தினமலர் விமர்சனம் » இது கதிர்வேலன் காதல்
தினமலர் விமர்சனம்
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், கதாநாயகராக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இது கதிர்வேலன் காதல்! தாத்தா கலைஞர் கருணாநிதி எனும் கே.கே. என்பதாலோ என்னவோ தான் நாயகராக நடிக்கும் படங்களில் எல்லாம் டைட்டிலில் இரண்டு கே வருவது மாதிரி பார்த்துக் கொள்ளும் சென்டிமெண்டில் இருப்பார் போலும் உதயநிதி! அந்த சென்டிமெண்ட்டும், கதிர்வேலன் காதலும் உதயநிதிக்கு கை கொடுத்திருக்கிறதா? பார்ப்போம் இனி...
கதைப்படி, மதுரை பக்கத்து பெரிய இடத்துப்பிள்ளை உதயநிதி, ஐந்தாங்கிளாஸ் படிக்கும் காலத்தில் இருந்தே தீவிர ஆஞ்சநேயர் பக்தர்! பெண் வாடையே பிடிக்காதவர். ஆனால் அவரது தோஸ்த் சந்தானத்திற்கு காதல், பெண்கள்... என்றால் கொள்ளை இஷ்டம்! ஆனால் உதயநிதியின் ஆஞ்சநேய அவதாரங்களால் தன் காதலிகளை இழக்கும் சந்தானம், உதயநிதியின் சங்காத்தமே வேண்டாம் என கோயமுத்தூர் பக்கம் நவீனமாக கொழுப்பை குறைக்கும் லேகியம் விற்க போய்விடுகிறார். அதேநேரம் உதயநிதியின் உடன்பிறந்த அக்கா சாயாசிங்கும், கோயமுத்துக்காரர் பரத்ரெட்டியை காதலித்து கரம்பிடித்து கோவையில் செட்டிலாகிறார்.
புருஷனுடன் சின்ன ஊடலில் ஊருக்கு வந்திருக்கும் சாயா சிங் விஷயத்தில், காதல் திருமணம் என்பதால் உதயநிதியின் தந்தை நரேன் பட்டுக்கொள்ளாமல் இருக்க, அக்காவை மாமாவுடன் சேர்த்து வைக்க பிஸினஸ் விஷயமாக சேலம் போவதாக சொல்லிவிட்டு கோயமுத்தூர் போகின்றார் உதயநிதி!
அங்கு தன் அக்கா வீட்டு, எதிர்வீட்டு தேவதை நயன்தாராவை பார்த்து ஆஞ்சநேயர் பக்தர் அவதாரத்தை உதறிதள்ளும் உதயநிதி, நண்பர் சந்தானத்துடன் சேர்ந்து கொண்டு அம்மணியை கலாய்ப்பதும், பின் காதலிலும் விழுகிறார். அப்புறம்? அப்புறமென்ன.? நயன்தாராவின் நண்பர் என்று சொல்லிக்கொண்டு அவரை அடையத்துடிக்கும் நட்பு துரோகியின் முகத்திரையை நயன்தாராவுக்கு கிழித்துகாட்டி அவரிடம் நல்லபெயர் எடுக்கும் உதயநிதி மீது நயன்தாராவுக்கும் காதல் வருவதும், அந்த காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்று கொண்டனரா? இல்லையா.? என்பதும் தான் வித்தியாசமும், விறுவிறுப்புமான இது கதிர்வேலன் காதல் படத்தின் மிச்ச, சொச்ச கதை!
கதிர்வேலனாக உதயநிதி ஸ்டாலின் கூலிங்கிளாஸூம், எக்ஸ்பிரஸனுமாக ஒருமாதிரி சமாளித்து இருக்கிறார். நயன்தாராவுடனான காதல் காட்சிகளைக் காட்டிலும் அப்பா நரேன், அக்கா சாயாசிங், மாமா பரத்ரெட்டி, தோஸ்த் சந்தானம் இவர்களுடைய காம்பினேஷன் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார் உதயநிதி! நயன்தாரா ஜோடி என்றதும், உதயநிதியின் ஓரிஜினல் வூட்டுக்காரம்மா ஏகப்பட்ட கண்டிஷன்களைப் போட்டு உதயநிதியை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பியிருப்பாரோ? எனும் சந்தேகத்தை கிளப்புகிறது நயன்தாரா - உதயநிதி காதல் காட்சிகளில் உதயநிதியின் எக்ஸ்பிரஷன் மற்றும் வைபிரேஷன்கள்! இதையெல்லாம் மீறி, அப்பா நரேனிடம் க்ளைமாக்ஸில், எல்லா பிள்ளைகளும் தங்கள் மனதில் காதல் மலர்ந்ததும் அப்பா, அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறோம், ஆனால் எத்தனை பெற்றோர் பிரண்ட்ஸாக பழகுகிறீர்கள்? கெளரவம், அது, இது... என்று காதலுக்கு எதிர்ப்பு தானே சொல்கிறீர்கள்... என ஒட்டுமொத்த காதலர்கள் சார்பாக உருகும்போது உதயநிதிக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லத் தோன்றுகிறது! வாவ்!!
நயன்தாரா வழக்கம்போலவே பவித்ரா எனும் அழகு பதுமையாக வந்து முதுமை நிரம்பியவர்களையும் உசுப்பேற்றுகிறார்.
மயில்வாகணன் சந்தானம் தான் கதிர்வேலனின் காமெடி, கமர்ஷியல் வாகனம். எதுக்கு நீ சண்டைக்கு போற பாக்யராஜ் மாதிரி வாட்ச், மோதிரத்தை எல்லாம் கழட்டி வக்கிற...? என கேட்பதில் தொடங்கி எல்லா பெண்களும், சூர்யா மாதிரி பையன் வேணும் தான் பார்ப்பாங்க... ஆனால் கடைசியில ஏரியா பையனுக்கு தான் உஷாராவாங்க... என இந்தக்காலத்து இளம் பெண்களை வம்புக்கு இழுப்பது வரை... சீனுக்கு சீன் தியேட்டரை அதிர விடுகிறார்!
நரேன், ஜெயப்பிரகாஷ், சுந்தர், பரத், முருகதாஸ், சரண்யா பொன்வண்ணன், சாயாசிங், வனிதா, கலாகல்யாணி, நீது நீலாம்பரன் எல்லோரும் தங்கள் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு, ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் கதிர்வேலன் காதலை மேலும் பலமாக்குகின்றன.
அடிக்கடி உதயநிதி 5-ங்கிளாஸில் இருந்து ஆஞ்சநேயர் பக்தர் என்பதும், சாயாசிங் ஊரிலிருந்து, உதயநிதிக்கு அடிக்கடி போனில் எதிர்வீட்டுப் பெண்ணை பார்த்துடாத... என்பது, உள்ளிட்ட ஒருசில குறைகள் இருந்தாலும், எஸ்.ஆர்.பிரபாகரனின் இயக்கத்தில், இது கதிர்வேலன் காதல் - ஓ.கே.!
மொத்தத்தில்,
உதயநிதியின் - ஓ.கே. ஓ.கே., அளவு இல்லாவிட்டாலும் கதிர்வேலன் காதல் - ஓ.கே., எனும் அளவில் இருப்பது ஆறுதல்!!
------------------------------------------------------------------
நமது தினமலர் இணையதளத்தின் சினிமா பகுதியில், பல படங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. சில வாசகர்கள் தங்களது பிளாக்குகளில் திரைப்படங்களின் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வாசகர்களின் விமர்சனங்களும் தினமலர் இணையதள சினிமா பகுதியில் இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்...
வாசகர் சி.பி.செந்தில் குமாரின் விமர்சனம்
அவரது பிளாக் முகவரி : www.adrasaka.com
பொதுவா பொண்ணுங்க பொசுக் பொசுக்னு புருஷன் கிட்டே கோவிச்சுக்கிட்டு உப்பு பெறாத விஷயத்துக்கு எல்லாம் அம்மா வீட்டுக்கு வந்துடுவாங்க. ஹீரோவோட அக்கா தன் வீட்டை எதிர்த்து செஞ்சுக்கிட்ட லவ் மேரேஜ்லயும் சின்ன விஷயத்துக்கு கோவிச்சுக்கிட்டு மதுரையில் இருக்கும் அம்மா வீட்டுக்கு வர அக்கா வீட்டுக்காரரை சமாதானப்படுத்த கோவை போறாரு ஹீரோ.
எதிர் வீட்டில் ஹீரோயின். பார்த்ததும் கட்டுனா இவளைக்கட்டனும், இல்லைன்னா கட்டினவன் காலைத் தொட்டுக்கும்பிடனும்னு முடிவு பண்ணி ரூட் விட்டுட்டு இருக்காரு. ஹீரோயின் கூடவே ஒரு ஃபிரண்ட் கழுகு மாதிரி சுத்திட்டு இருக்கான். எப்போடா சான்ஸ் கிடைக்கும்னு அவன் வெயிட்டிங்க் . ஹீரோ அவனைப்பத்தி எச்சரிச்சும் ஹீரோயின் நம்பலை. பொதுவா பொண்ணுங்க நல்லவனை நம்பமாட்டாங்க. இவங்க 2 பேர் காதல் சக்சஸ் ஆச்சா? என்பதை காமெடி, ஃபேமிலி செண்டிமெண்ட்ஸ் கலந்து சொல்லி இருக்காரு சுந்தர பாண்டியன் இயக்குநர்.
ஹீரோவா உதயநிதி ஸ்டாலின். இவர் தான் தயாரிப்பாளரும் கூட. இவர் கிட்டேப்பிடிச்சதே தான் ஒரு தயாரிப்பாளரா இருந்தும் கூட இந்த பஞ்ச் டயலாக் , ஓப்பனிங்க் பில்டப் சீன் எல்லாம் வைக்காம எதார்த்தமான கேரக்டர்ல வருவது தான் . சபாஷ் . முதல் படத்தை விட நல்ல முன்னேற்றம் . பாடல் காட்சிகளில் நடன அசைவுகளில் சமாளிக்கிறார். டயலாக் டெலிவரியும் ஓக்கே. சில காட்சிகளில் காமெடி கூட ட்ரை பண்ணி இருக்காரு .
ஹீரோயின் நயன்தாரா. மாமழை போற்றும், பல மாநிலம் ஏற்கும், மாநிற அழகி. குடும்பப்பாங்கான தோற்றத்தில் யாரடி நீ மோகினியில் வந்தவர் அதே பாணியில் கண்ணியமாக வந்து போகிறார். நடிப்புக்கான ஸ்கோப் கம்மி என்றாலும் வந்தவரை ஓக்கே. பாடல் காட்சிகளில் கோடம்பாக்க விதிகளின்படி கிளாமர் டிரஸ் .
ஹீரோவுக்கே உண்டான பில்டப்புடன் அரங்கம் அதிரும் கரகோசத்துடன் ஓப்பனிங்க் சாங்குடன் வரும் சந்தானம். இதில் வழக்கம் போல் ஹீரோவுக்கு நண்பன். காதலுகு ஐடியா குடுக்கும் ஐடியா அய்யா சாமி. ஓக்கே ஓக்கே வில் 117 ஜோக்குகளுடன் கலகலப்பு ஊட்டியவர் இதில் 47 ஜோக்ஸ் உடன் நிறுத்திக்கொண்டதுக்கு காரணம் இயக்குநர் ஃபேமிலி எண்ட்டிமெண்ட்ஸ்க்கு காட்சிகள் ஒதுக்கியதே . இவருக்கு ஒரு ஜோடியும் உண்டு. தமிழ் சினிமாவின் எழுதப்படாத விதிகளின் படி ஹீரோயின் தோழியாக வரும் கேரளா பொண்ணு ஹீரோயினை விட அழகாக இதிலும் இருக்கார் . இவர் சந்தானத்துக்கு ஜோடி . இவர்களுக்கு ஒரு பாட்டு சீன் வெச்சிருக்கலாம் , ஜஸ்ட் மிஸ்டு மயில் சாமி க்ளைமாக்ஸ் டிராமா மிமிக்ரிக்கு வர்றார் . ஓக்கே .
படத்தில் வரும் கேரக்டர் ரோல்ஸ் எல்லாரும் நல்லா பண்ணி இருக்காங்க . குறிப்பா சரண்யா வெரிகுட்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசை மெலோடி சாங்க்ஸ் ஆக போட்டிருக்கார். எல்லாம் ஓக்கே . ஆனா பின்னணி இசை ரொம்ப சாதாரணமா இருக்கு . ஒளிப்பதிவு கண்ணுக்குக்குளுமை . கதைக்களம் கோவை , மதுரை என்பதால் பரிச்சயமான இடங்களைப்பார்ப்பது கொங்கு மண்டல ரசிகர்களுக்குப்பிடிக்கும்
ஒரு பாடல் காட்சியில் (அன்பே அன்பே..) தாமரைக்குளத்தில் தாமரை இலை மீது சிட்டுக்குருவி நிற்பது கண் இமைக்கும் நேரத்தில் மின்னி மறையும் ஓவியக்காட்சி , பிரமாதம்
சி.பி.கமெண்ட் - இது கதிர்வேலன் காதல் - ஓகே ஓகே - 2 + செண்ட்டிமெண்ட்ஸ், சராசரிக்காதல் கதை. லேடீஸ்க்குப்பிடிக்கும்!
------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
ஒரு சாதா காதல் கதை. அக்கா வீட்டுக்கு ஒரு பஞ்சாயத்துக்குச் செல்லும் உதயநிதிக்கு எதிர் வீட்டுப் பெண் நயன்தாரா மேல் காதல் வருகிறது. அக்கா புருஷனுக்கும், நயன்தாரா வீட்டுக்கும் சண்டை. அப்பா வேறு காதலுக்கு எதிரி. அப்புறம் என்ன? சில பல சீன்ஸ் போட்டு, டும்! டும்! டும்! இயக்கம் பிரபாகரன்.
உதயநிதிக்கு மாட்டிக் கொண்டு விழிக்கும் வேடம் நன்றாக வருகிறது. நடனத்தில் முன்னேற்றம் காட்டியிருக்கிறார்.
நயன்தாரா வயது ஏற ஏற அழகு கொஞ்சுகிறது. எல்லாப் பாடல்களிலும் புன்னகைத்துக் கொண்டேயிருப்பது க்யூட்...
வழக்கம்போல் காதலுக்கு ஐடியா தர சந்தானம்! "புண்ணாக்கு வேணும்னா எருமையா இருக்கணும். பொண்ணு வேணும்னா பொறுமையா இருக்கணும் போன்ற பஞ்ச் டயலாக்குகளை உதிர்க்கும்போது சிரிக்கிறார்கள். "உனக்கு எமோஷன்ஸ் எல்லாம் வராது, கூலிங் கிளாஸ் போட்டுக்க என்று உதயாவையும் வாருகிறார். சந்தானத்துக்கு பேண்ட் செலக்ஷன் செய்தவருக்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைக்கும்!!
ஹாரிஸின் பாடல்கள், சு(ம்)மார்!
வில்லன் ஓகே!
இரண்டு வீட்டு சண்டையை மயில்சாமியின் மிமிக்ரி மூலம் தீர்த்து வைப்பதெல்லாம் ரொம்ப போங்கு!
இது கதிர்வேலன் காதல் - ஜாலியான மேடை நாடகம்!
குமுதம் ரேட்டிங் - ஓகே.,----------------------------------------------------------------
கல்கி சினி விமர்சனம்
ஆஞ்சநேய பக்தன் காலில் அப்பீட் ஆவதுதான் கதை. வழக்கமான காதல் + காமெடியோடு, கொஞ்சம் அப்பா பாசத்தை அள்ளித் தெளித்தால் இது கதிர்வேலன் காதல் ரெடி. படம் தொடங்கி, இருபது நிமிடத்துக்குப் பிற்பாடுதான். உதயநிதியும், நயன்தாராவும் மோதிக் கொள்கிறார்கள். "ஒரு கல் ஒரு கண்ணாடியில் தவறவிட்ட டான்ஸ் ஸ்டெப்புகளை இங்கே ஒழுங்காகப் போடுவது ஒன்றே உதயநிதியின் முக்கிய முன்னேற்றம். மற்றபடி, சந்தானம் சொல்வது போல், ரியாக்ஷன் காட்டத் தெரியாமல், கருப்புக் கண்ணாடிக்குள் முகத்தை மறைத்துக் கொள்கிறார்.
இரண்டரை மணி நேரத்துக்குள் ஏராளமான கிளைக் கதைகள், உதயநிதி அக்கா சாயாசிங், மாமா சண்டை, சேர்த்து வைத்தல் ஒரு ட்ராக்; மாமாவுக்கும் அவருடைய சித்தப்பாவுக்கும் இடையே நடந்த ஜாமெண்ட்ரி பாக்ஸ் (உண்மைதான் சார்) சண்டையினால் ஏற்பட்ட பிரிவை ஃபெவிகால் போட்டு ஒட்டவைப்ப இன்னொரு ட்ராக்; நயனை ஏமாற்றும் அவளுடைய வக்கிர நண்பனிடம் இருந்து நயனை உதயநிதி காப்பாற்றும் மூன்றாவது ட்ராக்; முக்கியமான நயன் - உதயநிதி காதல் ட்ராக்குக்கு வருவதற்குள் மூச்சு முட்டிவிடுகிறது... அப்பாடா! பழைய எம்.ஜி.ஆர். படப் பாணியில், நயனைத் தொட்டும் தொடாமலும் காதல் ஸ்டெப்ஸ்.
யார் வில்லன் என்று நாம் குழம்புவதைவிட, டைரக்டர் எஸ்.ஆர். பிரபாகரன் ரொம்பக் குழம்பிப்பார் போலிருக்கிறது. அப்பாவுக்கு அடங்கிய பிள்ளை, காதலித்தால் தப்பில்லை என்று சொல்வதற்குள் இரண்டரை மணி நேரம் காணாமல் போய் விடுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் மெலடிகளையும் நயனின் அசத்தல் அழகையும் மட்டுமே நம்பி கதிர்வேலன் காதல் நகர்கிறது. சந்தானத்தின் ஒன் லைன் ஜோக்குகளும் அவ்வப்போது கண்ணாடியைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் மேனரிஸமும் கொஞ்சம் ஆறுதல்.
இது கதிர்வேலன் காதல் - நயன்தாரா ரசிகர்களுக்கு!