3.5

விமர்சனம்

Advertisement

நடிப்பு - துல்கர் சல்மான், நித்து வர்மா, ரக்ஷன், நிரஞ்சனி அகத்தியன்
தயாரிப்பு - வியாகாம் 18 ஸ்டுடியோஸ், ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனி
இயக்கம் - தேசிங் பெரியசாமி
இசை - மசாலா காபி, ஹர்ஷவர்தன், ரமேஷ்வர்
வெளியான தேதி - 28 பிப்ரவரி 2020
நேரம் - 2 மணி நேரம் 42 நிமிடம்
ரேட்டிங் - 3.5/5

2020, பிப்ரவரி 28ம் தேதியான இன்று இப்படி ஒரு படம் வெளிவந்துள்ளதா என்பது கூட பலருக்குத் தெரிந்திருக்காது. அப்படியே இந்தப் படத்தைப் பற்றிப் பார்த்தவர்களும் இது ஒரு மலையாள டப்பிங் படம் என்று கூட நினைத்திருப்பார்கள்.

அந்த அளவிற்கு இந்தப் படம் பற்றிய செய்தியோ, தகவலோ கடந்த வாரம் வரை வெளிவரவேயில்லை. இரு தினங்களுக்கு முன்புதான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பையே நடத்தினார்கள். அந்த அளவிற்குத்தான் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்துள்ளார்கள்.

ஆனால், படத்தைப் பார்த்த பிறகு, அடடா, இப்படி ஒரு சுவாரசியமான தமிழ் சினிமாவைப் பார்த்து எவ்வளவு நாட்களாகிவிட்டது என வியக்க வைக்கிறார்கள் படக்குழுவினர்.

அதற்கு மிக முக்கிய காரணம் இயக்குனர் தேசிங் பெரியசாமி. “யாருப்பா, நீ, இவ்வளவு நாளா எங்க இருந்த என்று படம் ஆரம்பித்த சில நிமிடங்களுக்குள் கேட்க வைத்துவிடுகிறார். படத்தின் சுவாரசியத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாகக் கொண்டு சென்றிருக்கிறார். படம் ஏறக்குறைய இரண்டே முக்கால் மணி நேரம் என்பது கூட பெரிதாகத் தெரியவில்லை.

அதிலும், கிளைமாக்சில் கவுதம் மேனனை வைத்து ஒரு காட்சி அமைத்திருக்கிறார் பாருங்கள் இயக்குனர். அவரை வைத்தே விண்ணைத் தாண்டி வருவாயா படத்தையும் கிண்டலடித்திருக்கிறார். கையைக் கொடுங்க இயக்குனர் தேசிங், தேசிய விருதை எல்லாம் விட பெரிய விருதான ரசிகர்களின் விருது இந்தப் படம் மூலம் உங்களுக்குக் கிடைக்க வாழ்த்துகள்.

துல்கர் சல்மான், ரக்ஷன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆன்லைனில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வாங்கி, அதில் ஒரு திருட்டுத்தனம் செய்து லட்சம் லட்சமாக சம்பாதிப்பவர்கள். ஆனால், தங்களை ஆப் டெவலப்பர் என சொல்லிக் கொள்பவர்கள். வீடு வீடாகச் சென்று பியூட்டீஷியன் வேலை செய்யும் ரித்து வர்மா மீது துல்கருக்குக் காதல். ஒரு கட்டத்தில் ரித்துவும் துல்கரைக் காதலிக்கிறார். ரித்து தோழி நிரஞ்சனியை ரக்ஷன் காதலிக்க ஆரம்பிக்கிறார். தங்களது திருட்டுத்தனத்தை காதலிகளிடம் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் துல்கர், ரக்ஷன்.

சரி, திருட்டுத்தனம் செய்தது போதும் கோவா சென்று ஹோட்டல், பியூட்டி சென்டர் ஆரம்பித்து வாழலாம் என நினைத்து நால்வரும் கோவா செல்கிறார்கள். இதனிடையே, தன் வீட்டில் ஒரு லேப்டாப் வெடித்தது பற்றிய விசாரணையில் இருக்கும் டிசிபி கவுதம் மேனன், கோவா வந்து துல்கரையும் ரக்ஷனையும் சுற்றி வளைக்கிறார். ஆனால், அவர் தேடி வந்தது தங்களையல்ல, ரித்துவையும், நிரஞ்சனியையும் தான் என்பது தெரிந்து அதிர்ச்சியடைகிறார்கள் துல்கர், ரக்ஷன். அவர்களிடமிருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர் ரித்து, நிரஞ்சனி. தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிந்த துல்கர், ரக்ஷன் என்ன செய்கிறார்கள், ரித்து, நிரஞ்சனியை கவுதம் மேனன் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஆன்லைன் வர்த்தகத்தில் எப்படிப்பட்ட பிராடு எல்லாம் நடக்கும் என்பதைப் பார்க்கும் போது நமக்கு அதிர்ச்சிதான் வருகிறது. அழகாக இருந்து கொண்டு, ஆங்கிலத்தில் பேசிக் கொண்டு நம்மை எல்லாம் சில கும்பல் ஏமாற்றும் என்பதைப் புட்டு புட்டு வைக்கிறார் இயக்குனர்.

ஓ காதல் கண்மணி படத்திற்குப் பிறகு துல்கர் சல்மான், தமிழ் ரசிகர்களைக் கவர்ந்துள்ள ஒரு படம் இது. ஆப் டெவலப்பர், ஹைடெக் திருடன் கதாபாத்திரத்தில் அப்படியே பொருத்தமாக நடிக்கிறார். எந்த இடத்தில் நடிக்கிறார், எந்த இடத்தில் இயல்பாக இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு யதார்த்தமான நடிப்பு. காதலைச் சொல்லி தன்னை ஏமாற்றிவிட்ட ரித்துவை நினைத்துக் கொஞ்சம் வருத்தப்பட்டாலும், அதன்பின் அவரைக் கண்டுபிடிக்க பரபரப்பாக இறங்குகிறார். அடிக்கடி, தமிழ் சினிமா பக்கமும் வாங்க துல்கர். உங்க தயவில் சில நல்ல படங்களும் தமிழுக்கு வரட்டும்.

படத்தின் இரண்டாவது கதாநாயகன் என ரக்ஷனைச் சொல்லலாம். படம் முழுவதும் அவர் அடிக்கடி அடிக்கும் டைமிங் வசனங்கள் ரசிகர்களைச் சிரிக்க வைக்கும். டிவியிலேயே இயல்பாகப் பேசி ரசிக்க வைத்தவர், அதே பாணியை சினிமாவிலும் கடைபிடித்திருக்கிறார். சந்தானம் இல்லாத தமிழ் சினிமா நகைச்சுவைக்கு சரியான வரவு. ஆனாலும், சில வருடங்கள் கழித்து இவருக்கும் நாயகன் ஆசை வரலாம், யார் கண்டது ?.

ரித்து வர்மா, ஆரம்பத்தில் இருந்து ஐயோ பாவமாக நடித்திருக்கிறார். இவருக்குப் பின்னால் இப்படி ஒரு கதை இருக்கிறது என்பதைத் தெரிய வரும் போது நமக்கும் பேரதிர்ச்சி. அப்படி ஒரு டிவிஸ்ட்டை இவர் கதாபாத்திரத்தில் இயக்குனர் வைத்திருப்பார் என்பதை துளி கூட யூகிக்க முடியாது.. இந்தப் படத்தில் கிடைக்கும் வரவேற்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், நயன்தாராவுக்கும் சரியான டப் கொடுக்கலாம்.

இரண்டாவது கதாநாயகியாக நிரஞ்சனி அகத்தியன். நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றம். கொஞ்சம் முறைப்பான கதாபாத்திரம். புல்லட் எல்லாம் ஓட்டி அசத்துகிறார். அக்கா விஜயலட்சுமி சினிமாவில் விட்ட இடத்தை இவராவது பிடிக்க வாழ்த்துகள்.

டிசிபி ஆக கவுதம் மேனன். இவருக்குள் இப்படி ஒரு நடிப்பா என ஆச்சரியப்பட வைக்கிறார். போலீஸ் கதாபாத்திரம் என்றால் எப்படி அறிவாளியாக யோசிக்க வேண்டும், கடமை தவறாமல் இருக்க வேண்டும் என்பதைக் காட்டியிருக்கிறார் கவுதம். ஆனால், அவருக்குள்ளும் அப்படி ஒரு ஏமாற்றம், சபலம் இருக்கிறது என்பது தெரிய வரும் போது தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது. இனி, கவுதம் மேனனை படம் இயக்காத அளவிற்கு நடிக்க வைத்துவிடுவார்கள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

படத்தின் அசத்தலே அதன் மேக்கிங் தான். ஒளிப்பதிவாளர் பாஸ்கரன், ஹர்ஷவர்தன், ரமேஷ்வர் இருவரின் பின்னணி இசை படத்தை வேறு ஒரு தளத்தில் காட்டுகிறது.

படத்தின் ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன. இதெல்லாம் இருந்தால்தானே தமிழ் சினிமா. ஆனால், அதையெல்லாம் மறக்க வைத்து நம் கண்களை கொள்ளையடித்து விடுகிறார்கள்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் - காதல் கொள்ளையர்கள்

 

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓