நம்மளவிருந்துக்கு கூடப்பிட்டு அவங்களுக்கு பிடிச்சத சமைச்சு வச்சிருப்பாங்க .... , குழந்தைகளை பெத்த எங்களை டாய்ஸ் விற்பவர் முதல் ஸ்கூல் நடத்துபவர்கள் வரை எலலோரும் ஏமாத்துறாங்க ... எனக்கு 500 ரூபாய்க்கு டிரஸ் எடுத்துட முடியுது, ஆனா என் குழந்தைக்கு 1550 வரை ஒவ்வொரு முறையும் டிரஸ் செலவு ஆகுது .. ஏன், இப்படி ? பசங்க மனசில் மதிப்பெண்கள் விதைப்பதைவிட மதிப்பான எண்ணங்கள்.. விதைப்பது நல்லது ... " இப்படி சகலமும் பேசியிருக்கும் பசங்க - 2 படத்தின வசனங்கள் தான் பெரும் பலம்!
சூர்யா - அமலா பால் ஜோடி மற்றும் குழந்தைகளின் ஓவர் ஆக்டிங் மற்றும் கணவன் மனைவியாக அவ்வளவாக ஓட்டுதல் இல்லாத நடிப்பு ஆகியவை பலவீனமாக தெரிந்தாலும், இயக்குனர் பாண்டிராஜின் எழுத்து, இயக்கத்தில் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டி பொட்டில் அறைந்த மாதிரி முடிந்திருக்க வேண்டிய க்ளைமாக்ஸ், பொசுக்கென முடிவது மட்டுமே குறை. மற்றபடி, மொத்தப் படமும் பெரும் நிறையே! "ஆசையை துறக்க சொல்லி புத்தரே ஆசைபட்டது மாதிரி ... " உள்ளிட்ட வசன வரிகள் போதும் பசங்க - 2 படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூற!
ஆக மொத்தத்தில், பாண்டிராஜின் பசங்க - 2 படம், பசங்களுக்கும், பெற்றோருக்கும் ஏன்? ஆசிரியர்களுக்கும்.... பக்கா பாடம்!!
----------------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
நகரத்துக் குழந்தைகளின் புது உலகத்தை பசங்க - 2 படத்தின் மூலம் காட்டியிருக்கிறார்கள் இயக்குநர் பாண்டியராஜூம் நடிகர் சூர்யாவும்.
ADHD என்கிற குறைபாட்டால் அதீத பரபரப்புக்கு ஆளாகிற குழந்தைகள் எப்படியெல்லாம் குறும்பு செய்வார்கள். பெற்றோரும், ஆசிரியர்களும் எவ்வளவு பாதிப்படைவார்கள் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியதோடு, அதற்கொரு தீர்வும் சொல்லும் படம்.
கார்த்திக்குமார் - பிந்துமாதவி தம்பதியர்க்கு நெயினா என்றாரு சுட்டிப்பெண். முனிஸ்காந்த் - வித்யா தம்பதியர்க்கு கவின் என்றொரு சுட்டிப் பையன். இவர்களின் சுட்டித்தனத்தைத் தாங்கமுடியாமல் பல பள்ளிகள், பல அபார்ட்மெண்ட்ஸ் என்று மாறிமாறி பெற்றோர்படும் அவஸ்தை நகரத்துப் பெற்றோரின் பிரதிபலிப்பு.
மாஸ்டர் நிஷேஷ் (கவின்), பேபி வைஷ்ணவி (நெயினா) குழந்தைகள் உலகுக்கான ஹைக்கூ. இவர்கள் செய்யும் குறும்புகளால் திரையரங்கமே அதகளப்படுகிறது. டீச்சரை அடிப்பது, போரடித்தால் பள்ளி மணியை அடிப்பது, ஹாஸ்டலில் பேய்க்கதை சொல்லி மற்ற குழந்தைகளை பயமுறுத்துவது... என்று குழந்தைகளின் நிஜஉலகம் நம் கண்முன்.
டாக்டராக வரும் சூர்யா, மனைவி அமலாபாலுடன் குழந்தைகளோடு கை கோர்த்து அவர்களின் உலகிற்கே நம்மை அழைத்துச் செல்கிறார். பிந்துமாதவி, வித்யா, கார்த்திக்குமார், முனிஸ்காந்த் ஆகியோர் ADHD குழந்தைகளின் பெற்றோர்களின் அச்சுஅசல் வார்ப்பு. இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய ப்ளஸ்.
குழந்தைகளின் உலகத்தைப் புரியாமல் அல்லாடும் பெற்றோருக்குத்தான் முதலில் ட்ரீட்மெண்ட் அவசியம் என்பதை அழுத்தமாகச் சொல்வது நெத்தியடி. இருந்தாலும் 'தாரே ஜமீன் பர்' காட்சிகள் சில நினைவுக்கு வருவதை தவிர்த்திருக்கலாம்.
பசங்க 2 - பெற்றோருக்கான பாடம்
குமுதம் ரேட்டிங் - ஓகே