சிவகுமாரின் சபதம்
விமர்சனம்
தயாரிப்பு - இன்டி ரிபெல்ஸ்
இயக்கம், இசை - ஹிப்ஹாப் தமிழா ஆதி
நடிப்பு - ஹிப்ஹாப் தமிழா ஆதி, மாதுரி ஜெயின்
வெளியாகும் தேதி - 30 செப்டம்பர் 2021
நேரம் - 2 மணி நேரம் 19 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5
தமிழ் சினிமாவில் விவசாயிகளின் பிரச்சினைகளை மையப்படுத்திதான் சமீப காலங்களில் அதிகமான படங்கள் வந்துள்ளன. ஆனால், விவசாயத்தைப் போலவே தமிழகத்தில் மற்றொரு முக்கிய தொழிலான நெசவுத் தொழிலை மையமாக வைத்து படங்கள் வந்ததேயில்லை. அந்தக் குறையை இந்தப் படம் மூலம் தீர்த்து வைத்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
பட்டுப்புடவை என்றாலே காஞ்சிபுரம் பட்டுப்புடவைக்குத்தான் தனிச்சிறப்பு. ஆயிரம் முதல் பல லட்சம் வரை உள்ள காஞ்சிபுரம் பட்டுப்புடவையை நெய்ய பல நெசவாளர் குடும்பங்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன. அவர்களில் ராஜபட்டு என்ற ராஜாக்களுக்கும், கடவுளுக்கும் பட்டுப்புடவை நெய்யும் நெசவாளர் குடும்பம் ஒன்றின் கதையாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் ஆதி.
ராஜபட்டு நெய்யும் பாரம்பரியமிக்க பட்டு நெசவாளர் இளங்கோ குமணன். அவரது பேரன் ஆதி மீது அதிக பாசம் வைத்துள்ளவர். தாத்தா உடனே வளர்பவர் ஆதி. காஞ்சிபுரத்தில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஆதியை அவரது சித்தப்பா ராகுல், தன்னுடைய மாமனார் விஜய் கார்த்திக்கின் சில்க்ஸ் நிறுவனத்தில் வேலை கற்றுக் கொள்ள அழைத்துச் செல்கிறார். விஜய் கார்த்திக்கின் தங்கை மகள் மாதுரியை தனது கல்லூரி காலத்திலிருந்தே காதலித்தவர் ஆதி. மாதுரியை விஜய் கார்த்திக்கின் மகனும் காதலிக்க அதனால் பிரச்சினை ஏற்படுகிறது. தனது மாப்பிள்ளை ராகுலையும், ஆதியையும் தனது வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார் விஜய் கார்த்திக். அவரிடம் சபதம் போட்டு வருகிறார் ஆதி. அவர் என்ன சபதம் போட்டார், அதன்பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் இடைவேளை வரை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் படம் நகர்கிறது. அதன்பிறகு முழு நீள குடும்பக் கதையாகப் படம் மாறிவிடுகிறது. காதல், காமெடி, ஆக்ஷன் என இரண்டரை மணி நேரப் படத்தையும் என்டர்டெயின்மென்ட்டாக மட்டுமே தர வேண்டும் என நினைத்திருக்கிறார் இயக்குனர் ஆதி.
கலகலப்பான ஒரு பேரன் கதாபாத்திரத்தில் நடிகர் ஆதி ஏமாற்றவில்லை. பட்டர்பிளை மண்டை, முறுக்கு மீசை, பூ போட்ட சட்டை என இந்தக் காலத்து இளைஞர்களுக்கு என்ன பிடிக்குமோ அதைத் தெரிந்து வைத்துக் கொண்டு தனது கதாபாத்திரத்தை அமைத்துள்ளார். காதல், காமெடி, பாசம், ஆக்ஷன் என கலந்துகட்டி அடித்திருக்கிறார்.
ஆதியின் காதலியாக புதுமுகம் மாதுரி. வழக்கமான கதாநாயகிகள் போல காதலிப்பதை மட்டும் வேலையாக வைத்திருக்கிறார். இளம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பூட்ட பபிள்கம் காட்சியை இவருக்காகவே அமைத்திருக்கிறார்கள். நடிப்பில் இன்னும் தேற வேண்டும்.
படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்குமே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ஆதியின் தாத்தாவாக இளங்கோ குமணன். காஞ்சிபுரத்தில் ஒரு வயதான நெசவாளர் எப்படி இருப்பாரோ அப்படியே இருக்கிறார். நெற்றியில் விபூதி, வேட்டி, சட்டை, அமைதியான, பாசமான முகம் என இருக்கும் இவரை இனி தமிழ் சினிமாக்களில் அடிக்கடிப் பார்க்கலாம்.
படத்தில் வில்லனும் இருக்கிறார், வில்லியும் இருக்கிறார். சந்திரசேகரன் சில்க்ஸ் என்ற பெரிய நிறுவனத்தின் முதலாளியாக விஜய் கார்த்திக். அவரது தங்கையாக ரஞ்சனா நாச்சியார். இருவரும் வில்லத்தனத்தை சரியாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.
ஆதியின் சித்தப்பாவாக பிரான்க்ஸ்டர் ராகுல், காட்சிக்குக் காட்சி விதவிதமாக நடிக்கிறார். ஆதியின் நண்பனாக கதிர். இருவரும் சில காட்சிகளில் சிரிக்க வைத்தாலும், சில காட்சிகளில் பொறுமையை சோதிக்கிறார்கள்.
ஆதியின் இசையில் பாடல்கள் அடிக்கடி வருகின்றன. ஏதோ ஒரு காட்சியில் நாயகனும், நாயகியும் கொஞ்ச ஆரம்பித்தாலே, ஐயோ பாட்டு வந்துவிடுமோ என்று பதற வைக்கிறது. பாடல் வரிகள் எதுவும் ஞாபகம் வரவில்லை, இருந்தாலும் தியேட்டரில் பாடல்களைப் பார்க்கும் போது ஒரு புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
காஞ்சிபுரம், சென்னை ஆகிய இடங்களில்தான் கதை அதிகம் நகர்கிறது. ஆனால், இரண்டே இரண்டு வீட்டை மட்டும் காட்டிவிட்டு கதையை முடித்துவிடுகிறார்கள். ஒரு தெருவைக் கூட முழுமையாகக் காட்டவில்லை.
நெசவாளர்கள் பற்றிய படம் என்று சொல்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு வசனத்தில் மட்டும் நெசவாளர்களின் பிரச்சினையைப் பற்றி ஆதி ஒரு வரி வசனம் பேசுவதுடன் அவர்களது பிரச்சினையை பேசிவிட்டதாக நினைத்துவிட்டார் போலும். நுனிப்புல் மட்டுமே மேய்ந்திருக்கிறார். அவர்களின் பிரச்சினைகளை ஆழகமாகச் சொல்லவேயில்லை. ஒரு காட்சியின் எமோஷனலை உணர்வதற்குள் அடுத்த காட்சிக்கு ஜம்ப் ஆகிவிடுகிறார்கள். அதனால் விட்ட குறை தொட்ட குறையாகவே படம் முழுவதும் நகர்கிறது.
சிவகுமாரின் சபதம் - சப்தம்
சிவகுமாரின் சபதம் தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
சிவகுமாரின் சபதம்
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்