கொம்புவச்ச சிங்கம்டா,KombuVatcha Singamda

கொம்புவச்ச சிங்கம்டா - சினி விழா ↓

Advertisement
2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - ரெதான் த சினிமா பியூப்புள்
இயக்கம் - எஸ்ஆர் பிரபாகரன்
இசை - திபு நினன் தாமஸ்
நடிப்பு - சசிகுமார், மடோனா செபாஸ்டியன், சூரி
வெளியான தேதி - 13 ஜனவரி 2021
நேரம் - 2 மணி நேரம் 31 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதைகளின் மீதான எதிர்காலம் வரவர கேள்விக்குறியாகிவிட்டது. ஒரே விதமான டெம்ப்ளேட்டில் படங்களை எடுக்கிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது.

சசிகுமார் நடித்த 'சுந்தரபாண்டியன்' என்ற ரசிக்கத்தக்க கிராமத்துப் படத்தைக் கொடுத்த இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள படம் இது. பத்து வருடங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட படத்தைக் கொடுத்துவிட்டு அதில் பாதியளவு கூட இல்லாத படமாகவே இந்தப் படம் இருக்கிறது.

இந்தப் படத்தில் சாதிப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர். சசிகுமார் சிறு வயதிலிருந்தே சாதி வித்தியாசம் இல்லாமல் அனைவருடனும் பழகுபவர். அவருடைய நட்பு வட்டமும் அப்படித்தான் இருக்கிறது. ஊரில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனது வருங்கால மாமனார் வெற்றி பெற அவர் ஆதரவு தெரிவித்ததால் அவரது நட்பு வட்டம் பிரிகிறது. தேர்தலுக்குப் பின் நடக்கும் தகராறில் அவரது வேற்று சாதி நண்பன் கொல்லப்படுகிறார். சசிகுமாரும், அவரது சாதி நண்பர்களும் கைது செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் வெளியில் வந்தாலும், பழி வாங்கும் செயலாக சசிகுமாரின் முஸ்லிம் நண்பர் கொல்லப்படுகிறார். அடுத்து கொலைகள் நிகழும் முன் அதைத் தடுக்க முயற்சிக்கிறார் சசிகுமார். அவரது முயற்சியில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

சசிகுமாருக்கென்றே உருவாக்கப்பட்ட கதை, கதாபாத்திரம் என படத்தின் ஆரம்பத்திலேயே புரிந்து விடுகிறது. அவரும் அதற்குள் பர்பெக்ட்டாக உட்கார்ந்துவிடுகிறார். இருந்தாலும் இன்னும் எத்தனை படத்தில்தான் இப்படியே நடித்துக் கொண்டிருப்பார் என்ற கேள்வியும் வருகிறது. கொஞ்சம் மாத்தி யோசிங்க சசி.

கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன். படத்தில் இவருக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. சசியும் இவரும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் கூட மிக மிகக் குறைவுதான்.


சசிகுமாருடன் எப்போதுமே இருக்கும் நண்பனாக சூரி. ஹரிஷ் பெரடி, இப்படத்தின் தயாரிப்பாளர் இந்தர் குமார் இருவருக்குமிடையேதான் தேர்தல் போட்டி, சண்டை என நடக்க, இவர்கள்தான் மெயின் வில்லன் என நாம் நினைத்தால் அதில் கிளைமாக்சில்தான் மெயின் டிவிஸ்ட் வைத்திருக்கிறார்கள். சசிகுமாரின் அன்பான அப்பாவாக மறைந்த இயக்குனர் மகேந்திரன். சசிகுமாரின் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் இயல்பாக நடித்திருக்கிறார்கள். மற்றும் ஒரு சில காட்சிகளில் வந்து போகும் நடிகர்கள், நடிகைகள் என ஒரு பட்டியலே இருக்கிறது.

திபு நினன் தாமஸ் இசையில் ஒரே ஒரு பாடல் மட்டும் கேட்க வைக்கிறது. கிராமத்துப் படம் என்றாலே சில ஒளிப்பதிவாளர்கள் தனி கவனத்துடன் படமாக்குவார்கள். அதில் அனுபவசாலியான என்கே ஏகாம்பரம் கதைக்குள்ளேயே காட்சிப் பதிவை அமைத்திருக்கிறார்.


சாதி, மதமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கும் இன்றைய தலைமுறையினருக்கு அதில் ஊறியவர்களால் வரும் சிக்கல்களைச் சொல்லியிருக்கும் படம். ஆனாலும், பல காட்சிகள் சாதிப் பெருமை பேசுகிறது. சாதிப் பெருமையைச் சொல்லி சாதி வேண்டாம் என்கிறார்கள்.

கொம்பு வச்ச சிங்கம்டா - சீவாத கொம்பு

 

பட குழுவினர்

கொம்புவச்ச சிங்கம்டா

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓