3.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், சூரி மற்றும் பலர்
இயக்கம் - பாண்டிராஜ்
இசை - டி.இமான்
தயாரிப்பு - 2டி என்டர்டெயின்மென்ட்

தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகளைப் பார்த்து எவ்வளவு நாளாயிற்று?. இந்தக் காலத்தில் அப்படி ஒரு படம் எடுத்தால் உடனே டிவி சீரியல் என கிண்டலடிக்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது. தங்களது குடும்பத்தைக் கூட நேசிக்காதவர்கள் தான் அப்படிப்பட்ட கிண்டலடிக்கும் குணத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்பா, அம்மா, அக்கா, தங்கை, மாமன், மச்சான், அத்தை, மாமா, மாமி, கொழுந்தனார், கொழுந்தியாள், பெரியம்மா, பெரியப்பா என இந்தக் காலத் தலைமுறை அந்த உறவுகளின் பாசத்தை அனுபவித்திருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், இந்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் ஏறக்குறைய அனைத்து உறவுகளையும் அவர்களது குணங்களையும் அப்படியே காட்டிவிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

விவசாயத்தையும், அதன் சிறப்பையும், விவசாயிகளின் நிலைமையையும் படத்தின் ஆரம்பத்தில் அற்புதமாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஏன், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் கூட வில்லன் அடியாட்களிம், “இங்க யாராவது விவசாயிங்க இருந்தா வந்துடுங்க, அவங்களை நான் அடிக்க மாட்டேன்... ஏன்னா, ஏற்கெனவே............... அடிச்சிடுச்சி'', என்ற சென்சார் கட்டுடன் வந்த வசனத்திலும் விவசாயத்தைப் பற்றி இடம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குட்டாகவும், பாராட்டாகவும் வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

சத்யராஜுக்கு விஜி, பானுப்ரியா என இரு மனைவிகள், இருவரும் அக்கா தங்கைகள். விஜிக்கு நான்கு பெண்கள், படத்தின் நாயகன் கார்த்தி, பானுப்ரியாவிற்கு ஒரு பெண், ஒரு பேத்தி. விஜியின் பேத்தியான பிரியா பவானி சங்கர், பானுப்ரியாவின் பேத்தியான அர்த்தனா இருவருக்கும் தாய்மாமன் கார்த்தியை கல்யாணம் செய்து கொள்ள பேராசை. ஆனால், கார்த்திக்கோ, பேருந்தில் பார்த்த சாயிஷா மீது காதல். இதனிடையே, சாயிஷா தாய்மாமன் சந்துருவிற்கு ஒரு ஆணவக் கொலைக்காக தண்டனை வாங்கிக் கொடுக்கிறார் கார்த்தி. தன்னை தண்டனையில் சிக்க வைத்த கார்த்தியை கொல்லத் துடிக்கிறார் சந்துரு. அதே சமயம், கார்த்தி, சாயிஷாவைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்க, கார்த்தியின் அக்காக்காள் அவருக்கு எதிராக மாற, அந்த பெரிய குடும்பம் பிரிகிறது. கார்த்தி, சாயிஷா இணைந்தார்களா, சந்துரு, கார்த்தியைப் பழி வாங்கினாரா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

முக்கிய கதாபாத்திரங்களுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை வைத்த இயக்குனர் பாண்டிராஜின் தமிழார்வத்திற்கு முதல் பாராட்டு. பெருநாழி குணசிங்கம், கண்ணுக்கினியாள், பெருநாழி ரணசிங்கம், சிவகாமியின் செல்வன், பூம்பொழில் செல்லம்மா, ஆண்டாள் பிரியதர்ஷினி, பஞ்சவன் மாதேவி, வானவன் மாதேவி, தில்லை நாயகம், அதியமான் நெடுங்கிழி, தாமரை மணாளன், மல்லிகை மணாளன், மங்கம்மா ராணி, சம்யுக்தா ராணி, வேலுநாச்சியாள் ராணி, பத்மாவதி ராணி, கொடியரசு என பெயர்களை தேடித் தேடிப் பிடித்திருக்கிறார்.

படத்தில் ஏறக்குறைய அனைவருக்குமே ஒரு காட்சியிலாவது சிறப்பான விதத்தில் நடிப்பை வெளிப்படுத்தும் அளவிற்கு காட்சிகளை அமைத்திருக்கிறார்.

கிராமத்து கதாபாத்திரத்தில் தற்போது இருக்கும் கதாநாயகர்களில் கார்த்தியை விட்டால் வேறு யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு குணசிங்கம் ஆக குணச்சித்திர நடிப்பில் 'சிங்கம், 1, 2, 3' என அசத்தியிருக்கிறார் கார்த்தி. எப்போதும் சிரித்துக் கொண்டேயிருப்பவர், குடும்பம் பிரியும் போதும் கலங்கிப் போகிறார். காதலில் கூட அந்த சிரிப்புதான் முன்னணியில் நிற்கிறது, காதலும் பின்னாடிதான் வருகிறது. 'பருத்திவீரன், கொம்பன்' படங்களுக்குப் பிறகு கார்த்திக்கு அந்தப் படங்களை விட இந்தப் படம் சிறந்த பெயரை வாங்கித் தரும்.

படத்தில் மூன்று கதாநாயகிகள். மூவரில் கார்த்தியின் காதலியாக நடித்திருக்கும் சாயிஷாவை விட பிரியா பவானியும், அர்த்தனாவும் நடிப்பில் முத்திரை பதித்துவிட்டார்கள். சாயிஷா அழகுப் பதுமையாக வந்து போகிறார். கொஞ்சம் காதல், ஒரே ஒரு இடத்தில் கோபம் என அவருடைய நடிப்பு சிக்கனமாய் அமைந்துவிட்டது.

'தகடு தகடு' என 30 வருடங்களுக்கு முன்பு வில்லத்தனம் பேசி நடித்த சத்யராஜா இது என ஆச்சரியப்பட வைக்கிறார். அமைதியான அப்பாவாக, இரு மனைவிகளின் கணவராக இருந்தாலும், அவருக்கே உரிய நக்கல் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் சந்துருவை விட அவருக்குப் பின்னணிக் குரல் கொடுத்த ஆர்.கே.சுரேஷ் குரலில் வில்லத்தனத்தின் வெறுப்பு கூடுதலாய் தெரிகிறது.

அட, சூரியா இது என வியக்க வைக்கிறார் சூரி. கிடைக்கும் கேப்பில் காமெடியையும், மற்ற நேரங்களில் குணச்சித்திரத்தையும் கலந்துகட்டி அடிக்கிறார். சரியான காட்சிகள் கிடைத்தால் சூரியும், காமெடியை வாரி வழங்குவார் என்பதை உணர்த்தியிருக்கிறார்.

சத்யராஜின் மனைவியாக விஜி, துணைவியாக பானுப்ரியா, மகள்களாக மௌனிகா, யுவராணி, தீபா, இந்துமதி மணிகண்டன், ஜீவிதா கிருஷ்ணன். மருமகன்களாக சரவணன், இளவரசு, மாரிமுத்து, ஸ்ரீமன், கணக்கப்பிள்ளையாக மனோஜ்குமார் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. இவர்களில் சரவணன், இளவரசு தனி கைத்தட்டல் பெறுகிறார்கள்.

இமான் இசையமைப்பில் வா ஜிக்கி, தண்டோரா காதல்... பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. வேல்ராஜ் ஒளிப்பதிவில் கிராமமும், வீடும், வயல்வெளியும், வரப்பும் நம்மையும் அதற்குள் இழுத்துச் சென்றுவிடுகின்றன.

விவசாயம், காதல், குடும்பம், பாசம், சாதி, குடும்ப அரசியல், அரசியல் என அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தும் உணர்ச்சிக் காவியமாக இருக்கிறது. சில சமயங்களில் அது கொஞ்சம் ஓவராகவும் இருக்கிறது. இடைவேளைக்குப் பின் தன் திருமணத்திற்காக கார்த்தி ஒவ்வொரு அக்கா வீட்டிற்கும் ஏறி இறங்குவதும், அதன் பின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளும் திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துகிறது. இதற்கு முன் சில படங்களில் பார்த்த வழக்கமான சாதி அரசியல், ஆணவக் கொலை ஆகியவற்றை தவிர்த்து வேறு விதமாக யோசித்திருக்கலாம்.

இந்தப் படத்தைப் பார்த்து விவசாயத்தைக் கைவிட்டவர்கள் மீண்டும் விவாசயம் செய்ய முன் வந்தாலோ, சாதாரண பிரச்னைக்காக தங்களது குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தாலோ அதுவே இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றி.

கடைக்குட்டி சிங்கம் - செல்லக்குட்டி, வெல்லக்கட்டி...!

 

பட குழுவினர்

கடைக்குட்டி சிங்கம்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

கார்த்தி

நடிகர் சிவக்குமாரின் இளைய வாரிசு கார்த்தி. 1977ம் ஆண்டு, மே 25ம் தேதி பிறந்த கார்த்தி, அமெரிக்காவில் இன்ஜினியரிங் படித்தவர். அப்படிப்பட்டவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல்படத்திலேயே கிராமத்து முரட்டு இளைஞனாக அனைவரையும் கவர்ந்த கார்த்தி, தொடர்ந்து பையா, சிறுத்தை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறார். 2011ம் ஆண்டு, ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.

மேலும் விமர்சனம் ↓