மீசைய முறுக்கு
விமர்சனம்
ஹிப் ஹாப் தமிழா ஆதி, கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கமும் செய்து, கதாநாயகராகவும் நடிக்க, அவருடன் ஆத்மிகா, விவேக், விஜயலட்சுமி, ஆர்.ஜே., மா.கா.பா.ஆனந்த், கஜராஜ், விக்னேஷ்காந்த், மாளவிகா, ஷா ரா, குகன், முத்து, ஆனந்த், ஹரிஹரன் கிருஷ்ணா, பென்னி அன்பு தாசன், வினோத், பூவேந்தன்... ஆகிய ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த, தெரியாத முகங்களும் நடிக்க, நடிகர் & இயக்குநர் சுந்தர்.சியின் "அவ்னிமூவிஸ்" பேனரில் நிறைய லவ் நிறைய காமெடி, நிறைய சென்டிமென்ட், கொஞ்சம் மெஸேஜ், கொஞ்சம் டிராஜிடி.... என அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் ஜனரஞ்சகமாக வந்திருக்கும் படம் தான் "மீசையமுறுக்கு.."
நடுத்தர வர்கத்து பேராசிரிய தம்பதிகளின் மூத்த வாரிசு நாயகர் ஆதி எனும் ஆதித்யா. பெற்றோரின் விருப்பத்திற்காக பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்தாலும், தனது விருப்பமான இசையில் சாதிக்கத் துடிக்கிறார். இந்நிலையில், தன்னுடன் சிறு வயதில் ஒரே பள்ளியில் படித்த நிலா எனும் ஆத்மிகாவும் அதே கல்லூரியில் வேறு வகுப்பில் படிப்பது கண்டு அவர் மீது காதல் கொள்கிறார். அம்மணியும் ஆதி மீது அதே அளவு மையல் கொள்ள, முதல்வருடம், இரண்டாம் வருடம், சீனியர், ஜுனியர், ரேகிங், ஜாகிங், கலர்புல் கல்சுரல்ஸ், வெவ்வேறு டிபார்ட்மென்ட் ஈகோ மோதல்கள்... என எல்லாம் கடந்து நான்கு ஆண்டுகளாக ஊடலும், கூடலுமாய் பூத்துக் காய்த்து, காயப்பட்டும் கசிந்துருகிய இவர்களது காதல், கல்லூரி இறுதி ஆண்டு முடிந்ததும், ஆத்மிகாவின் வசதியான குடும்ப பின்னணியினாலும், ஆதியின் இசை லட்சியத்தாலும், ஏகப்பட்ட இன்னல்களை சந்தித்து, இறுதியில் திருமண பந்தத்தில் திளைத்ததா? அல்லது திக்கு தெரியாது சிதைந்து போனதா..? என்பதை திக் திக் திக் கிளைமாக்ஸில் ரசிகர்கள் எதிர்பாராத விதத்தில் சிறப்பாக சொல்லியிருக்கின்றனர் பேஷ், பேஷ்!
ஆதி எனும் ஹிப் ஹாப் தமிழா ஆதித்யா, வம்பு சண்டைக்கு போகாத வந்த சண்டையை விடாத கல்லூரி மாணவராக, ஒரு நடிகராக இவரிடம் எதிர்பார்த்ததற்கு மேலாகவே கலக்கியிருக்கிறார். அதிலும், "எல்லா பசங்களுக்கும் அப்பா ஹீரோ, எங்கப்பா எனக்கு சூப்பர் ஹீரோ" என்பதில் தொடங்கி, "நீங்கள்ளாம் சொந்தக்காரங்களால நிக்கிறீங்க... நாங்கல்லாம் சொந்தக் கால்ல நிக்கிறவங்க..." என தன்னையும் தன் இசை முயற்சியையும் கேவலப்படுத்தும் மேல்தட்டு வர்க்க வாலிபனை வார்த்தைகளாலேயே போட்டுத் தாக்குவதில் தொடர்ந்து, "பாதி வெற்றி நம்ம நம்பிக்கையிலன்னா மீதி வெற்றி நம்ம நண்பர்கள் கையில்..." என்றெல்லாம் சொல்லியபடி, தோத்தாலும் ஜெயித்தாலும் "மீசையமுறுக்கு" எனும் தன் தந்தையின் வாக்கையே வேதவாக்காக்கிக் கொண்டு மீசையை முறுக்கியபடி கட்டிளங்காளையாக தெரியும் ஹிப் ஹாப் ஆதி ஹாசம்.
நிலாவாக கதாநாயகியாக அதிக அலங்காரம், ஆடம்பரமில்லாத ஆத்மிகா, நடிப்பில் நல்ல அசத்தலக்கா... அயித்தலக்கா. "ஜாதி, மதம்னு ஏற்றத்தாழ்வு நிரம்பிய இந்த ஊருல பிறந்தது தான் தப்பு..." என நிஜம் பேசி நாயகர் உடனான காதலை சூழல் கருதி விலக்கிக் கொள்ளும் காட்சியில் சீனியர் நடிகைகளுக்கே சவால் விடும் விதத்தில் ஆத்மார்த்தமாய் வெளுத்து வாங்கயிருக்கிறார் அம்மணி ஆத்மிகா. வாவ்!
தோத்தாலும் மீசையை முறுக்க சொல்லி வளர்க்கும் விவேக், அவரது அன்பு மனைவியாக ஆதியின் அம்மாவாக விஜயலட்சுமி, இந்தப் படத்திலும், ரேடியோ ஜாக்கியாகவே வரும் ஆர்.ஜே.மா.கா.பா.ஆனந்த், நாயகியின் சித்தப்பா கஜராஜ், நாயகரின் நண்பர் ஜீவா - விக்னேஷ் காந்த், நாயகியின் தோழி மனிஷா - மாளவிகா, நண்பர்கள் பாலாஜி - ஷா ரா, அருண் - குகன், நிர்மல் - முத்து, அஸ்வின் - ஆனந்த், ஹரிஹரன் கிருஷ்ணா, பென்னி அன்பு தாசன், வினோத், பூவேந்தன்... ஆகிய அத்தனை முகங்களும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
குரு ராஜின் கலர்புல் கலை இயக்கம் கொஞ்சமே என்றாலும் தளபதி தினேஷின் தரமான சண்டை பயிற்சி, பென்னி ஆலிவரின் பக்கா படத்தொகுப்பு, புதுசு கீர்த்தி வாசன் & பழசு யு.கே.செந்தில்குமார் இருவரது எழில் கொஞ்சும் ஒளிப்பதிவு உள்ளிட்வை படத்திற்கு பக்கா பலம் .
அதே மாதிரி ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல்கள் மற்றும் இசையில், "வாடி நீ வா...", "கிரேட் ஜீ..." , "மாட்டிக் கிச்சி..." , "மச்சி எங்களுக்கு...", "என்ன நடந்தாலும்...", "சக்கரகட்டி..." ஆகிய பாடல்கள் இப்படக்கதைக்கேற்ற சுபராகங்கள்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி, முதன்முதலாக கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கமும் செய்து கதாநாயகராகவும் நடித்து இருக்கும் இப்படத்தில் தன் சொந்த கதை சோகக்கதையை கரம் மசாலா கலந்து, நேர்மையாக அதே சமயம் ரசனையாக தந்திருப்பதில் எக்கச்சக்கமாக ஜெயித்திருக்கிறார்.
சில பல காட்சி பிழைகள், ஒரு சில லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே தென்பட்டாலும், "இங்கிலீஷ் மீடியம்னா, இங்கிலீஷ் வழிக் கல்வி, நாமெல்லாம் இங்கிலீஷ் பேசினாலும் தமிழன் தான்..." என பொட்டில் அறையும் படி நிஜம் பேசும் வசனங்களும், காதல் "பன்ச்"களும், "பல பேர் வாழ்க்கைக்காக கனவை தொலைக்கிறான்... சில பேர் கனவுக்காக வாழ்க்கையையே தொலைக்கிறான" என்பது உள்ளிட்ட தத்துவார்த்த "பன்ச்"களும் ஆதியின் எழுத்து இயக்கத்தில் இப்படத்திற்கு மேலும், வலு கூட்டுகின்றன.
ஆக மொத்தத்தில், ஜெயித்தாலும், தோத்தாலும் மீசையமுறுக்கி விட்டுக் கொள்ள வேண்டும் என போதித்திருக்கும் "மீசையமுறுக்கு - நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகனுக்கும் பிடித்திருக்கு... எனும் அளவிற்கு வெற்றி பெறும்... என நம்பலாம்!"
மீசைய முறுக்கு தொடர்புடைய செய்திகள் ↓
பட குழுவினர்
மீசைய முறுக்கு
- நடிகர்
- நடிகை
- இயக்குனர்