Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

மெரினா

மெரினா,Marina
13 பிப், 2012 - 14:37 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » மெரினா

 

தினமலர் விமர்சனம்


"பசங்க" படத்தில் கிராமப்புற சிறுவர்களின் கல்வி, நட்பு, போட்டி, பொறாமை இத்யாதி இத்யாதிகளை படமாக்கியிருந்த இயக்குநர் பாண்டிராஜ், "மெரினா" படத்தில் கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்களின் பின்புலம் வாழ்க்கை முறை, பள்ளிக்கல்வி ஏக்கம்... இத்யாதி இத்யாதிகளை, கடற்கரை காதலர்கள், வாக்கிங் வயோதிகர்கள், ஆதரவற்ற பிச்சைக்காரர்கள், அர்த்தபுஷ்டியான மனோ வியாதிக்காரர்கள் உள்ளிட்ட பீச் பிரபலங்களுடன் கலந்துகட்டி கலக்கலாக கதை சொல்லி இருக்கிறார்!

பெற்றவர்களை இழந்து கொடுமைக்கார சித்தப்பாவின் பணத்தாசைக்குப் பயந்து படிக்கும் ஆசையில் சென்னைக்கு தப்பி வரும் பசங்க பாண்டியனுக்கும், தாயின் தவறான நடத்தையால் அனாதையாகும் கெளதம் புருஷோத்துக்கும், சுண்டல் விற்கும் சிறுவர்களாக அடைக்கலம் தருகிறது மெரினா பீச்! பீச்சோடு சேர்ந்து இவர்களுக்கு நட்பாகின்றனர் கொடுமைக்கார மருமகளால் பிச்சைக்காரராகும் சுந்தர்ராஜன் தாத்தா, பொட்ட பிள்ளையை ஆடவிட்டு வயிற்சை கழுவும் பாடகர், ஆக்காட்டி ஆறுமுகம், பாசம் நிறைந்த போஸ்ட்மேன் "ஜித்தன்" மோகன், மக்குடு சத்தீஷ், குதிரை சவாரி வாலிபர் உள்ளிட்டவர்கள்! இவர்களது நட்பும், பாசமும் ஒருபக்கம் உருக்கமாகவும், உயிரோட்டமாகவும் படத்தை நகர்த்துகிறதென்றால் மற்றொருபக்கம் சிவகார்த்திகேயன்-ஓவியாவின் டைம்பாஸ் காதல், காமெடியாகவும்-கலர்ஃபுல்லாகவும் மெரினாவை கொண்டு செல்வதும் படத்தின் பெரும்பலம்!

பசங்க பாண்டியன் ஊரில் இருந்து சென்னை மெரினா வந்து சேர்ந்ததும், பிச்சைக்காரர் சுந்தர்ராஜை சந்திப்பதும், அவர் அவனுக்கு, பிச்சை மட்டும் எடுத்திராதே... என்று அறிவுரை சொல்வதும், அதையே அவன் அவருக்கு சொல்லி, புல்லாங்குழல் வியாபாரியாக அவரை மாற்றுவதும் சூப்பர் டச்! இதுமாதிரி எண்ணற்ற டச்-கள் படம் முழுக்க பரவிக்கிடப்பது நச்!

சிவகார்த்திகேயனும், ஓவியாவும் இன்றைய இளைஞர்களின் டைம்பாஸ் காதலை இயல்பாக எடுத்துரைத்திருப்பது பிரமாதம்! அதிலும் சிவகார்த்திகேயன், காதலிக்கு பிடித்ததையெல்லாம் தானும் சாப்பிடுவது, ஓவியாவுக்கு பிடிக்கும் என நினைத்து காசு கொடுத்து டூப் வைத்து பைக் வீலிங் சாகசம் எல்லாம் செய்வது உள்ளிட்ட சமாச்சாரங்கள் செம சுவாரஸ்யம்!

பசங்க பாண்டியன், சிவகார்த்திகேயன், கெளதம் புருஷோத், சத்தீஷ், ஜித்தன் மோகன், பாடகர் ஆக்காட்டி ஆறுமுகம், தாத்தா சுந்தர்ராஜன், ஓவியா, பாடகரின் மகள் அன்னம்மாவாக வரும் ஜெயஸ்ரீ, ஓவியாவின் அம்மா செந்தில்குமாரி உள்ளிட்டவர்களுடன் குழந்தைகள் நல காப்பக அதிகாரியாக ஒரு சில சீன்களே வரும் ஜெய்பிரகாஷூம் பிரமாதமாக நடித்து மெரினாவை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார் பலே! பலே!!

கிரிஷின் அறிமுக இசையும், விஜய்யின் அறிமுக ஒளிப்பதிவும், அத்தியப்பன் சிவாவின் அறிமுக படத்தொகுப்பும், அறிமுகங்கள் என்றளவில் இல்லாமல் பிரமாதமாக இருப்பது மெரினா படத்தின் பலம்! மெரினாவில் காலில் செருப்பு இல்லாமல் சிறுவர்கள் சுண்டல் விற்பதற்கு காரணம் என்ன...? என்பதில் தொடங்கி ஒவ்வொன்றையும் இயக்குநர் பாண்டிராஜ் அக்குவேறு ஆணிவேராக அலசியிருக்கும் விதம் ஒன்று போதும் மெரினாவின் வெற்றிக்கு கட்டியம் கூற!

ஆக மொத்தத்தில் "பசங்க" பாண்டிராஜின் தயாரிப்பு, எழுத்து, இயக்கத்தில் "மெரினா" ரொம்ப ரொம்ப சரின்னா!
--------------------------------------------------------


குமுதம் சினிமா விமர்சனம்


அட... "பசங்க புகழ் பாண்டியராஜ் படமாச்சே... என தியேட்டரின் நுனி சீட்டில் அவலோடு உட்கார்ந்தால் தலைப்புக்கு ஏற்ற மாதிரி மெரினா பீச்சில் சுண்டல் விற்கும் ஏழைச் சிறுவர்களைக் காட்டுகிறாங்க.... இன்னொரு பக்கம் அதே மெரினாவில் சிவகார்த்திகேயன் - ஓவியா ஜோடி காதலிக்குது. பீச் பசங்களுக்கு என்னவாச்சு? அந்த காதல் ஜோடிக்கு என்ன நடந்தது? என்பதுதான் கதையும் முடிவும்.

பீச்சில் சுண்டல் விற்பதில் தொடங்கி தண்ணீர் பாக்கெட், சங்கு, டீ என பரிதாபமாய் வியாபாரம் செய்யும் பொடியன்களின் வேதனை, அவஸ்தைகளை சொல்லப்போகிறார்கள் என நினைத்தால், அந்தச் சிறுசுகளெல்லாம் ஒன்று சேர்ந்து சைக்கிளிங், ஓட்டப்பந்தயம், குதிரைச்சாவரி, கிரிக்கெட் என லூட்டி அடிப்பதை மட்டும் காட்டுறாங்க. நள்ளிரவில் பீச்சில் தூங்குவது, போலீஸுக்கு பயந்து மரங்களில் மறைவது என மருந்துக்கு ஒரு சில இடங்களில் மட்டும் பீச் பையன்களின் சோகக் காட்சிகளையும் காட்டுறாங்க அவ்ளோதான். படம் நெடுக பொடிசுகள்... பொடிசுகள். "மெரீனா என்பதற்கு பதிலாக "பசங்க பார்ட்-2 என்றே தலைப்பு வைச்சுருக்கலாம்.

பிச்சைகார கிழவனாக வரும் அந்த தாத்தாவும், அவரின் சோகமான ஃப்ளாஷ்பேக் காட்சியும் மட்டும் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. மற்றபடி ஏகப்பட்ட சொதப்பல்கள்! சரி, காதல் காட்சிகளுக்கு வருவோம். விஜய் டி.வி. புகழ் சிவகார்த்திகேயன் மேக்கப் இல்லாமல் இயல்பாக நடிச்சுருக்கார். சிவாவுக்கு உச்சி வெயிலில் மெரினாவில் காதலியுடன் உட்கார்ந்து கடலை போட வேண்டுமென்பதுதான் லட்சியம்(!) இதற்காக பழையபாணியில் "இந்த கீ செயின் உங்களுதா" என ஓவியாவிடம் வழியத் தொடங்கி, துரத்தித் துரத்தி லவ்வுகிறார். ஆனால் சிவகார்த்தி - ஓவியா ஜோடிக்கு வெகுசீக்கிரமே காதல் மலர்வதும், அடுத்த நொடியிலேயே பீச்சில் இருவரும் கடலை போடுவதும் ஒப்புக்கொள்ள முடியாத பூச்சுற்றல் காட்சிகள்.

படத்தின் முக்கிய கேரக்டர் சிவகார்த்திகேயனின் நண்பராக வரும் நபர். "காதல்... முட்டாள்கள் செய்யும் புத்திசாலிதனம், புத்திசாலிகள் செய்யும் முட்டாள்தனம் என காதல் தத்துவங்களாக பேசி நிறைய இடங்களில் அப்ளாஸ் அள்ளுகிறார். படத்தின் ஒரே ஆறுதலும் இவர்தான். படத்தின் இறுதியில் சுண்டல் விற்கும் பீச் சிறுவர்கள் பள்ளிக்கூடத்திற்கு படிக்கப் போறாங்க... ஓவியா வேற ஒரு நபருடன் தாலி கட்டிக்கிறார். சிவாவின் காதல் பணாலாகி, வேறொரு ஃபிகரை கரெக்ட் செய்து அதே மெரினாவில் மறுபடியும் கடலை போடுவதாக காட்டுறாங்க. என்னாச்சு பாண்டிராஜ் ஸார்...?

படத்தின் உருப்படியான விஷயங்கள் ரெண்டு. ஒன்று ஒளிப்பதிவு. மற்றொன்று இசை. அறிமுக ஒளிப்பதிவாளர் விஜய் தனது கேமராவால் மெரினா மற்றும் அங்கே வரும் ஜனங்கூட்டங்களை அற்புதமாக படம் பிடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜி.கிரிஷ் பாடல்கள் அனைத்திலும் பட்டாஸாக வெடித்த தூள் கிளப்பியிருக்கிறார். இதமான பின்னணி இசையிலும் ஜெயித்திருக்கிறார்.

மெரினா - கடல் பின்வாங்கி விட்டது

குமுதம் ரேட்டிங் - சுமார்!--------------------------------------------------


கல்கி சினி விமர்சனம்


சிறுவர்களை வைத்து பசங்க வெற்றியை கொடுத்த பாண்டிராஜ், அதே டிராக்கில் கொடுத்திருக்கும் மற்றொரு படம், மெரினா. இதில் மெரினா பீச் சிறுவர்களின் கல்வித் தேவையை எடுத்துப் பேசியிருக்கிறார்.

பல்வேறு ஊர்களில் இருந்து வந்து மெரினாவில் வாழ்க்கையை நடத்தும் சிறுவர்களின் பட்டாளம் படம் முழுக்க அதகளம் செய்கிறது. பெட்ரோல் திருடும் சிறுவன், போலக்குக்கு டான்ஸ் ஆடும் பெண், புத்திசாலியான பைத்தியம், குடும்பத்தைவிட்டு வந்து யாசகம் கேட்கும் வயதானவர் என்று ஒவ்வொரு கேரக்டரும், பளிச். ஒவ்வொரு சிறுவனையும் அறிமுகப்படுத்தும் டி.வி. பேட்டி பாணி, வித்தியாசமான அப்ரோச்! மெரினாவின் லைட் ஹவுஸ் முதல் அந்தப் பக்கம் ஹார்பர் வரை அனைத்துப் பகுதிகளிலும் கதை நடக்கிறது.

கூடவே, சிவகார்த்திகேயன், ஓவியாவின் நகரத்துக்காதல், எஸ்.எம்.எஸ். சண்டைகளோடு தொடங்கி, அதனாலேயே நிறைவுபெறாமலும் போய்விடுகிறது. சிவகார்த்திகேயனின் நக்கலும் கிண்டலும் படம் நெடுக. அசாத்தியம்! ஓவியாவுக்கு தனி சல்யூட் வைக்கவேண்டும். நொறுக்குத் தீனி கேட்டே, காதலன் பர்ஸை காலிசெய்யும் கேரக்டர்! கோபம் வரும்போது, கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொள்வது நல்ல அழகு மேனரிஸம்! பலகுரல் மன்னனான நண்பனின் தத்துவ முத்துக்கள், காமெடிக்கு உத்தரவாதம்.

ஏற்கெனவே அனுபவம் பெற்றதாலோ என்னவோ சிறுவர்களை வைத்து வேலை வாங்குவதை வெகு இயல்பாகச் செய்திருக்கிறார் பாண்டிராஜ். ஒவ்வொரு சிறுவனும் மனத்தில் நிற்பது உறுதி!

இவ்வளவு பேர் இருந்தும், ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்தும், எதுவுமே ஒட்டாமல், பீச் மணல் போல் துகள் துகளாக இறைந்து கிடக்கிறது. வலுவான திரைக்கதையில் அத்தனை கேரக்டர்களும் இழுத்துக் கட்டப்பட்டு இருந்தால், சுவாரசியம் கூடியிருக்கும்.

போலீஸ்காரர்கள் ஒரு பையனை தேடி வந்த, மெரினாவில் கண்டுபிடித்து அழைத்துச் செல்லும் இடைவேளை வரையான வேகம், விறுவிறுப்பு, அடுத்த சில காட்சிகளில் புஸ்ஸாகும்போது எரிச்சல் வராமல் என்ன செய்யும் மிஸ்டர் டைரக்டர்?

இசையும் கேமராவும் மெரினாவின் விசாலமான அழகை அள்ளிப் பருகத் தருகின்றன. “வணக்கம். வாழவைக்கும் சென்னை’, “காதல் ஒரு’ பாடல்கள் பிரமாதம். வசனங்களில் தெறிக்கும் ஹியூமரும் சின்னப் பையன்களின் நடிப்பும்தான் கடைசி வரை தியேட்டரில் உட்கார வைக்கிறது.

மற்றபடி, அடுத்த என்ன என்ன என்ற எதிர்பார்ப்பு கடைசி வரை வரவேயில்லை என்பதைப் படத்தின் சிறப்பாகச் சொல்லலாமோ?

மெரினா - பஞ்சுமிட்டாய்!வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

மெரினா தொடர்புடைய செய்திகள் ↓
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in