டான்,Don

டான் - வீடியோ ↓

Advertisement
3

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - லைக்கா புரொடக்ஷன்ஸ், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்
இயக்கம் - சிபி சக்கரவர்த்தி
இசை - அனிருத்
நடிப்பு - சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, பிரியங்கா அருள்மோகன்
வெளியான தேதி - 13 மே 2022
நேரம் - 2 மணி நேரம் 43 நிமிடம்
ரேட்டிங் - 3/5

ஒரு கலகலப்பான படத்தை எடுக்க வேண்டும் என முடிவெடுத்த பின் கதையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கலகலப்பாக நகர்த்தி கடைசியில் எமோஷனல் காட்சிகளை உணர்ச்சிக் குவியலாக்கி இந்த 'டான்' ஐ 'டான் டான்' என மாற்றிவிட்டார்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு கலகலப்பான கல்லூரிக் கதையைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. அந்தக் குறையை இந்தப் படம் போக்கியிருக்கிறது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இன்றைய இளைஞர்களுக்கு எந்த மாதிரியான படத்தைக் கொடுத்தால் ரசிப்பார்கள் என்பது நன்றாகவே புரிந்திருக்கிறது. அதற்கேற்ற காட்சிகள், வசனங்கள் என படத்தை அவர்களைக் குறி வைத்து கொடுத்து வெற்றியும் பெற்றுவிட்டார்.

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் சிவகார்த்திகேயன். சிறு வயதிலிருந்தே கண்டிப்பான அப்பா சமுத்திரக்கனி. மகன் படித்து இஞ்சினியர் ஆக வேண்டும் என சிவகார்த்திகேயனை இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்த்துவிடுகிறார் சமுத்திரக்கனி. படிப்பு அதிகம் ஏறாத சிவகார்த்திகேயன் தனக்குப் பிடித்த ஒன்றை செய்யும் முயற்சியில் இறங்குகிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இன்றைய இஞ்சினியரிங் படிப்பையும், கல்லூரிகளையும், அதில் படிக்கும் மாணவர்களையும், சில பெற்றோர்களின் ஆசைகளையும் உள்ளது உள்ளபடி படம் முழுவதும் காட்டியிருக்கிறார்கள். பெற்றோர் ஆசைகளுக்காக இஞ்சினியரிங் படிக்க வரும் ஒரு மாணவன், மிகவும் கண்டிஷனாக நடந்து கொண்டால்தான் கல்லூரிக்கு நல்ல பெயர் கிடைக்கும் என நினைக்கும் நிர்வாகம், தான் பட்ட கஷ்டத்தை தன் மகன் படக்கூடாது என நினைக்கும் அப்பா இவைதான் இந்த 'டான்'.

இன்றைய ரசிகர்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து தனது படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். தனக்குப் பிடித்ததைக் கண்டுபிடித்து அதில் ஜெயிக்க வேண்டும் என நினைக்கும் சக்கரவர்த்தி கதாபாத்திரத்தில் சர்வ சாதாரணமாய் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். அவருடைய கதாபாத்திரம்தான் இன்றைய பல இளைஞர்களது நிஜமான வாழ்க்கை. அவர்களுக்குப் பிடித்ததை விட தங்களது பெற்றோர்களுக்குப் பிடிக்கிறதே என தங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொண்டு கடைசியில் அதிலேயே மூழ்கிவிடுகிறார்கள். காதலன், நண்பன் ஆகியோரை விட அப்பாவின் கண்டிப்புக்குப் பயந்தவராக கொஞ்சம் அதிகமாகவே ஸ்கோர் செய்கிறார் சிவகார்த்திகேயன். ஆனாலும், அவருடைய மேக்கப்பும், ஹேர்ஸ்டைலும் வழக்கமாகவே இருந்திருக்கலாம். என்னமோ செய்து அவரை எப்படியோ மாற்றியுள்ளார்கள்.

சிவகார்த்திகேயன் காதலியாக பிரியங்கா அருள்மோகன். இருவருக்கும் இடையில் கல்லூரியில் அதிகமான காதல் கதை இல்லை. ஆனால், பிளாஷ்பேக்கில் பள்ளியில் நடக்கும் அந்தக் காதல் தான் க்யூட்டாக அமைந்து ரசிக்க வைக்கிறது. பள்ளி மாணவியாகவும், கல்லூரி மாணவியாகவும் பிரியங்கா அவ்வளவு பொருத்தமாக இருக்கிறார்.

கல்லூரியின் பிரின்சிபாலாக இல்லை என்றாலும் கல்லூரியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பேராசிரியராக எஸ்ஜே சூர்யா. 'மாநாடு' போன்ற வெயிட்டான கதாபாத்திரங்களில் இவரைப் பார்த்துவிட்டு, இது போன்ற லேசான கதாபாத்திரங்களில் பார்க்க என்னவோ போல் உள்ளது.

சிவகார்த்திகேயனின் நண்பர்களாக பாலசரவணன், ஆர்ஜே விஜய், ஷிவாங்கி. படத்தின் கலகலப்புக்கு பொறுப்பேற்று அதை சரியாகவும் செய்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் அப்பாவாக சமுத்திரக்கனி. எங்கே அட்வைஸ் செய்வாரோ என நீங்கள் பயப்பட வேண்டாம். ஒரு சாதாரண அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். கிளைமாக்சில் பலரும் கண் கலங்க வைக்கும்படியான காட்சி உண்டு. சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டிலட்சுமி அந்த ஒரே ஒரு காட்சியில் மனதில் நின்றுவிடுகிறார். முக்கியத்துவம் இல்லாமல் வந்து போகும் ஒரு கதாபாத்திரத்தில் சூரி.

அனிருத் இசையில் பாடல்கள் பட்டாசு ரகம். பின்னணி இசையும் குறிப்பிடும்படி உள்ளது. முழு கதையும் கல்லூரியிலேயே நடக்கிறது. அதனால் படத்தில் எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. எல்லாவற்றையும் சமாளித்து ஒளிப்பதிவு செய்துள்ளார் பாஸ்கரன்.

சில பல முந்தைய படங்களை சில காட்சிகள் ஞாபகப்படுத்துகிறது. 'சந்தோஷ் சுப்பிரமணியம்' பிரகாஷ் ராஜ், 'நண்பன்' சத்யராஜ் கதாபாத்திரங்களின் மறுவடிவமாக சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா கதாபாத்திரங்கள் தெரிகிறது. இஞ்சினியரிங் மாணவன் சினிமாதான் தனது எதிர்காலம் என முடிவு செய்வதற்குப் பதிலாக வேறு எதையாவது வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக இருந்திருக்குமே என்பது மட்டும் குறையாகத் தெரிகிறது.

டான் - பாசமான 'சன்'

 

டான் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

டான்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்
  • இசை அமைப்பாளர்

மேலும் விமர்சனம் ↓